“நான் இத்தன வருஷத்துல பாத்தது, படிச்சது, அனுபவிச்சது எல்லாத்தையும் வச்சி, ஒரு பேய்யாலஜி க்ளாஸ் எடுத்தாத்தான் உனக்கு இந்த ப்ரதர் பத்தி சொல்றதும் புரியும். பேய்யாலஜி மட்டும் இல்ல, ஊழியாலஜி பத்தியும் நான் உனக்கு கொஞ்சம் பேசிக்ஸ் சொன்னாத்தான் எல்லாமே நல்லாப் புரியும்.”
“சொல்லுங்க. நமக்கு என்ன ஆஃபீஸ் போணுமா இல்லன்னா வீட்டு வேல தான் இருக்குதா. பிள்ளைங்கள அத்தையும் சான்ட்ராவும் பாத்துக்குறார்ங்க. வீட்டு வேலைக்கு உதவியா அக்கா இருக்காங்க. சாப்ட்டுட்டு சாப்ட்டுட்டு தூங்கறதுல கொஞ்ச அறிவுக்கும் வேலை குடுக்கலாம். மூளைக்கு எக்சர்சைஸ் குடுக்கலாம்.”
“முதல்ல, கிறிஸ்தவத்துல பேய் பத்தி என்ன சொல்லிருக்கு. நம்ம ஊர்ல பேய் பத்தி மக்கள் என்ன யோசிக்கிறாங்க. பிசாடு உண்மையிலேயே யாரு. அவனால என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுக்கணும். அப்புறமா, மனுஷங்க, அதிலயும் ஊழியக்காரங்க பேய என்ன செய்ய முடியும் அப்படிங்கறதையும் பாத்துட்டு நம்ம ப்ரதர் கதைக்கு வரலாம்.”
“நான் கவனமாக் கேட்டுட்டுத்தான் இருக்கேன். அப்பப்போ ‘உம்’ போட்டுட்டு இருக்கணுமா? அல்லது அமைதியாக் கேட்டுட்டே இருக்கலாமா?”
“நான் சொல்லப் போறது இனட்ரஸ்ட்டிங்கா இருக்கும், நிச்சயமா தூக்கம் வராது. நீ தூங்கினா தலைல ஒரு குட்டு வைப்பேன் அல்லது கீழே போய் ஸ்ட்ராங்கா டீ போட்டு வாங்கிட்டு வருவேன்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சொல்லுங்க.”
“முதலாவதா, பிசாசுன்னு ஒண்ணு இந்த உலகத்துல இருக்குது. நாம நம்புனாலும் நம்பாட்டாலும் உண்மை உண்மை தான். பிசாசு ஒரு தந்திரமானவன். அவன் ஒரு பக்கம், மக்கள தான் இருக்கறத நம்பாம இருக்க வைப்பான். அடுத்த பக்கம் தன்னை நினைச்சு மக்கள பயந்து சாக வைப்பான். அடுத்து அவன் உலகங்களைப் படைச்ச கர்த்தருக்கு சரிக்கு சமமான எதிரின்னு நினைக்க வைப்பான். கர்த்தருக்கும் சாத்தானுக்கும் நடுவுல நடக்கற சண்டையில மனுஷங்கள வச்சு அவங்க ரெண்டு பேரும் விளையாடுறதா நமக்கு ஒரு பிக்சரக் குடுப்பான். ஆனா அவன் படைக்கப்பட்ட ஒரு தூதன். விழுந்து போன தூதன். தன்னோட மூணுல ஒரு பங்கு சாத்தான்களையும் கர்த்தருக்கும் அவரோட படைப்புகளுக்கும் எதிரா கீழே கொண்டு வந்துட்டான். அவனால கர்த்தருக்கு சரிசமமா இருக்க முடியவே முடியாது. ஆனா அவனுக்கு சில வல்லமை இருக்கத் தான் செய்யுது. ஆனா நம் கர்த்தர் சர்வ வல்லவர். அவரோட இருக்கற தேவ தூதர்களும் கர்த்தருக்கும் நமக்கும் உதவி செய்ய இருக்காங்க.”
“இதெல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். பைபிள்ல இதப் பத்தி எல்லாம் படிச்சிருக்கேன்.”
“நான் சரியான வரிசையில எல்லாத்தையும் சொன்னாத் தான் நல்லா இருக்கும்.”
“ஆமா, ஆமா நீங்க பைபிள் ஸ்டடி எடுத்தா அதுலயே முங்கிப் போயிருவீங்க. மத்தவங்களையும் முங்க அடிச்சிருவீங்க.”
“சாத்தான் பல்லு புடுங்கப்பட்ட பாம்பு. இயேசு அவனையும் மரணத்தையும் சிலுவையில ஜெயிச்சுட்டார். ஆனா பாவத்தோட பலன், சாத்தானோட அட்டகாசம் இயேசுவோட இரண்டாம் வருகை வரைக்கும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யும். அவனோட சீற்றம், மிரட்டல் எல்லாமோ தீவிரவாதிகளோட அட்டாக் மாதிரி இருக்கும். மக்கள அசைய விடாம டெரரா அவன் குடுக்கற மிரட்டல்கள், தாக்குதல்கள் எல்லாமே உலகத்துல இருக்கத் தான் செய்யும். ஆனா கர்த்தரோட மக்கள, கர்த்தரோட பெர்மிஷன் இல்லாம அவன் தொட முடியாது.”
“ஆமா, யோபுவோட வாழ்க்கையிலயும், அவன் கர்த்தரோட உத்தரவு வாங்கிட்டுத் தானே வந்தான்.”
“ஆமா, அதே மாதிரி சாத்தான் மனுஷங்கள சோதிக்கறது, மக்கள் மூலமா மத்தவங்களத் தாக்குறதும் நடக்கும். அதுக்காக யூதாஸுக்குள்ள சாத்தான் புகுந்ததும், பேதுருவ இயேசு அப்பாலே போ சாத்தானேன்னு சொன்னதும் ஒண்ணுன்னு சொல்ல முடியாது.”
“ஆமா எனக்கும் ரொம்பக் காலமா இந்த சந்தேகம் இருந்தது. பேதுருவ ஆண்டவர் ஏன் அப்பாலே போல சாத்தானேன்னு சொன்னார்?”
“சாத்தான் அப்படிங்கறது எதிரின்னு தான் பைபிள் மொழியில அர்த்தமாகுது. பிசாசு கர்த்தருக்கும் மனிதர்களுக்கும் எதிரியா இருக்கறதுனாலத் தான் இப்படி சொன்னார் இயேசு. பேதுரு, இயேசுவோட சிலுவை மரணம் கூடாதுன்னு சொன்னப்போ தான் இயேசு அவன எதிரின்னு சொன்னார். உலகத்துல உள்ள மக்கள் மாதிரி யோசிக்கிறியேன்னு திட்டுனாரு. அதே மாதிரி, பரமண்டல ஜெபத்துல ‘தீமையிலிருந்து இரட்சித்துக் கொள்ளும்’ அப்படிங்கறது, ‘தீயவனிடம் இருந்து எங்களைக் காப்பாற்றும்’ அப்படின்னு சில பைபிள் வெர்ஷன்கள்ல இருக்குது. ‘ஈவில் ஒன்’ கர்த்தர் படைச்சது எல்லாமே நன்மை தான். தீமை உலகத்துக்கு வர்றதுக்கு சாத்தான் குடுக்குற சோதனைகளும், அதுக்கும் மக்கள் இடம் குடுக்கறதும் தான் காரணம். தீமையின் மொத்த உருவமும் அவன் தான்.”
“மக்கள அசுத்த ஆவி பிடிச்சுக்கிட்ட டார்ச்சர் பண்றது இயேசுவோட காலத்துலயே இருந்தது. இயேசுவும் அவரோட சீடர்களும், திருச்சபையில உள்ள பல தலைவர்களும், ஊழியக்காரங்களும் பிசாசுகள விரட்டியிருக்காங்க. அதே நேரம் மனுஷங்களும் பிசாசுகள வச்சு பிசாசுகள விரட்டியிருக்காங்க.”
“ஆனா வெஸ்ட்டர்ன் மக்களும், நம்ம ஊரு பகுத்தறிவுவாதிகளும் பிசாச நம்ப மாட்டேங்கறாங்களே?”
“அது அறிவியல் புரட்சி எல்லாம் வந்ததுக்கு அப்புறம் வந்த மாற்றங்கள். திருச்சபையும் கொஞ்சம் தாறுமாறா நடந்துக்கிட்டது, அறிவியலும் கிறிஸ்தவமும் ஒண்ணுக்கு ஒண்ணு எதிரிங்கற மாதிரி அட்டூழியம் பண்ணுனப்போ, அறிவியல் பெரிசா வளந்து, கண்ணால, கையால, நம்ம புலன்களால உணர்ந்து பாக்க முடிஞ்சத மட்டும் தான் நம்பணும். டெஸ்ட் ட்யூப்ல, லாப்ல நிரூபிக்க முடிஞ்சது மட்டும் தான் உண்மைன்னாங்க. இன்னிக்கு வரைக்கும் கிறிஸ்தவத்துக்கும் அறிவியலுக்கும் நடுவுல இந்த உரசல் இருந்துட்டே தான் இருக்குது. நல்ல விசுவாசிகளான சயின்டிஸ்ட்டுகள் அன்னிக்கும் இன்னிக்கும் இருந்துட்டுத் தான் இருக்காங்க.”
“சோ, கண்ணால பாக்க முடியாததுனால பேய், பிசாசுன்னு ஒண்ணும் இல்லங்கறாங்களாக்கும்?”
“ஆமா, கடவுளும் இல்ல, பிசாசும் இல்ல அப்படிங்கறாங்க. ஆனா காதல், பாசம், அறிவு, மாதிரி பல விஷயங்களக் கண்ணாலப் பாக்க முடியாது. அதப் பத்தி அவங்க அதிகம் பேச மாட்டாங்க. அதெல்லாம் மனுஷ மூளைல உருவாகுற ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் அப்படிம்பாங்க. அதனால எந்த ஒரு செயலுக்கும், நிகழ்ச்சிக்கும் அறிவியல் பூர்வமா ஒரு விளக்கம் குடுப்பாங்க. அதே மாதிரி தான் பேய் பிடிக்கறதுங்கறதும், மூளைல நடக்கற ஒரு கெமிக்கல் ரியாக்ஷன். அதுக்கு ட்ரக்ஸ் குடுத்து சரி செய்யலாம்னு சொல்றாங்க.”
“ஆனா மென்டல் டிஸ் ஆர்டர், கெமிக்கல் இம்பேலன்ஸ்ஸும் உண்மை தானே?”
“ஆமா. உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். என் அம்மாவுக்கு கெமிக்கல் இம்பேலன்ஸ் உண்டு. அவங்க மாத்திர போடறத நிறுத்திட்டா, என்னல்லாமோ காதுக்குள்ள கேக்குதுன்னு சொல்லுவாங்க.”
“முன்னால லேசா சொல்லிருக்கீங்க. அதப் பத்தி விவரமா ஒண்ணும் நீங்க சொல்ல வேண்டாம்.”
“ஒரு பக்கம் இப்படி எல்லாத்தையும் மனநிலை பாதிப்புன்னு மருத்துவம் சொல்லுது. இன்னொரு பக்கம் காய்ச்சல் முதல், மனநிலை பாதிப்பு, கான்சர் வரை எல்லாமே பிசாசோட தாக்குதல்னு சொல்றவங்களும் இருக்கறாங்க. நேரடியாவோ மறைமுகமாவோ பிசாசு இந்த உலகத்துல இருக்கற எல்லா தீமைகளுக்கும் காரணம்னாலும், நாம இஷ்ட்டம் போல வாழ்ந்துட்டு எல்லாத்துக்கும் சாத்தான் தான் காரணம்னு சொல்றதும் சரியில்ல.”
“அதே மாதிரி எந்தப் பிரச்சனையா இருந்தாலும் கர்த்தர் சரியாக்கிருவாரு, சரியாக்கணும்னு சொல்றதும் ஒரு வகையில சரியில்ல தானே?”
“கரெக்ட். எல்லாத்தையுமே நாம் இது தான் இப்படித்தான்னு ப்ளாக் அன்ட் வைட்டா சொல்லவும் முடியாது. நமக்குத் தெரியாத பல இரகசியங்கள், புதிர்கள் இருக்கத்தான் செய்யுது. நமக்குத் தெரிஞ்ச, பைபிள் அடிப்படையில இருக்கற விளக்கங்கள ஏத்துக்கிட்டுப் போக வேண்டியது தான்.”
“ஒரு நிமிஷம் இருங்க. வெளில ஏதோ சத்தம் கேக்குது. பசங்க தான் ஏதோ சேட்ட பண்றாங்கன்னு நினைக்கிறேன்” திவ்யா வெளியே போக, அலெக்சான்டர் அங்கிருந்த சோஃபாவில் மெதுவாகப் படுத்து, சில நிமிடங்களில் குறட்டை விடத் துவங்கினான்.