இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான் திவ்யாவுக்கும் சான்ட்ராவுக்கும் இடையில் சிறிது நெருக்கம் வந்தது போல் தெரிந்தது. இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்று திவ்யா பேச்சைத் துவக்கிவிட்டாள்.

“சான்ட்ரா, உன்னோட வருங்காலக் கணவன் எப்படி இருக்கணும்னு நீ ஜெபம் பண்ணிருக்கியா சான்ட்ரா?”

“அண்ணி, நீங்களும் அண்ணனும் ஜெபம் பண்ணி தான் கல்யாணம் பண்ணுனீங்களா?”

“சான்ட்ரா, நாங்க லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணினோம். ஆனா எங்க காதல் கர்த்தருக்குப் பிரியமானதா இருந்தது. நாங்க பெரியவங்கள எதுத்துக்கல. அவங்க சரி சொல்றதுக்காகக் காத்திருந்தோம்.”

“அண்ணி, எனக்கும் உங்கள மாதிரி கல்யாணம் நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லியா?”

திவ்யா அத்துடன் இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டாள். ஆனால் பைபிள் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் பேசும் போதெல்லாம் சான்ட்ரா ஆர்வமாகக் கேட்டுக் கொண்டாள். பைபிளை வாசிக்கவும் துவங்கிவிட்டாள். தனியாக ஜெபிப்பது போலவும் தெரிந்தது.

தன் பிள்ளைகளுடன் விளையாடும் சான்ட்ராவின் ஒரு குணத்தை திவ்யா நன்றாகப் புரிந்து கொண்டாள். திவ்யாவுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது என்பது உயிருக்கு சமம். சிறு பிள்ளைகள் தானே என்று அவள் அலட்சியம் செய்யவில்லை. அவர்களுடன் விளையாடவோ வேறு எதற்காகவோ வாக்குக் கொடுத்தால் அதை எப்படியும் நிறைவேற்றுவதைக் கவனித்தாள். யாரும் ஏதாவது உதவி கேட்டாலும் சிறிது யோசித்து, தன்னால் முடியுமா என்று உறுதிப்படுத்திய பின் தான் வாக்கு கொடுப்பாள். இதைப் பற்றி அலெக்சான்டரும் திவ்யாவும் தீவிரமாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“நீ சான்ட்ராவ இன்னும் பைபிள் வாசிக்கறதுக்கும், ஜெபம் பண்றதுக்கும் என்கரேஜ் பண்ணு. அப்படியே அவளுக்குப் புரியற மாதிரி ஆன்மீக வாழ்க்கையில ஆழமாப் போறதுக்கும் வழி காட்டு. அவ தன்னோட வாழ்க்கைய கர்த்தருக்கு அர்ப்பணிக்கணும். அது தான் முக்கியம்.”

“நல்லாத்தான் போய்ட்டு இருந்தது. நான் தான் சொதப்பிட்டேன்.”

“பரவால்ல, அடி மேல அடி வச்சா அம்மியும் நகரும். நீ அவளோட காதலப் பத்தி பேசவே வேண்டாம். கர்த்தர அவ நல்லா பிடிச்சுக்கிட்டான்னா, தானாவே அவ மாறிடுவா.”

***

அப்பாவும் அலெக்சான்டரும் கிராமத்துக்குப் போகும் போது இருட்டத் துவங்கிவிட்டது. காலையில் தம்பியைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே சொந்தக்காரர்களைப் பார்க்கப் போய்விட்டார். வீட்டையும் வயல்களையும் பார்த்துக் கொள்ள இருந்த தூரத்து சொந்தக்காரர்களான ஒரு தம்பதி மட்டும் வீட்டில் தங்கியிருந்தார்கள். நாட்டுக் கோழி வாசத்துடன் கொதித்துக் கொண்டிருந்தது. “இட்லி போதுமா, தோசை வேணுமா?” என்று பவ்யமாகக் கேட்டுச் சென்றிருந்தார் செல்வம். “உங்களுக்கு எது ஈசியோ அதையே பண்ணுங்க. அப்பாவுக்கும் எதுன்னாலும் ஓக்கே தான்.”

அப்பா வருவதற்கு நேரம் ஆகியதால், வயல், வீடு, சொந்தக்காரர்கள் என்று உரையாடல் பல திசைகளில் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. கிராமத்து அப்பாவித்தனமும், முதலாளி மீதான அவர்களது அக்கறையும் விசுவாசமும் அலெக்சான்டருக்கு அதிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது கிராமத்தான் என்பதாலா, அதிக சொத்து, பணம் இல்லாததாலா என்ற சந்தேகமும் அவனுக்கு இருந்தது. இதே கிராமத்துல இருந்து தானே சித்தப்பாவும் இப்படி எல்லாம் குறுக்குப் புத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் நினைத்துக் கொண்டான். உடனேயே கேட்டும்விட்டான்.

“செல்வம் அண்ணே, சித்தப்பா உண்மையிலேயே எப்படிப்பட்ட ஆள்? இப்ப கொஞ்சக் காலமா அவரு செய்யறது எல்லாமே சரியாத் தெரியல.”

“அய்யா இது பெரிய ஆட்கள் விஷயம். நான் எதையாவது சொல்லிப்புட்டு அப்புறமா என் மேல பழி விழுந்துடக் கூடாது.”

“நான் உண்மையத் தெரிஞ்சுக்கறதுக்காகத் தான் கேக்குறேன். அப்பாட்ட கூட சொல்ல மாட்டேன். அப்பா என்னவோ தப்பா இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு தான், பத்திரப் பதிவு ஆஃபீஸ் எல்லாம் போயிட்டு இப்போ, நாளைக்கு உறுதியா ஏதோ பத்திரத்த சரியா பதிவு பண்ணணும்னு சித்தப்பாட்ட பேசறதுக்குத் தான் வந்திருக்காரு.”

“தம்பி எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நாலு வழி ரோடு நம்ம ஊர் வழியா போகுதுன்னு அளவு எடுத்துட்டாங்க. உங்க நிலம் ரோட்டு அடியில இருக்குது. வியாபாரத்துக்கு கட கட்டி விடலாம்னு நினைச்சுத் தான் உங்க அப்பாட்ட எழுதி வாங்கிட்டாரு. அதுக்குப் பதிலா இன்னொரு நிலம் தர்றேன்னு சொல்லிருக்காரு. அது ரோடு வர்ற இடம். கவர்மென்ட் குடுக்கறதக் குடுக்கும் பேசாம வாங்கிட்டுப் போவணும்.”

“போனா போகட்டும்னு தான் அப்பா சொல்லிட்டு இருந்தார். ஆனா, அவரு நாங்க உருப்படாமப் போகணும்னு சில குறுக்கு வழில போனாரு. அதான் அப்பா கடுப்பாயிட்டாரு.”

“அய்யா, ஒரு மலையாள மந்திரவாதி இந்த ஊருக்கு வந்திருக்காரு. உங்க சித்தப்பா அவரு கூட ரொம்பவே நெருக்கமா இருக்காரு. வேண்டாதவங்கள எல்லாம் பழி வாங்கத் துவங்கியிருக்காரு.”

“சரி நம்ம வீட்டு பாத்திரங்கள்லாம் எங்க இருக்கு? பாக்கலாமா?”

“பாக்கலாங்கய்யா. ஒரு நிமிஷம் இருங்க. சாவிய எடுத்துட்டு வாரேன்.”

அவர்கள் வீட்டில் இருந்தது போலவே ஒரு திருக்குச் செம்பு. பெயர் வெட்டியிருந்தது, ‘மீனாள்’ என்று.

“இந்த மாதிரி திருக்குச் செம்பு நம்ம ஊருல மட்டும் தான் கிடைக்குங்கய்யா. அதோட பிடியப் பாருங்க. அதுல இருக்கற மாங்கா டிசைன் வேற எங்கயும் கிடைக்காது. இது உங்க பாட்டியம்மாவோடது. அவங்க மதுரப் பக்கம். உங்க அப்பா சின்ன வயசா இருக்கறப்போ அவங்க இறந்துட்டாங்களாம். அப்புறமாத்தான் அமராவதி அம்மான்னு ஒருத்தங்கள உங்க தாத்தா கல்யாணம் பண்ணிருக்காங்க.”

“சித்தி இல்ல அவங்க, இன்னொரு அம்மா. அம்மாவ விட மேலானவங்க அப்படின்னு அப்பா சொல்லிருக்காங்க.”

“ஆனா உங்க சித்தப்பா இருக்காரே அவரு, உங்க சித்தி இருக்கற வரைக்கும் ஒழுங்கா இருந்தாரு. இப்போ அவருக்கு சொத்துக்கு மேல சொத்து சேக்கணும்னு ஆச வந்திருச்சி. அதோட மந்திரம் வேற சேந்துக்கிருச்சு.”

“சித்தி பேரு வெட்டியிருந்த ஒரு திருக்குச் செம்புல, மிளகா வத்தல், எரிஞ்சு போன பட்டுத் துணி அப்படின்னு என்னலாமோ இருந்தது.”

“அது தாங்க அந்த மந்திரவாதியோட வேல. கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணுங்க செத்துப் போயிட்டா அவங்கள எரிக்கறப்போ பட்டு சேலைய போத்தி எரிப்பாங்க. எரியாம மிச்சமா இருக்கற பட்டுத் துணியில அந்த ஆவி இருக்கும்னு சொல்வாங்க. அதத்தான் அவன் உங்க தங்கச்சிய கஷ்ட்டப்படுத்தறதுக்கு எடுத்துட்டு வந்திருக்கான். உருப்பட மாட்டான். அய்யா நீங்க வேதக்காரங்க, இதையெல்லாம் நம்ப மாட்டேன்னு சொல்வீங்க. ஆனா நாங்க இங்க ஊர்ல இதையெல்லாம் கண்ணால பாக்குறோம். பாப்பாவுக்கு ஒண்ணும் பிரச்சன இல்லைன்னா சரி தான். நீங்க கும்புடுற ஏசு சாமிக்கிட்ட இதுல்லாம் நடக்காதுன்னு உங்க அம்மா சொல்லுவாங்க. உங்க அம்மாவுக்கு வந்த பிரச்சனையே ஜெபம் பண்ணி தானே சரியாச்சு.”

“ஆமா, தங்கச்சி இப்போ ரொம்பவே நல்லா இருக்கா. இதப்பத்தி இங்க யாரும் கேட்டா சொல்ல வேண்டாம் சரியா?”

“என்னங்கய்யா நான் எப்படிங்கய்யா சொல்லுவேன். இப்பவும் நீங்க கேக்கப் போய் தான் இதையெல்லாம் சொன்னேன். பாப்பவுக்கு பிரச்சன எதுவும்னா சொல்லுங்க. ஒரு பெந்தகோஸ் அம்மா இருக்காங்க. அவங்க தான் இங்க இருக்கற பேய்பிடிச்சவங்களுக்கு எல்லாம் ஜெபம் பண்றாங்க. நல்லா சுகமாவுது. காணிக்க, காசுன்னு எதுவும் கேக்கறது இல்ல. என் பிள்ளைக்குக் கூட வலிப்பு வந்தப்போ அவங்க தான் ஜெபம் பண்ணி தண்ணி தெளிச்சு விட்டாங்க. ஜெப எண்ணல்லாம் குடுத்தாங்க. அவங்க கிட்ட சொல்லி ஒரே ஒரு நாள் பாப்பாவ இங்க கூப்புட்டுட்டு வந்து ஜெபம் பண்ணுனா எல்லாமே சரியாயிரும்.”

“சரி, தேவைப்பட்டா பாக்கலாம்.”

“என்னத்த தேவப்பட்டா பாக்கலாம்?” வாசலில் இருந்த வாளியில் இருந்து தண்ணீர் விட்டு காலைக் கழுவியபடியே அப்பா உள்ளே வந்தார்.

இட்லியும் நாட்டுக் கோழிக்கறியும் சுடச்சுட பரிமாறப்பட்டன.

செல்வம் ஏற்கனவே சுத்தப்படுத்தப்பட்டிருந்த அறையை மீண்டும் சரிப்படுத்தி இருவருக்கும் நார்க்கட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்தார். மர அலமாரியிலிருந்து பாச்சான் உருண்டையின் மணம் அடர்த்தியாக வெளி வந்தது.

“டேய் செல்வம், நாங்க சாப்பிட்டதுக்கு அப்புறமா போர்வைய எல்லாம் உதறுப்பா” என்றார் அப்பா.

“உதற வேண்டியது இல்லிங்க ஐய்யா. அலமாரிக்குள்ள தூசியே இருக்காது. நேத்தே ரூம்ப எல்லாம் தண்ணி தெளிச்சி கூட்டிப் போட்டுட்டோங்கய்யா.”

சாப்பிட்ட பின்னர் கருப்பட்டி காப்பியையும் குடித்துவிட்டு உறங்குவதற்கு ரெடியானார்கள் அப்பாவும் மகனும். பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அப்பா விரைவிலேயே குறட்டை விடத் துவங்கியிருந்தார். அலெக்சான்டர் கடந்த இரண்டு மாதங்களாக நடந்த எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே நீண்ட நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *