“என்னங்க, சான்ட்ராவோட ரெண்டாவது ஃபோன்ல ஏதோ ப்ரச்சன இருக்குதுன்னு நினைக்கிறேன். ஆன் பண்ணி வைக்கட்டுமா?”

“யாராவது கூப்பிட்டு ரொமான்டிக்கா பேசப் போறான். உன் இஷ்டம்.”

“ரிங் வந்தா நீங்க எடுங்க.”

“ஆம்பள பேசறதக் கேட்டதுக்கு அப்புறமும் பேசுவாங்கற?”

“நீங்க வேற எதையோ நினைச்சுக்கிட்டு அப்படித்தான் இருக்கும்னு பேசறீங்க.”

“நமக்குத் தெரியாதா? எத்தன கத கேட்டுருக்கோம் இந்த மாதிரி.”

திவ்யா அந்த ஃபோனை ஆன் பண்ணவும், டிங், டிங் என்று சுமார் இருபத்தைந்து வாட்சப் நோட்டிஃபிக்கேஷன் மணிகள் வேகமாக வரிசையாக ஒலித்தன.

அதை வாங்க வந்த அலெக்சான்டரைத் தடுத்து, “நீங்க கேட்டா அப்செட் ஆயிருவீங்க. நானே கேக்குறேன்” என்று சொன்னபடியே மாடியில் இருந்த பால்கனியில் உட்கார்ந்து ஒன்று இரண்டு மெசேஜ்களைக் கேட்ட வேகத்தில் உள்ளே ஓடி வந்தாள்.

“அத்தான் இது ரொம்ப மோசமா இருக்கு. நீங்க உடனே எதாவது செஞ்சு ஆகணும். நம்ம வீட்டு பொம்பளப் பிள்ளையோட வாழ்க்கை வீணாப் போயிரும்” அதிர்ச்சியுடன் அந்த ஃபோனை ஆஃப் செய்ய முயற்சிக்கவும் அது ரிங் அடிக்கவும் சரியாக இருந்தது.

“ஹலோ”

“என்னடி ஆஸ்பத்திரில இருந்து வந்துட்டியா? இந்த ஃபோன் ஆஃப்லயே இருந்தது. அடுத்த ஃபோனுக்கு அடிச்சா எடுக்கவே மாட்டுக்கிற. என்ன ஆச்சு”

“உங்களுக்கு யார் வேணும்?”

ஃபோன் இப்போது கட் ஆகிவிட்டது.

ரிங் டோனைக் கேட்டு மேலே ஏறி வந்த சான்ட்ரா அந்த ஃபோனை திவ்யாவிடம் இருந்து பிடுக்க முயற்சிக்க, அவள் அலெக்சான்டரிடம் கொடுத்துவிட சான்ட்ரா ஆவேசத்துடன் அந்த ஃபோனைப் பிடுங்கப் போனாள். அலெக்சான்டர் அதைத் தன் கால்சட்டைப்பையில் போட்டு விட்டு சான்ட்ராவை தோளைப் பிடித்து அங்கிருந்த சோஃபாவில் உட்கார வைத்தான்.

“இங்கப் பாரு, எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லு. என்ன பிரச்சனைன்னாலும் சரி பண்ணி வைக்கிறேன். லாக்டவுன் முடியற வரைக்கும் நாங்க இங்கத்தான் இருக்கப் போறோம். அப்பா அம்மாவுக்கு தெரியாம பாத்துக்கலாம். சொல்லு.”

“யாரு ஹெல்ப்பும் எனக்குத் தேவையில்ல. யார் அட்வைசும் தேவையில்ல. ஃபோனக்குடு.”

“சான்ட்ரா இப்பத்தான் ஆஸ்பத்திரில இருந்து வந்திருக்க. பேசாமப் போயி ரெஸ்ட் எடு” சொல்லிக் கொண்டே கீழே இறங்கி சான்ட்ராவின் அறைக்குப் போய் அங்கே இருந்த அவள் ஃபோனையும் எடுத்துக் கொண்டு மேலே வரும் போது அம்மாவிடம் கொஞ்சம் சத்தத்தை உயர்த்தியே சொன்னான், “அம்மா சான்ட்ராவுக்கு ஸ்கூல்ல லீவு சொல்லிட்டிங்களா? கொஞ்ச நாளைக்கு ஆன்லைன் க்ளாஸ்லாம் வேணாம்.”

“டேய் ப்ளஸ் டூ படிக்கிறா. ஏற்கனவே நெறைய பாடம் மிஸ் பண்ணிருப்பா. நீ ஏன் இப்போ அவகிட்ட வந்து ப்ரச்சன பண்ணிட்டு இருக்கற?”

“சரிம்மா சும்மா கிடக்கிற அந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர செட் பண்ணிக் குடுக்குறேன். அதுல படிக்கட்டும்.”

சான்ட்ரா ஓ என்று கத்திக் கொண்டே தன் அறைக்குள் போய் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

***
ஆன்ட்ரூவின் அம்மாவும் லீலா அத்தையும் அவ்வப்போது அலைபேசியில் நெடுநேரம் குடும்பக் கதைகளையும் ஊர்க்கதைகளையும் அலசுபவர்கள் தான். இப்போது தான் இருவரின் கணவர்களும் வீட்டில் இருப்பதால் அதிகம் பேச முடிவதில்லை.

லீலா அத்தை தான் இன்று அழைத்தார்கள், “அண்ணி, நாம குடும்பத்துக்காக நல்லா ஜெபம் பண்ணணும். நீங்க வர்றீங்களா, ஜெபப்பூங்காவுக்கு போலாம்? அலெக்சான்டர் வந்திருக்கான். அவன் நம்மள கார்ல கொண்டு விட்டுட்டு அப்புறமா கூப்பிட்டா வீட்டுல விட்டுருவான். போலீசா, அது சான்ட்ராவோட மருந்து சீட்ட எல்லாம் கையில வச்சிக்குவோம். மருந்து வாங்கப் போறோம்னு சொல்லிக்கலாம். ஜெபம் பண்ணப் போறோம், அதுக்கு தடையா சாத்தான் வந்தா, பொய் சொல்லிக்க வேண்டியது தான். கர்த்தர் புரிஞ்சுக்குவார்.”

“நான் உங்கள கார்ல கூட்டிட்டுப் போய் திரும்ப விடமாட்டேன் சொல்லிட்டா?”

“நீ அதுல்லாம் சொல்ல மாட்ட, எனக்குத் தெரியும்.”

“இப்ப அது அவ்வளவு முக்கியமா?”

“எது?”

“ஜெபப்பூங்காவுக்குப் போறது.”

“நம்ம பிள்ளைக்காக, நம்ம குடும்பத்துக்காக ஜெபம் பண்றது முக்கியம் இல்லியா?”

“அத வீட்டுல இருந்தே பண்ணலாமே?”

“குதர்க்கமா பேசாத. நீ வரலன்னா, ட்ரைவர ஃபோன் போட்டு வரச் சொல்லுவேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *