காலை நேரத்திலேயே, சமையலறையில் பெரிய கலாட்டா நடப்பது கேட்டது. அலெக்சான்டர் என்னவென்று போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது அது அவன் அம்மாவுக்கும் பாத்திரம் தேய்க்கும் பெண்ணுக்கும் நடந்த சாதாரணமான உரையாடல் என்பது தெரிந்தது. அம்மா அப்பாவை சத்தமாக அழைத்ததும் அவர் பதிலுக்குத் திட்டிக் கொண்டே வந்ததும், இந்த பாத்திரம் எங்க இருந்து வந்தது என்று அம்மா உதவிக்காரியிடம் கேட்பதும் தான் அந்த கலாட்டா சத்தம்.
அது ஒரு பித்தளை திருக்குச் செம்பு. அதாவது திருக்கு மூடி போடப்பட்ட ஒரு செம்பு. அதைக் கையில் எடுத்து அலெக்சான்டர் பார்த்த போது, “அமராவதி அம்மாள்” என்று கோணல் மாணலான எழுத்துக்களில் பெயர் வெட்டியிருந்தது. சத்தமாக அதை வாசித்ததைக் கேட்ட அப்பா சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அந்த செம்பு சான்ட்ராவின் அறையில் அலமாரியின் கீழ்த்தட்டில் மற்ற பொருட்களுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை விளக்கி வைக்கலாம் என்று எடுத்ததாகவும் சொன்னார் அந்தப் பெண். ஆனால் அம்மாவுக்கு சந்தேகம், “இது நிச்சயமா யாரோ கொண்டு வந்து வச்சிருக்கணும். உள்ள இருந்த சாமான்கள எல்லாம் பாத்தீங்களா, மந்திரம் செஞ்சது மாதிரி இருக்குது. ஓரம் எரிஞ்ச ஒரு பட்டுத் துணியும் இருக்குது. இதுக்கு என்ன அர்த்தம்?”
“அமராவதி அம்மாள்னா யாருப்பா?”
“அது எங்க அப்பாவோட ரெண்டாவது மனைவி. உங்க சித்தப்பாவோட அம்மா.”
“அவங்க வீட்டுல உள்ளது எப்படி இங்க வந்தது?”
“எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப காலமாவே இருந்தது. இப்போ அது உறுதிப்பட்டிருக்கு. எனக்கு இந்த மந்திரம் மாயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஆனா அத என்ன நோக்கத்துல யாருக்கு பண்ணுறாங்க அப்படிங்கற மாய்மாலத்த தெரிஞ்சுக்கிட்டா, சில ஆபத்துகள்ல இருந்து தப்பிக்கலாம். அலெக்சான்டர், நீ இன்னிக்கி லீவு போட முடியுமா? பத்திரம் ஆஃபீஸ் வரைக்கும் போயிட்டு வரணும். ஒரு பத்திரத்த பதிவு செய்யணும்.”
“சரிப்பா.”
“அந்த வடிவு எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு, எங்க அண்ணன் அன்னிக்கு வந்த நாள், அவர் தான் இந்த திருக்குச் செம்ப வச்சாரான்னு உறுதியாத் தெரிஞ்சுக்கணும்.”
“என்ன நடக்குதுப்பா இங்க?”
“வா பத்திர ஆஃபீசுக்கு போய்ட்டு வர்றப்போ நிறைய நேரம் இருக்குது பேசறதுக்கு.”
***
திவ்யா காலை உணவையும் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு சான்ட்ராவைப் பார்க்கப் போனபோது சான்ட்ரா
இரண்டு கண்களிலும் உடல் முழுவதிலும் விழித்து இருந்தாள். வழக்கம் போன்ற தூங்கி வடியும் சான்ட்ராவாக இல்லை.
“அண்ணி, உங்க கிட்ட நான் தனியா பேசணும். யாரும் ரூமுக்கு உள்ள வரக் கூடாது.”
“சரிம்மா, நான் பாத்துகிறேன்.”
“நான் இன்னிக்கு ஏன் இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கேன் தெரியுமா?”
“சொல்லு, தெரிஞ்சுக்கிறேன்.”
“நான் ரெண்டு நாளா நீங்க குடுக்கற மாத்திரையை எல்லாம் வாய்க்குள்ள ஒதுக்கி வச்சிட்டு, நீங்க போனப்புறம் துப்பிட்டேன். இப்ப புரியுதா, நான் மென்டல் இல்லன்னு?”
“தெளிவா இருக்கறப்போ உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லிட்டு, உங்க உதவியையும் கேக்கப் போறேன். நீங்க மாட்டேன்னு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு இத விட்ட வேற வழியும் இல்ல.”
“சொல்லு, என்னால முடிஞ்சதச் செய்யறேன். ஆனா உங்க அண்ணன மீறி நான் எதுவும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன்.”
“அண்ணி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? உங்களால என்னப் புரிஞ்சுக்க முடியாதா?”
“எங்க சூழ்நிலை வேற, நீ இப்போ இருக்கற நிலம வேற, அதத் தெரிஞ்சுக்கோ சான்ட்ரா.”
“நீங்களும் பொண்ணு, நானும் பொண்ணு, சக்தியும் பையன் எங்க அண்ணனும் பையன். இந்த சூழ்நிலைய சொல்றீங்களா அண்ணி?”
“அது இல்ல, நீ படிச்சுட்டு இருக்கற, இன்னும் சட்டப்படி கல்யாண வயசு ஆகல. அவனுக்கும் உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. மதம், ஜாதி, அந்தஸ்து.”
“கோச்சுக்காதீங்க அண்ணி, இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு சட்டப்படி கல்யாண வயசு ஆயிரும். ஜாதி, மதம், அந்தஸ்து எல்லாம் பாத்து தான் நீங்களும் அண்ணனும் லவ் பண்ணுனீங்களோ?”
திவ்யாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“மனசுலயும் உடம்புலயும் அனுபவத்துலயும் முதிர்ச்சி இல்லாம லவ்வு கல்யாணம் வரைக்குத் தாக்குப்பிடிக்காது சான்ட்ரா.”
“நல்லா சப்பக்கட்டு கட்டுறீங்க அண்ணி.”
“சரி நீ சொல்ல வந்தத சொல்லு. நான் அப்புறமா உங்கிட்ட டீட்டெய்ல்டா பேசுறேன்.”
“எது, அண்ணங்கிட்ட பாய்ன்ட் எடுத்துக் குடுக்கச் சொல்லி, அப்புறம் உரை ஆத்தலாம்னு நினைக்கிறீங்களா?”
“அதுல்லாம் இல்ல, நீ கேட்ட உதவி என்னன்னு சொல்லு, நான் முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன்.”
“உண்மையச் சொல்றேன் முதல்ல. அப்புறமா உதவியக் கேக்குறேன். நான் என்ன வந்தாலும் சக்தியத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவனுக்கு நான் சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கேன். எனக்கு பேய் பிடிச்சது, நான் கஷ்ட்டப்படறது எல்லாம் பாதி தான் உண்மை. பாதி நான் அமைதியா இருக்கறதுக்கும், தனிமையா இருக்கறதுக்கும் நானே செஞ்சுக்கிட்ட நடிப்பு. அடுத்த வருஷம் எப்படியும் நான் படிக்கறதுக்கு வெளில போறப்போ, 18 வயசு முடிஞ்சதும் ரிஜிஸ்டர்ட் மேரேஜ் பண்ணிக்குவேன். நீங்க செய்ய வேண்டிய ஒரே உதவி, இந்த உண்மைய யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியும் செய்து குடுக்கணும். அப்படி இல்லன்னா, நான் ஒரு வருஷம் வெய்ட் பண்ணிப் பாத்துட்டு 19 வயசுல செத்துப் போயிருவேன்.”
“இதயெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்லணும்? சொல்லாமலேயே எல்லாத்தையும் செஞ்சிருக்க வேண்டியது தானே?”
“நான் செத்துருவேனோன்னு பயத்துலயாவது நீங்க எனக்கு எதிரியா இருக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை தான். குடும்பத்துல எல்லாரும் எனக்கு எதிர்த்து நின்னா நான் சமாளிக்கறது கஷ்ட்டம். ஏற்கனவே ஒருத்தன் கிட்ட சத்தியம் வாங்கி ஆஃப் பண்ணி வச்சிருக்கேன். இப்போ நீங்க” தன் கையை திவ்யாவை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தாள் சான்ட்ரா.
“நான் சத்தியம் பண்ணலன்னா? நான் எதுக்குமே சத்தியம் பண்றது இல்ல.”
“உங்களுக்கு உள்ளேயே ஒரு குற்ற உணர்ச்சி சாகற வரைக்கும் இருந்துட்டே இருக்கும். அதுக்குத் தான் இதயெல்லாம் உங்க கிட்ட சொன்னேன். சத்தியம் பண்ண வேண்டாம், எனக்கு ஒரு உறுதிமொழி மட்டும் குடுங்க.”