#cshec10
ஆன்ட்ரூ உள்ளுக்குள் ஆடிப் போனாலும் வெளியே தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டான். அப்போது வெளியே கேட் திறக்கும் சத்தமும் அருமைநாயகமும் இன்னொருவரும் பேசிக் கொண்டே உள்ளே வரும் சத்தம் கேட்டது. சரியாக சான்ட்ரா (அல்லது அவளுக்குள் இருக்கும் ஆவி) சொன்னது போல கழுத்தில் ஸ்டெத் அணிந்த ஒருவர் உள்ளே வந்தார். உடன் நர்ஸ் போல ஒரு பெண்மணியும் வந்தார்.
சான்ட்ரா மீண்டும் அலமாரியைப் பார்த்துக் கொண்டிருக்க, டாக்டர் எல்லா விபரங்களையும் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த நேரத்திலேயே நர்ஸ் சான்ட்ராவின் ப்ளட் ப்ரஷ்ஷரை பார்த்துக் கொண்டிருந்தார். வெல்க்ரோ பிரிக்கப்படும் போது வந்த சர்ர்ர்ர் என்ற சத்தம் டாக்டரை வாய்பார்த்துக் கொண்டிருந்த ஆன்ட்ரூவைத் திடுக்கிட வைத்தது. ஒரு சின்ன குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார் டாக்டர். நர்ஸ்ஸிடம் ஏதோ மருந்தின் பெயரைச் சொல்ல அவர் கொண்டு வந்திருந்த ஒரு பெட்டியில் இருந்து மாத்திரைகளை எடுத்து ஒரு கவரில் போட்டு, காலை, மாலை, சாப்பாட்டுக்கு முன் / பின் என்ற கட்டங்களில் டிக் அடித்துக் கொண்டிருந்தார்.
டாக்டர் கேட்ட எந்தக் கேள்விக்கும் சான்ட்ரா பதிலே சொல்லவில்லை.
முகக்கவசம் அணிந்திருந்த அந்த நர்ஸ் சான்ட்ராவுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேன்னரை அவள் நெற்றிக்கு நேராகப் பிடிக்கும் போது தான் சான்ட்ரா கொஞ்சம் ஆக்ஷன் காட்டினாள். தெர்மல் ஸ்கேன்னரும் அந்த நர்ஸின் முகக்கவசமும் வாசல் பக்கம் போய் விழுந்தன. “ஊசி போடப் போறீங்களா? பக்கத்துல வந்து பாரு.” என்று மிரட்டினாள். இப்போது பழைய கரகரப்பும் பேஸ் குரலும் கொஞ்சம் மிதமாக இருந்தன.
டாக்டர் நர்ஸிடல் லேசாக தலையை ஆட்டி சைகையில் ஏதோ சொன்னார். சான்ட்ராவின் அப்பாவின் அருகே போய் அவருக்கு மட்டும் கேட்பது போல ஏதோ சொன்னார். அவரும் தன் மனைவியிடம் மெதுவாகப் போய் ஏதோ சொன்னார்.
எல்லாம் சட்டென்று கண் இமைப்பதற்குள் நடந்துவிட்டது. அம்மா சான்ட்ராவின் கால்களைப் பிடிக்க, அப்பா அவளது தோள்களை அழுத்தி அவளைப் படுக்க வைக்க, நர்ஸ் வேகமாக ஊசி மருத்தை சிரின்ச்சுக்குள் ஏற்றி வந்து சட்டென்று அவளது வலது தோளில் குத்தி மருந்தை ஏற்றிவிட்டார். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அனத்திக் கொண்டிருந்த சான் ட் ரா அமைதியே உருவாகத் தூங்கத் துவங்கிவிட்டாள்.
“ஆன் லைன் க்ளாஸ், தனியா இருக்கறது, அப்பா-அம்மா கூட உரசல், சோஷியல் மீடியா அடிக்ஷன் எல்லாம் சேந்து இந்த மாதிரி பிள்ளைங்களுக்கு அதிகமா மன அழுத்தம் உருவாகுது. இப்போதைக்கு ஊசி போட்டுருக்கேன். மாத்திரை ராத்திரி மட்டும் குடுங்க. நாளைக்கு என்னோட க்ளினிக் வாங்க. தேவைப்பட்டா அட்மிஷன் போடலாம். அப்பா அம்மா ரெண்டு பேரும் வரணும்” என்றார் டாக்டர்.
“டீ சாப்டுட்டுப் போங்க டாக்டர்” என்று லீலா அத்தை சொல்லவும் ஆன்ட்ரூவுக்கு சூழ்நிலையையும் மீறி நாக்கில் நீர் சுரக்கத் துவங்கியது. அவனது டீ அடிக்ஷனுக்கு எப்படிப்பட்ட மட்டமான டீயும் போதுமானது. ஆனால் அத்தை வீட்டு டீ நிச்சயமாக அவனுக்கு ஃபாரின் சரக்கு மாதிரி. நிறம், மணம், திடம் இவற்றுக்காகவே, ஊட்டி, மாஞ்சோலை, அஸ்ஸாம், கொழும்பு தேயிலைகளை ஒருவிதமான மிக்ஸிங்கில் அத்தை வைத்திருப்பார்கள்.
“சாரி, நீங்க அவசரமாக் கூப்பிட்டதுனால தான் ஓடி வந்தேன். ஓ பி பாக்கணும். அப்புறமா என்னோட க்ளினிக்ல இன் பேஷண்ட்ஸப் பாக்கப் போகணும்” நடந்து வெளியே போய்க் கொண்டே டாக்டர் சொன்னார்.
எப்படியும் கேப்டன் அண்ணன் வீட்டுலயாச்சும் டீ குடிச்சிட்டுத் தான் போகணும். லாக்டவுனில் டீ கிடைக்காமல், வீட்டிலும் டீ கிடைக்காமல் அவன் படுகிற பாடு அவனுக்குத் தான் தெரியும். அவனாலும் பல தடவைகள் முயற்சித்தும் டீ போட முடியவில்லை. அம்மா கொடுக்கும் கபசுரக் குடிநீரைவிட கொஞ்சம் தான் நன்றாக இருக்கும் அவன் போடும் டீ.
“அத்த நான் போய்ட்டு நாளைக்கு வர்றேன். எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க சரியா?” என்று மெதுவாக எஸ் ஆனான் ஆன்ட்ரூ.
“அண்ணன், பேய், பில்லி சூனியம், எல்லாம் உண்மையா? கிறிஸ்தவங்களுக்கு பேய் பிடிக்கவே செய்யாதுன்னு இவ்வளவு நாளும் நினைச்சிட்டு இருந்தேன்.” நடந்தவைகளை கேப்டனுக்கு விளக்கிய பின் கேட்டான் ஆன்ட்ரூ.
“மேல் நாட்டுல பேய் பிசாசு நம்பிக்கை பொதுவா இல்ல. அவங்க எல்லாத்தையும் அறிவியல் மூலமா நிரூபிச்சாத்தான் நம்புவாங்க. அவங்களப் பொறுத்தவரைக்கும் எல்லாமே மனநிலை அதாவது மென்டல் பிரச்சனைகள் தான். நம்ம நாட்டுல அதுக்கு நேரா தலைகீழா நம்புவாங்க. எல்லாமே பிசாசு தான். அல்லது கெட்டகாலம் பிடிச்சிருக்குன்னு சொல்வாங்க. நம்ம கிறிஸ்தவங்க மேல் நாட்டு பாதிப்பு அதிகமா இருக்கறதுனால பேய் பிசாசுல்லாம் சும்மா. பொய். அப்படி ஒண்ணும் கிடையாது. கிறிஸ்தவங்கள பேய் ஒண்ணுமே செய்யாதுன்னு சொல்வாங்க.” நாமளே அனுபவிக்கறப்ப தான் நேரடியாவோ இன்டைரக்டாவோ பிசாசு பத்தி நமக்கு தெளிவாத் தெரியும்.”
“அதுல்லாம் இருக்கட்டும். சான்ட்ராவுக்கு சரியாயிருமாண்ணே?”
“சரியாகணும். சரியாகணும்னு ஜெபம் பண்ணுவோம்.”
“அண்ணே உங்களுக்குத் தெரிஞ்ச பேய் விரட்டுற ஊழியக்காரங்களத் தெரியுமா?”
“அவசரப்படாத ஆன்ட்ரூ. எனக்கு முழுசா தடை போட்டுருக்காங்க. உனக்கு பாதி தடை அந்த வீட்டுல. நாம அடக்கி தான் வாசிக்கணும்.”
“அண்ணே லீலா அத்த நாம என்ன சொன்னாலும் கேப்பாங்க.”
“டேய் மாமாவத் தாண்டி அந்த வீட்டுல யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு உனக்குத் தெரியும் தானே? அவரு ஹன்ட்ரட் பெர்சன்ட் ஏத்தியிஸ்ட். ஜெபம், ஊழியக்காரனு கூட்டிட்டுப் போனா
வந்தவங்களுக்கும் கூட்டிட்டு போனவங்களுக்கும் என்ன மரியாத கிடைக்கும்னு உனக்கு தெரியும்.”
“இப்ப என்ன செய்யறது அண்ணே?”
“ஜெபம் பண்ணுவோம். நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.”
ஆன்ட்ரூ இப்போது டீயை மறந்துவிட்டான். இருவரும் ஆன்ட்ரூ வீட்டுக்கே வந்துவிட்டார்கள்.
உள்ளே நுழையும் போதே அம்மா சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார், “நான் அந்தக் காலத்துலயே அடிச்சுக்கிட்டேன். ஊழியக்காரர் கிட்ட கூட்டிட்டுப் போவோம்னு. இப்பப் பாருங்க, லீலா கிட்ட இருந்தது இப்ப அவ மகளுக்கும் வந்துருச்சு. நான் சொல்றத யார் தான் கேக்கறாங்க.”
“நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா? அவங்க கிட்ட என்ன நடந்ததுன்னு கேப்போம்” என்று பேச்சைத் திருப்பினார் அப்பா. ஆன்ட்ரூவுக்கு “லீலா அத்தைக்குமா?” என்ற கேள்வியும் விபரம் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் பொங்கியது. அம்மாவைத் தனியே கூட்டிக் கொண்டு சமையலறைக்குப் போனான். டீயும் கிடைக்கும், பதிலும் கிடைக்கும்.
“இருடா செல்லா என்ன சொல்றான்னு கேட்டுட்டு வர்றேன்”
“எல்லாத்தையும் நான் சொல்றேன் அம்மா.