“குணா மனநல மையம்” டாக்டர். ரஸ்ஸல் ராஜ் என்ற போர்டு பெரிதாக பளிச் என்று தெரிந்தது. ஆன்ட்ரூ ஆபிரகாம் சாரின் பைக்கில் இருந்து இறங்கினான். லீலா அத்தையிடம் இருந்து அறை எண்ணையும், மாமா வராத நேரத்தையும் தெரிந்து கொண்டு ஆபிரகாம் சாரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் அவன்.
உள்ளே அறையில் சான்ட்ரா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்து மேசையில் ஃப்ளாஸ்க், பழங்கள், மருந்துகள் வைக்கப்பட்டிருந்த ட்ரே, மாற்றுத்துணிகள் இருந்த பைகள் என்று பரிதாபமாக இருந்தது. லீலா அத்தை தலை கலைந்து, கண்கள் வீங்கி பாவமாக இருந்தார்கள்.
“வாங்க சார்” என்று அழைத்தபடியே ஒரு நாற்காலியை ஆபிரகாம் சாருக்கு இழுத்துப் போட்டுக் கொண்டு நின்று கொண்டார்கள்.
“உக்காரு” என்று அங்கிருந்த நீள பெஞ்ச்-ஐக் காட்டினார்கள் ஆன்ட்ரூவுக்கு.
“டாக்டர் என்ன சொன்னாரு?” எல்லோரும் கேட்கின்ற கேள்வியைத் தான் ஆபிரகாம் சாரும் கேட்டார்.
“எல்லாமே மனசுல உள்ள அழுத்தம் தானாம். கரண்ட் குடுத்தாங்க. மாத்திர குடுத்திருக்காங்க. இன்னும் ஒரு வாரமாவது இருக்கணுமாம். டாக்டர் நல்லா கவனிச்சு அப்புறமாத்தான் சொல்வாராம்.”
“பாப்பா நார்மலா பேசுறாளா, ஒழுங்கா சாப்பிடுறாளா?”
“ஆமா. ஆனா முன்ன மாதிரி கலகலப்பா இல்ல. தூங்கி வழிஞ்சுட்டே இருக்கறா?”
“ஆமாங்க அவளுக்கு குடுக்குற மருந்து அப்படி. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இந்த மாதிரி மருந்து எடுத்துத்தான் எங்க சர்ச்ல ஒரு போலீஸ் ஆஃபிசர் பொண்ணு பீப்பாய் மாரி பெருத்துப் போயிட்டா.”
“அப்படித்தான் சொல்றாங்க. ஆனா என்ன செய்யணும்னே தெரியலியே. கர்த்தாவே இப்படி ஒரு சோதனை ஏன் இவளுக்கு.” லீலா அத்தை அழத்துவங்கிவிட்டார்கள்.
“பாருங்க சிஸ்டர், நான் சாதுகிட்ட பேசி வச்சிருக்கேன். அவர் ஜெபம் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லிருக்காரு. இதே மாதிரி உங்க வீட்டுக்காரர் இல்லாத நேரமா, டாக்டர் விசிட் இல்லாத நேரமா கூட்டிட்டு வந்து ஜெபம் பண்ணுவோம். கர்த்தர் பாத்துக்குவாரு.”
“ம்” என்று முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டே ஃப்ளாஸ்க் பக்கமாக லீலா போகும் போதே, ஆபிரகாம் சார் முன் ஜாமீன் கேட்பது போல, “ஒண்ணும் வேண்டாம். நாங்க கிளம்புறோம். ஆன் ட் ரூ கிட்ட நான் ஃபோன்ல விபரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். சாது எப்போ வர்றார்னும் சொல்லிடுறேன். சரியா?” என்று ஆன் ட் ரூவையும் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினார். அப்போது தான் கிராமத்திலிருந்து சான்ட்ராவின் சித்தப்பா பிரம்மநாயகம் ஒரு சாமியார் போன்ற ஆளுடன் உள்ளே நுழைந்தார். ஆன் ட் ரூவைப் பார்த்து புன்னகைத்தார் பிரம்மநாயகம். “நல்லாருக்கியாப்பா?” என்றார்.
“ஆமா மாமா” என்றான் ஆன்ட்ரூ.
இரண்டு வினாடிகளில் ஆன்ட்ரூ தன் மூளை என்னும் ப்ராசசரை ஓட விட்டு சில கால்குலேஷன்களை செய்து “சார் நீங்க போங்க. நான் அப்புறமா வர்றேன்” என்று சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மீண்டும் அறைக்குள் போனான்.
உள்ளே அந்த மந்திரவாதி எலுமிச்சம் பழம், குங்குமம் என்று பையிலிருந்து வெளியே எடுத்து வைத்து, கத்தியால் எலுமிச்சம் பழத்தை அறுத்து வைத்தார்.
“ஊர்லன்னா கூவாத சேவலாப் பாத்து அறுத்திருக்கலாம். சரி உங்க அண்ணன் ஒத்துக்க மாட்டாருன்னுட்டீங்க. சரி இப்போ ஆக வேண்டியதப் பாப்போம்.”
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற லீலா அத்தையைப் பார்த்து பிரம்ம நாயகம் மெதுவாகச் சொன்னார், “எல்லாம் நம்ம பிள்ளை நல்லதுக்குத் தான். உம் புருஷன் எந்த சாமியையும் நம்ப மாட்டான். பிள்ளையப் பாரு. எப்படி துருதுருன்னு வர்றவ இப்படி படுத்திருக்கிறா? எனக்கு எல்லா சாமியும் ஒண்ணு தான். எல்லா சாமியும் மக்கள் நல்லா இருக்கறதுக்குத் தான் வழி வச்சிருக்காங்க. இவரு கூட வழியில் மாதா கோயில்ல இந்தப் பையை வச்சி கும்புட்டுட்டு தான் வந்திருக்காரு. கர்த்தருக்கு நம்ம நிலைமை தெரியும். நானும் எங்க குல தெய்வத்துக்கு ஒரு பூசை வைக்கறதா வேண்டிட்டு இருக்கேன். எல்லாம் நல்லா நடக்கும்.” லீலா அத்தையைப் பேசவே விடவில்லை.
“சாமி வேற எதுவும் வேணுமா?” என்று அவர் சாமியாரை நோக்கித் திரும்பினார்.
“டேய் நம்ம இப்படில்லாம் செய்யக்கூடாது. உங்க மாமாவுக்கும் இதெல்லாம் பிடிக்காது.” லீலா அத்தை ஆன்ட்ரூவிடம் சத்தத்தைக் குறைத்துச் சொல்லவும், அவனும் சின்ன மாமாவை நோக்கிப் போனான்.
“தம்பி ஓரமாப் போய் நில்லுங்க. அம்மா நீங்க வேணும்னா வெளில நில்லுங்க.” சிறிது கடுமையாகச் சொன்னார் மந்திரவாதி.
இப்போது வெள்ளை நிற சாம்பலை ஒரு சிட்டிகை எடுத்து சான்ட்ராவின் வலது கையின் பின்புறமாகப் பூசினார், “நிறைய தூவினா கண்டு பிடிச்சிருவாங்க” காரணத்தையும் சொல்லிவிட்டார் சாமியார்.
அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த சான்ட்ரா சட்டென்று தலையைத் திருப்ப நேர் எதிரே ஆன்ட்ரூ தான் நின்றிருந்தான். “டேய் என்ன அமைதியா இருக்க விட மாட்டியா? நான் கேட்டத மட்டும் வாங்கிக் குடுத்துரு. பேசாம போயிருவேன்.” என்று கத்தவும் ஆன்ட்ரூ திடுக்கிட்டு சுவரில் ஊன்றியிருந்த கையை எடுக்க கீழே விழுந்துவிட்டான். மந்திரவாதி கோபமாக கையைக் காட்ட பிரம்மநாயகம் ஆன்ட்ரூவை வெளியே இழுத்து விட்டுவிட்டு கதவைப் பூட்டினார்.
“இது வரைக்கும் இந்த மாதிரி எதுவும் நம்ம குடும்பத்துலயே நடந்தது இல்ல. மந்திரவாதியக் கூட்டிட்டு வந்திருக்காரே. இப்போ உங்க மாமா கிட்டயும் சொல்ல முடியாது. அவங்களுக்கு நடுவுல பகையாயிரும். இவரையும் திட்ட முடியாது. என்ன பண்றதுன்னே தெரியல.” அத்தை சொன்னது எதுவும் காதில் விழவில்லை. “டேய்” அந்த வித்தியாசமான குரலும் சான்ட்ராவின் முறைப்புமே தான் அவனுக்குள் ஒலியும் ஒளியுமாக திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. அவன் கால்களும் கைகளும் தளர்ந்து சட்டென்று தரையிலேயே உட்கார்ந்துவிட்டான்.
எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை. இருவரும் வெளியே வந்தார்கள். மந்திரவாதி கீழே படிகளில் இறங்கிப் போக, பிரம்மா மாமா மட்டும் லீலா அத்தையிடம் சொன்னார், “இது எங்க பக்கத்து குடும்ப சாபம், எங்க ஊரு முந்திரித் தோட்டத்து இசக்கி ஒண்ணு பிடிச்சிருக்கு. அப்புறமா யாரோ வசியம் வச்சிருக்காங்க. உங்க வீட்டுல மந்திரிச்ச பொருள் இருக்குதாம். அதையும் அண்ணன் இல்லாத நேரம் வந்து எடுக்கணும். சான்ட்ராவோட தலமாட்டுல ஒரு சின்ன தாயத்து வசிருக்கோம். கையில கட்டி விட்டா தெரிஞ்சுரும். நான் உங்களுக்கு அப்புறமா ஃபோன் பண்ணுறேன்.” அவரும் நகர்ந்தார்.
ஆபிரகாம் சார் படியேறி வந்து கொண்டிருந்தார். “ஏதோ பிரச்சனன்னு தான் நான் காத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் பஸ் கிஸ்ஸு ஒண்ணும் கிடையாது. லாக்டவுனுல வீட்டுக்கு எப்படிப் போவன்னு நினைச்சு தான் வெளியவே நின்னுக்கிட்டு இருந்தேன். அந்த ஆளு என்ன மந்திரவாதியா?” ஆன்ட்ரூவை நோக்கி கேட்டபடியே அத்தையை நோக்கித் திரும்பினார் சார்.
“இங்க பாருங்க சிஸ்டர். சைக்யாக்ட்ரிக் ட்ரீட்மென்ட் கூட பரவால்ல. சைட் எஃபக்ட் தான் இருக்கும். ஆனா மந்திரவாதம் எல்லாம் ரொம்ப மோசமானது. கர்த்தருக்கு கொஞ்சம் கூட பிரியம் இல்லாதது.”
அத்தை வேகமாக ஓடிப் போய் சான்ட்ராவின் தலையணைக்குக் கீழே இருந்த தாயத்தை எடுத்து டாய்லெட்டில் போட்டு ஃப்ளெஷ் பண்ணிவிட்டு வந்தார்கள். இப்போது அறையின் வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஆபிரகாம் சார், “எப்படியாச்சும் நாளைக்குள்ள ஊழியக்காரர கூட்டிட்டு வர்றேன்” என்று திரும்பிப் பார்த்தால் ஆன்ட்ரூ அதே இடத்திலேயே பேயறைந்தது போல உட்கார்ந்திருந்தான்.
அருகில் வந்த ஆபிரகாம் சார் அவன் கையைப் பிடித்து தூக்கும் போது, “என்ன தம்பி இப்படி கொதிக்குது? காய்ச்சலா? பயந்துட்டியா?” என்றார். கைத்தாங்கலாக அவனை கீழே படியிறக்கினார்.