அலெக்சான்டர் சி சி டிவி கேமராக்களை வீட்டைச் சுற்றி பொருத்தியது எல்லோருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது.
“ஏம்ப்பா நாம என்ன கோடிக்கோடியா வீட்டுக்குள்ள வச்சிருக்கோமா? அல்லது நாம என்ன பெரிய கவர்னர் வீட்டு பரம்பரையா?”
“நம்ம மதிப்பு நமக்கே தெரியலன்னா, நாம இந்த உலகத்துல இருக்கறதுலயே அர்த்தம் இல்லம்மா. நான் சொல்றது உங்களுக்கு அப்புறமாப் புரியும். ஊர் உலகம் நம்மப் பத்தி என்ன சொல்லும்ங்றது மதிப்பு இல்ல. கடவுள் நம்மள எப்படி பாக்குறாரு, நாம கடவுள எப்படி பாக்குறோம் அப்படிங்கறது தான் மதிப்பு.”
“ஏண்டா இது என்ன? உனக்கு எதுவும் பாதுகாப்பு வேணுமா? எதுவும் முக்கியமான ப்ராஜக்ட் எதுவும் பண்றியா?”
“ஆமாப்பா. இன்னும் கொஞ்சக்காலத்துக்கு இருக்கட்டும்.”
“லாக்டவுன் முடிஞ்சதும் எடுத்துருவியா?”
“தேவையான வரைக்கும் வச்சிருக்க வேண்டியது தான்.”
அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தால் செல்லராஜ் அழைக்கிறார் என்று அலைபேசி திரையில் காட்டியது. மெதுவாக அதை எடுத்துப் பார்ப்பது போலப் பார்த்துவிட்டு அப்பாவை விட்டு விலகி நடந்தபடியே, “கொஞ்சம் இரு ப்ரோ, நான் மாடிக்குப் போய்க்கிறேன்.”
“என்ன உங்க அப்பா பக்கத்துல இருக்காரா?”
“ஆமா, இப்பத் தான் சிசி டிவிக்காரன் வேலைய முடிச்சுட்டுப் போனான்.”
“நல்ல வேல செஞ்சிருக்கிற. கொஞ்ச காலம் அந்த நினைப்பே இல்லாம இருந்தா சான்ட்ரா மறந்து போயிருவா. ஆனா தமிழ் சினிமாவுலல்லாம் பாத்திற மாதிரி, அதிகமா கட்டுப்பாடு பண்ணினா அவ அதிகமா மனசுக்குள்ள எதிரியாயிட்டு இருப்பா. அந்தப் பையன் மேல அதிக நெருக்கம் வந்துரும்.”
“நாங்க முடிஞ்ச அளவுக்கு அவகிட்ட பொறுமையா, அன்பாத்தான் நடந்துக்கிறோம். அந்த இன்னொரு கம்யூனிக்கேஷன் சேனல் மட்டும் கட் ஆயிட்டு, அவளும் படிப்புல ஆழமா இறங்கிட்டான்னா, நல்லாருக்கும்.”
“சரி நான் ஜெபம் பண்ணிட்டு தான் இருக்கேன். என்ன ஹெல்ப்னாலும் கூப்புடு. ஆனா உங்க அப்பா இருக்கறப்போ, உங்க வீட்டுக்குள்ள வர்றது மட்டும் கஷ்ட்டம். அதான் வாராவாரம் வந்துட்டு இருக்கியே, Zoomல. அப்புறம் இதோ இப்பக் கூட எங்க வீட்டுக்குள்ள தான் எங்கூட பேசிட்டு இருக்கற.”
“ஒரு சின்ன ரிசர்ச் பண்ணிப் பாத்துட்டு இருக்கேன். சான்ட்ராவோட மூட் மாறுற நேரம் எல்லாம் என்னன்னும் பாத்துட்டு இருந்தோம். அது வடிவு வந்ததுக்கு அப்புறம் நல்லா இருந்தது. அங்க சக்தி எப்போல்லாம் துள்ளிட்டு இருந்தான்னு ந்யூஸ் கிடைச்சுது. அந்த சிசி டிவி கேமரா பேரு சுந்தர். அது வடிவு வெளில போனதுக்கு அப்புறம்னு தெரிஞ்சுது.”
“ஒனக்கு இதுக்குல்லாம் நேரம் கிடைக்குதா?”
இரண்டே நாட்களில் சக்திக்கும் சான்ட்ராவுக்கும் நடக்கும் தகவல் தொடர்பு எப்படி என்பது தெரிந்துவிட்டது. வீட்டு வேலை செய்யும் வடிவு தான் வெளியில் இருந்தும் உள்ளே இருந்தும் சின்னச் சின்ன கடிதங்களை பரிமாறும் கூரியர் என்பது தெரிந்துவிட்டது. அதுவும் சிசி டிவி கேமரா இருப்பதே தெரியாமல் இருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த கேமரா மூலமாகத் தான்.
வடிவு காலில் விழுந்து கெஞ்சினாள். “சின்னம்மா தான் உன்ன வேலைய விட்டுத் தூக்கிருவேன்னு சொன்னாங்க. அந்தப் பையனும் எங்க வீட்டுல வந்து என்னவெல்லாமோ மிரட்டுனான். அம்மா என் சம்பளத்துல தான் குடும்பம் ஓடுது. நீங்க அனுப்பிட்டீங்கன்னா…”
“நீங்க இப்போதைக்கு ஒரு மாசம் வீட்டுலயே இருங்க. சம்பளம் தந்து அனுப்புறோம். அப்புறமா உங்களுக்கு கண்டிப்பா ஒரு வழி செய்யுறோம்” வடிவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் அலெக்சான்டர்.