“அண்ணா நீங்க சொல்ற மாதிரி நான் இரட்சிக்கப்பட்டுட்டா, சான்ட்ரா எனக்குக் கிடைப்பாளா? அவளுக்கு சுகமாகி, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, நாங்க ரெண்டு பேரும் ஊழியம் செய்வோம்னு பொருத்தன பண்ணிருக்கேன் அண்ணே. நீங்களும் எனக்காக, எங்களுக்காக ஜெபம் பண்ணிக்குவீங்களா அண்ணே? பைபிள் ஸ்டடில சொல்லிருக்கீங்களே, நிறைய ஜெபங்களுக்கு கர்த்தர் உங்களுக்கு பதில் குடுத்திருக்கார்னு.”

“ஆன்ட்ரூ, கர்த்தர் ஜெபத்தக் கேக்கறவர் அப்படிங்கறது உண்மை. ஆனா நாம நினைக்கிற மாதிரி, நாம நிபந்தனை வைக்கிற மாதிரில்லாம் அவர் பதில் குடுக்க மாட்டார். ஜெபத்தப் பத்தி உனக்குப் புரிஞ்சது அவ்வளவு தான். ஜெபம்னா நமக்கு வேண்டியதக் கேக்கறதுங்கறது ஒரு பக்கம்னா, கர்த்தர் நம்மக்கிட்ட பேசறதக் கேக்கறது அடுத்த பக்கம். நம்மளோட பொருத்தனைய விட நம்மளோட வாழ்க்கை மாறணும் அது தான் முக்கியம்.”

“அண்ணே நீங்களே சொல்லுங்க, நான் அப்படி ஒண்ணும் மோசமானவன் இல்ல. இப்ப இன்னும் நல்லவனா மாறுறேன். வேணும்னா ஏதாவது பெந்தேகோதே பாஸ்ட்டர்ட்ட போய் முழுக்கு ஞானஸ்நானம் வேண்னா எடுத்துக்குறேன். கர்த்தர் குடுத்தார்னா அன்னியபாஷைல பேசக் கூட நான் ரெடி. நான் சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் ஊழியத்துக்குத் தான் போகப் போறேன். இத விட என்னண்ணே வாழ்க்கை மாறணும்?”

“சரி ஆன்ட்ரூ, நானும் ஜெபம் பண்றேன். நீயும் ஜெபம் பண்ணு. கர்த்தாவே உங்களோட சித்தம் நடக்கட்டும்னு ஜெபம் பண்ணுவோம்.”

“அண்ணே அது விசுவாசம் இல்லாத ஜெபம் மாதிரி தானே இருக்குது? என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் அப்படின்னுன் தானே கர்த்தர் சொல்லிருக்காரு? எனக்கு அதே வார்த்தை சொல்லத் தெரியல. கோரன்டைன்ல இருந்தப்போ புதிய ஏற்பாடு முழுசையும் ஒரு தடவ வாசிச்சு முடிச்சுட்டேன். எனக்கு கர்த்தர் குடுத்த வசனம் எல்லாம் அன்டர்லைன் பண்ணி வச்சிருக்கேன்.”

“ஆன்ட்ரூ, கிறிஸ்தவத்த எல்லாம் விட்டுரு. சாதாரண மனுஷனா, கல்யாண வயசு என்னன்னு கவர்மென்ட் சொல்லிருக்குன்னு உனக்குத் தெரியுமா? பெண்ணுக்கு 18 வயசு, ஆணுக்கு 21 வயசு. உனக்கு 19 வயசு. சான்ட்ராவுக்கு 17 வயசு. அடுத்த வருஷன் அவளுக்கு சட்டப்படி கல்யாணம் நடக்கலாம். ஆனா நீ இன்னும் ரெண்டு வருஷம் காத்திருக்கணும். மனுஷ காரியம், எதுவும் எப்பவும் நடக்கலாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்த நடத்தறதுக்கு ஏத்த மாதிரி ஒரு வேல வேண்டாமா? ஏன் நீ காத்திருக்கக் கூடாது?”

“அண்ணே சக்திக்கு அடுத்த வருஷம் 21 வயசாயிரும். சான்ட்ராவுக்கும் 18 வயசாயிரும். அவன் அவள ஏமாத்தி அடுத்த வருஷம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க திட்டம் போட்டுருக்கான். சான்ட்ரா ஓக்கே சொல்லிட்டான்னா நான் எத்தன வருஷம்னாலும் காத்திருக்க ரெடி.”

“ஆன்ட்ரூ, உன்னோட மனசு எனக்குப் புரியுது. ஆனா உணர்ச்சி வசப்பட்டு இருக்கறப்போ உன்னால சில விவரங்கள சரியாப் புரிஞ்சுக்க முடியாமப் போகலாம்.”

“அண்ணா, நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க. நாம் அமைதியாக் கேக்குறேன். எனக்கு கர்த்தர் சான்ட்ராவத் தரணும். அது மட்டும் போதும்.”

“எனக்கு டைம் குடு, நானும் நல்லா ஜெபம் பண்ணிட்டு, யோசிச்சுட்டு உங்கிட்ட பேசுறேன். நான் எதுக்கும் வாக்குக் குடுக்கல. ஆனா நான் உன் கூட இருப்பேன். உனக்காக ஜெபம் பண்ணிட்டே இருப்பேன்.”

“அண்ணா எனக்காக ஜெபம் பண்ணுங்க. ஆனா ஜெபத்துக்கும் மேலா என்ன செய்ய முடியுமோ அதையும் செய்யணும்.”

“அடுத்த வாரம் நாம் ரெண்டு பேரும் எங்க தோட்டத்துக்குப் போவோம். காலைலியே வந்துரு. ஈவ்னிங் வரைக்கும் நான் உங்கூட டைம் ஸ்பென்ட் பண்றேன்.” அலைபேசியை வைக்கும் போது ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் உட்கார்ந்தார் செல்லராஜ். அவர் மகள் “அப்பா” என்று அருகில் வந்தபோது, “பாப்பா, நாளைக்குப் பேசுவோம், எதுனாலும். எனக்கு மனசுக்கு நல்லால்ல, ப்ளீஸ்.” என்றார்.

“சரிப்பா.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *