“என்னங்க, எனக்கு நீங்க பணம் குடுக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா நீங்க எப்படி இதுக்கு சம்மதிக்கிறீங்கன்னு தான் எனக்குப் புரியல.”

“நான் நம்புறேனோ இல்லியோ, அம்மா நம்புறாங்க. வயசானவங்களுக்கு டிஸ்ட்டில்ட் வாட்டர் ஊசி போடுறாங்க இல்லியா? சில பேருக்கு தாயத்து இருக்குது இல்லியா? அது மாதிரி இவங்க விசுவாசத்துக்கு ஒரு அஸ்திபாரம், கண்ணால பாக்கக் கூடிய டான்ஜிபிள் ஆப்ஜக்ட் ஒண்ணு தேவப்படுது. எப்படியோ சான்ட்ரா சுகமானா சரின்னு நினைச்சுட்டேன். அப்புறமா அம்மா நிலைமையும் பாவம். இந்த நிலைமைல நான் முடியாதுன்னுட்டா, யார் கிட்டயாச்சும் எப்படியாச்சும் பணம் புரட்டணும்னு முயற்சி பண்ணுவாங்க. அது இன்னும் ரொம்ப காம்ப்ளிக்கேஷன்ஸ கொண்டு வந்துரும்.”

திவ்யாவுக்கு புரிந்தும் புரியாததுமாக இருந்தது. அலெக்சான்டர் தன் லேப்டாப்பிலும் ஸ்மார்ட் ஃபோனிலும் எதையெல்லாமோ நோண்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றிரண்டு ஃபோன் கால்கள் போட்டிருந்தான். இறுதியில் அம்மா கேட்ட ஐந்து லட்சத்தை பென்னி ஹின்னுக்கு அவர் சொன்ன பேங்க் கணக்குக்கு மாற்றிவிட்டு அம்மாவிடம் போய்ச் சொன்னான், “அம்மா பணத்த கட்டியாச்சு. இனிமே அவரு வீட்டுக்கு வர்றது, பேய் விரட்டுறது எல்லாத்துக்கும் அப்பா கிட்ட பெர்மிஷன் கேக்க வேண்டியது நீங்க. என்னால எதுவும் செய்ய முடியாது.”

***
“என்னவும் செஞ்சு தொலைங்க” என்று அம்மாவின் வேண்டுகோளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்பா எங்கேயோ காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். அலெக்சான்டரும் எதையும் கண்டு கொள்ளாமல் மாடியிலேயே இருந்துவிட்டான். திவ்யா தான் வேடிக்கை பார்த்து, அலெக்சான்டருக்கு நடந்த கதைகளைச் சொல்வதற்காக கீழேயே இருந்தாள்.

பென்னி க்ரஹாம், லீலாம்மா எதிர்பார்த்ததை விடக் குள்ளமாக இருந்தார். ஆனால் ஜிம் பாடி தெரியும் படி டைட்டாக டி ஷர்ட் போட்டிருந்தார். அவரை விட அவருடன் வந்த உதவியாளர்களின் நடவடிக்கைகள் தான் பெரிய தடபுடாலாக இருந்தது.

“டீ எதும் போடட்டுமா?”

“வேணாங்க. ப்ரதர் ஃபாஸ்ட்டிங்ல இருக்கார். லிக்விடாத் தான் ஏதாச்சும் எப்பவாச்சும் குடிப்பார். தண்ணி தான் அடிக்கடி குடிப்பார். அதுவும் நாங்களே கொண்டு வந்திருக்கோம். அவரு குரல் நல்லா இருக்கணும்னா கண்ட கண்ட ஊர்ல கண்ட கண்ட தண்ணி குடிக்கக்கூடாது இல்லீங்களா?”

“சரிங்க உங்களுக்குல்லாம் டீ போடலாமா?”

“ஒரு நிமிஷம் இருங்க, யாருல்லாம் ஃபாஸ்டிங்னு கேட்டுட்டு வர்றேன்.”

அவர் கண்களை மூடி முணுமுணுத்தபடியே ஜெபம் செய்து கொண்டிருக்க. சத்தமாக ஒன்றிரண்டு உதவியாளர்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

பைபிளைக் கையில் வைத்து அதை சான்ட்ராவின் தலையில் வைத்தார் ப்ரதர் பென்னி க்ரஹாம்.

“ஏய். ஃபாஸ்டிங்கா பண்றே. லிக்விடா மட்டும் தான் குடிப்பியா? நீ தனியாப் போயி குடிச்சியே அந்த சிக்கன் சூப்புல இருந்த ரெண்டு மூணு பீச நீ கடிச்சு விழுங்கலன்னு சொல்லு…” கரகரத்த கட்டைக் குரலில் திமிறியபடி கத்தினாள் சான்ட்ரா. உதவியாளரில் ஒருவர் வாசலுக்கு வெளியே நின்று கொள்ள இன்னொருவர் கதவை அடைத்தார். டீயுடன் வந்த லீலா அம்மாவை கதவுக்கு வெளியே நிறுத்திவிட்டார் ஒருவர்.

திவ்யாவுக்கு சிரிப்பதா, பயப்படுவதா என்று தெரியவில்லை. முதல் முறையாக இப்படி ஒரு காட்சியைக் காண்கிறாள். அவள் தலையைச் சுற்றி போட்டிருந்த முக்காட்டின் முனையைத் தன் பற்களால் இறுக்கமாகக் கடித்துக் கொண்டாள். கண்களை மூடியிருந்தாலும், காதுகளால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில வேத வசனங்களைச் சொல்லி ஜெபித்தார் ப்ரதர். கூட வந்திருந்த இன்னொரு வயதானவர் மிகத் தைரியமாக சான்ட்ராவின் தலையில் தன் பைபிளை வைத்து ஜெபித்தார். அவரது வார்த்தைகளும், பைபிளும் சான்ட்ராவை, அல்லது அவளுக்குள் இருந்த ஆவியை அதிகமாக வேதனைப் படுத்தியது போல இருந்தது. பிரதர் தாழ்மையாக ஒரு மூலையில் முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார்.

“அவன அனுப்பு” என்ற சான்ட்ராவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. வயதானவர் விடாப்பிடியாக, “போப்பிசாசே” என்று அதிகாரத்துடன் வேத வசனங்கள் சிலவற்றை சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தார்.

சான்ட்ரா இப்போது களைப்பாக இருந்தாள்.

“எனக்கு ஒரு பரிகார பூஜை மட்டும் பண்ணுங்க நான் போயிர்றேன்” என்று மெல்லிய குரலில் பரிதாபமாகச் சொன்னாள்.

“எந்தப் பேச்சும் பேசக் கூடாது. போ. வெளியே” அவளைப் பேச விடாமல் அதட்டிக் கொண்டும் தீவிரமாக ஜெபித்துக் கொண்டும் இருந்தார் அந்தப் பெரியவர்.

“நான் போறேன், ஒண்ணே ஒண்ணு மட்டும் சத்தியம் பண்ணிக் குடு.”

“ஒண்ணும் கிடையாது, மண்ணும் கிடையாது” அதிகாரத்துடன் பேசினார் பெரியவர்.

“அவன மட்டும் என் பக்கத்துல வரச் சொல்லு நான் போயிருதேன்.”

ஒரு தர்ம சங்கடமான நிலை அந்த அறைக்குள் இருந்தது. திவ்யா லேசாக ஒன்றரைக் கண் போட்டுப் பார்த்தாள். அவளால் நம்ப முடியாத ஒரு காட்சி அங்கே நடந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *