ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க பிழைச்சுக்கிட்டாங்க. மம்போவோட தும்பிக்கையில ஒரு குட்டிப் பூனை தொத்திக்கிட்டு, மியா, மியான்னு கத்திக்கிட்டே இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பூனக்குட்டிய பத்திரமா வளத்தாங்க.
அவங்க சாப்பிடற தென்னை ஓலையும், வாழைப்பழமும் அந்தப் பூனைக்குப் பிடிக்கல. அது சாப்பிடாமலேயே மெலிஞ்சு போச்சு. அதனால மியாவ்னு கத்தறதுக்குக் கூட பலமே இல்ல. அதனால ஜம்போ தினமும் ஒரு பாக்கட் பால் வாங்கிட்டு வந்து காலைல பாதி, சாய்ங்காலம் பாதி பால் குடுத்தாரு.
பால் குடிச்சதுக்கு அப்புறமா பூனைக்குட்டி ரொம்ப குறும்பு பண்ணி விளையாடிட்டே இருக்கும். ஜம்போவுக்கு மேல ஏறி தும்பிக்கை வழியா சறுக்கி விளையாடும். மம்போவோட வாலப் பிடிச்சுத் தொங்கிட்டே இருக்கும். ரெண்டு பேரோட காது மேல உக்காந்து ஊஞ்சல் ஆடற மாதிரி ஜாலி பண்ணிக்கிட்டே இருக்கும். ஆனா ஜம்போவுக்கும் மம்போவுக்கும் இந்தப் பூனை எங்கே இருக்குதுன்னே தெரியாது. அவங்க தோலும் தடிப்பா இருக்கும். பூனையும் ரொம்ப குட்டியா இருந்தது. அதனால பூனை முதுக்கு மேல இருக்குதா இல்லன்னா வேற எங்கேயாச்சும் போயிருச்சான்னு தெரியாமப் போயிரும்.
ஒரு நாள் ஜம்போ பால் வாங்க ஊருக்குப் போனப்போ அதுக்கு மேல உக்காந்து பூனை போச்சுது. பால் வங்கறப்போ தும்பிக்கை வழியா சறுக்கிக்கிட்டே, பால் பூத்துக்குள்ள போயிருச்சு. ஜம்போ அதக் கவனிக்கவே இல்ல. உள்ளே போன பூனக்குட்டி அங்கே சிந்தி இருந்த பாலக் குடிச்சுக்கிட்டு அங்கேயே தூங்கிருச்சு.
மம்போ கிட்ட “பூனைய எங்கே?”ன்னு ஜம்போ கேட்டது. எனக்குத் தெரியாது. “உங்க மேலத் தான் உக்காந்து இருந்தான்”ன்னு மம்போ சொல்லிருச்சு. “ஐயையோ”ன்னு கத்திக்கிட்டே ரெண்டு பேரும், காட்டுக்குள்ளயும், ஜம்போ பால் வாங்கப் போன வழியிலேயும் தேடிப் போனாங்க. அதுக்குள்ள தூங்கி முழிச்ச பூனக் குட்டி மியாவ் மியாவ்னு கத்திக்கிட்டே இருந்தது. ரெண்டு தெரு நாய்கள் அந்த பால் பூத்த சுத்தியே வந்துக்கிட்டு இருந்ததுங்க.
அந்த ஊருல இருந்த எல்லார் கிட்டயும் ஜம்போ “ஒரு பூனக் குட்டியப் பாத்தீங்களா?” ன்னு கேட்டுக்கிட்டே போச்சுது. அவங்க, “பூனையோட பேரு என்ன”ன்னு கேட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் பூனக்குட்டியோட பேரு தெரியவே இல்ல. “ம்… குட்டிப் பூன” அப்படின்னு மம்போ சொன்னதும், எல்லாரும் சிரிச்சுட்டாங்க, “பூனக்குட்டி பேரு, குட்டிப் பூனையாம்” அப்படின்னு ஒரு சின்னப் பையன் சத்தமா சொல்லிட்டு சிரிச்சான். “யாரும் சிரிக்காதீங்க. நாங்க, வருத்தமா இருக்கோம். கோபம் வந்தா மம்போ இங்கே இருக்கற மரத்தை எல்லாம் புடுங்கிப் போட்டுருவா” அப்படின்னு ஜம்போ சொல்லிருச்சு. எல்லாரும் சேந்து தேடினாங்க.
ஒரு சின்னப் பையன் ஓடி வந்து, “பால் பூத்துக்குள்ள ஒரு பூனச் சத்தம் கேக்குது. நம்ம ஊரு சொறி நாயும் பொறி நாயும் பால் பூத்த சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குதுங்க”ன்னு சொன்னான். எல்லாரும் அங்கே ஓடிப் போய் பூனக்குட்டியக் காப்பாத்தினாங்க. பூனக்குட்டி எல்லார் கிட்டயும் “என்ன மன்னிச்சுக்கோங்க”ன்னு அழுதுகிட்டே சொல்லிச்சு. ஜம்போ ஊருல இருக்கற எல்லாருக்கும் நன்றி சொல்லிட்டு, பூனக்குட்டிய தும்பிக்கையில சுருட்டி வச்சுக்கிட்டுப் போச்சுது.
வழியில போறப்போ இந்தப் பூனக்குட்டிக்கு என்ன பேரு வைக்கலாம்னு ஜம்போவும் மம்போவும் யோசிச்சுக்கிட்டே போனாங்க. புஸ்ஸி, ஜாக்கி, சிட்டி, அப்பு, அப்படின்னு எந்தப் பேருமே மூணு பேருக்கும் பிடிக்கல. “இவன் எங்கே இருக்கான்னு நமக்கு டவுட் வறதுனால இவன் பேரு, டவுட் தாமஸ்” அப்படின்னு மம்போ சொல்லிருச்சு. ஆனா டவுட் பண்றவன் பேரு தான தாமஸ்? இந்தப் பூனக்குட்டி டவுட் படவே இல்லியே? நமக்குத் தானே டவுட் வந்தது?” அப்படின்னு ஜம்போ கேட்டுச்சு. “நான் சொன்னா சொன்னது தான்” மம்போ கோபமா சொல்லிட்டு ஒரு சின்ன மரத்தப் பிடிச்சு அசைச்சுது. “சரி சரி அதே பேர வச்சிறலாம். மரத்த மட்டும் புடுங்கிடாதே” அப்படின்னு ஜம்போ சொல்லிச்சுது. “எனக்கு இந்த பேரு பிடிக்கல” ன்னு பூனக்குட்டி ஜம்போ காதுக்குள்ள சொல்லிப்பாத்துது. “அவளுக்கு கோபம் வந்துச்சுதுன்னா, காட்டுல மழையே வராது. ப்ளீஸ் இந்தப் பேரு நல்லா இருக்குதுன்னு சொல்லு” அப்படின்னு ஜம்போ கெஞ்சிக் கேட்டுக்கிச்சு.
“அவங்களுக்கு கோவம் வந்தா, ஏன் மழை வராது?” ன்னு தாமஸ் கேட்டது. “மம்போவுக்கு கோபம் வந்தா மரத்தை எல்லாம் புடுங்கிப் போட்டுறும். மரத்தப் புடுங்கிட்டா, மழையே வராது. மழை இல்லன்னா எங்களுக்கு குளிக்க தண்ணி கிடைக்காது. உனக்கு குடிக்கத் தண்ணி கிடைக்காது” அப்படின்னு ஜம்போ சொல்லிருச்சு. “எனக்கு மழையே பிடிக்காது. அப்புறமா சுனாமி வந்தா என்ன மாதிரி நிறைய பேரு அப்பா அம்மாவ விட்டுப் பிரிஞ்சிருவாங்க இல்லியா?” அப்படின்னு தாமஸ் கேட்டது. “மரங்கள் இருக்கற காடு எல்லாத்தையும் அழிக்கறதுனால தான் மழை பெய்யாமப் போகும், சில இடத்துல அதிகமா மழை பெய்யும். சுனாமியும் வரும்.”
“தாமசுக்குப் பேரு வச்சாச்சு, இனிமே அவனுக்கு மணி கட்டி விடணும்” அப்படின்னு மம்போ சொல்லிச்சுது. “ஏன்?”அப்படின்னு தாமசும், ஜம்போவும் கேட்டாங்க. “அப்பத் தான் தாமஸ் எங்கே இருக்கான் அப்படின்னு நமக்குத் தெரியும்” ன்னு சொல்லிட்டு மம்போ சமையல் செய்யப் போயிட்டாங்க. தாமசும் ஜம்போவும் பக்கத்து ஊருக்குப் போய் ஒரு நகைக் கடையில போய் நாலு சின்ன மணி வாங்கிட்டு வந்தாங்க. அது கொலுசுல போடுற மணி.
அவங்க சமையல் பண்ற எடத்துல ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது. அங்கே தான் சமையலுக்கு வேண்டிய எல்லா சாமான்களும் வச்சிருப்பாங்க. அங்கே நிறைய எலிகள் இருந்தது. தாமஸ் வர்ற சத்தம் கேட்டு எல்லாரும் ஓடிப் போயிருவாங்க. ஜெரால்ட்ன்னு ஒரு குட்டி எலி மட்டும் நின்னு “அது என்ன சத்தம்? அது யாரு அப்படின்னு பாக்கலாம்”னு அம்மா எலிக்கிட்ட கேட்டது. அம்மா எலி ஜெரால்ட பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருச்சு. “பூனை கிட்ட மாட்டுனா நீ எலி இல்ல, காலி தான்” அப்படின்னு கோபமா சொல்லிருச்சு.
அதுல இருந்த ஜெரால்டுக்கு மணி சத்தம் எங்கே இருந்து வருது, அதக் கட்டிக்கிட்டு இருக்கற பூனை எப்படி இருக்கும்னு பாக்கணும்னு ஆசையா இருந்தது. அதுக்கு முன்னால அது ஒரு பூனையப் பாத்ததே இல்ல. அப்புறமா எந்த எலியையும் பூனை சாப்பிட்டதையும் அது பாக்கவே இல்ல. அதனால அதுக்கு எந்த பயமும் இல்ல.
ஒரு நாள் மணிச் சத்தம் கேட்டப்போ, அம்மா அப்பா எலி எல்லாம் வெளியப் போயிருந்தாங்க. ஜெரால்ட் வெளிய வந்து தாமசப் பாத்ததும் அதுக்கு சிரிப்பா வந்திருச்சு. “பூனையோட மியாவ் சத்தத்துக்கும் மணியோட ஜில் ஜில் சத்தத்துக்கும் பொருத்தமே இல்ல” அப்படின்னு சத்தமா சொல்லிருச்சு. “என் பேரு பூன இல்ல, தாமஸ்” அப்படின்னு தாமஸ் சொன்னதும், “என் பேரு ஜெரால்டு, என் பேரு எலி இல்ல” ன்னு ஜெரால்ட் சொல்லிட்டே ஷேக் ஹேண்ட் குடுத்துச்சு. அதுல இருந்து அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்சா மாறிட்டாங்க.
அம்மாவும் அப்பாவும் “பூனை கூட சேரக் கூடாதுன்”னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னாங்க. “சரி நான் பூன கூட சேர மாட்டேன்”னு ஜெரால்ட் சொல்லிட்டுது. ஆனா “நான் பூன கூட விளையாடலியே, தாமஸ் கூடத் தானே விளையாடுறேன்” அப்படின்னு மனசுக்குள்ளேயே சொல்லிச்சு. ரெண்டு பேரும் விளையாடிக்கிட்டே ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. வாட்ஸ் அப்ல அவங்க ரெண்டு பேரும் எடுத்துப் போட்ட செல்ஃபி ரொம்ப ஃபேமசா ஆயிருச்சு. அது அம்மா எலிக்கும் அப்பா எலிக்கும் தெரிஞ்சு போச்சு. அவங்க ஜெரால்டையும் கூட்டிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. பூன கூட ஃப்ரெண்டா இருக்கற எலி இந்த ஊர்ல இருக்கக் கூடாதுன்னு எல்லா எலிகளும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.
ஜெரால்டும், தாமசும் ரொம்ப சோகமா இருந்தாங்க. ஒரு நாள் ரெண்டு பேருக்கும், வால்ட் டிஸ்னின்னு ஒருத்தர் கிட்ட இருந்து மெசேஜ் வந்தது. அதுல “உங்க ரெண்டு பேர் செல்ஃபியும் பாத்தோம். உங்க ரெண்டு பேருக்கும் வேலை ரெடியா இருக்குது. ஓ கே சொன்னா உடனே ஏரோப் ப்ளேன் அனுப்பி வைக்கிறேன்”னு அவர் எழுதியிருந்தார். காலேஜுக்குப் போகமலேயே வேலைக்குப் போயிறலாம்னு வீட்டுல ஹாப்பியா அனுப்பி வைச்சாங்க. இவங்க ரெண்டு பேரும் ஓகேன்னு பதில் அனுப்பிட்டாங்க. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் ஏரோப் ப்ளேன் வேண்டாம், ஒரு ஹெலிக்காப்டர் போதும்னு சொல்லிட்டாங்க.
தாமஸ் மணியக் கழட்டிட்டான், அவனுக்கு டாம்னு பேரு வச்சாங்க. ஜெரால்டுக்கு ஜெர்ரின்னு பேர மாத்திட்டாங்க.