காலையில் அவர்கள் பிரம்மநாயகத்தின் வீட்டுக்குப் போகும் போது நேரம் 10 மணி. சொந்தக்காரர்கள் மாதிரியும் இல்லாமல், முன்பின் தெரியாதவர்கள் மாதிரியும் இல்லாமல் ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டனர் அண்ணனும் தம்பியும்.
“எனக்கு எந்த சொத்து மேலயும் ஆசை இல்ல அப்படிங்கறது உனக்கே தெரியும். ஆனா இந்த தடவ, நீ எப்போ எனக்கு கேடு செஞ்சு முன்னேறணும்னு நினைச்சியோ, அப்பவே உனக்கும் எனக்கும் ஒண்ணும் இல்லன்னு முடிவு செஞ்சுட்டேன். என் மக உனக்கு என்னடா செஞ்சா? ம்… எது வந்தாலும் மோதிப்பாக்குற தில் எனக்கு இருக்கு. நீ அனுப்புற ஏவல், சூனியம் எதப்பத்தியும் எனக்குக் கவல இல்ல. இப்போ நீ கேக்கிற இந்த சொத்து என்னோடது. இதுவரைக்கும் செஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு கையெழுத்துப் போடப் போறது இல்ல. நீயா வந்துட்டா, ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்லயே முடிச்சுக்கலாம். கோர்ட்டு கேஸ்-னு அலைய வேண்டி இருக்காது. அப்புறம் உன் இஷ்ட்டம்.”
“அண்ணே முதல்ல உக்காருங்கண்ணே. ஏ சீத்தாலெச்சுமி, அய்யாவுக்கு காப்பி கொண்டு வா. எத்தனையோ காலத்துக்கு அப்புறமா வந்திருக்காங்க.”
“அண்ணன் தம்பின்னு உறவு கொண்டாட வரல. வா, ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் திறந்திருக்கும். போய் வேலைய முடிக்கலாம்.”
“அண்ணே நீங்க என்ன தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க. பொறுமையா ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றதக் கேட்டுட்டு பேசுங்க.”
“எல்லாம் ரொம்ப நாளு நல்லா யோசிச்சு, பெரியவங்க சில பேர் கிட்ட கலந்துகிட்டு தான் முடிவு எடுத்திருக்கேன். வீணா நேரத்த வேஸ்ட் பண்ணாத.”
பிரம்ம நாயகம் உள்ளே போய் மந்திரவாதியிடம் ஏதேதோ பேசிவிட்டு வந்தார்.
“அண்ணே பதினோரு மணிக்குத் தான் நல்ல நேரமாம். உக்காருங்க. போகலாம்.”
“நான் போறேன், நீ நல்ல நேரமாப் பாத்து வா. எல்லாத்தை முடிச்சு வைக்கிறேன். கையெழுத்துப் போட வந்து சேரு.”
***
ரிஜிஸ்டர் ஆஃபீசில் எதிர்பார்த்ததை விட இலகுவாகவும் சீக்கிரமாகவும் வேலை முடிந்தது. பிரம்மநாயகம் சரியாக 11 மணிக்கு வரும் போது அவர் கையெழுத்துக்கு என்று பத்திரங்களும், ரிஜிஸ்டர்களும் காத்துக் கொண்டிருந்தன. மந்திரவாதி அவர் காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார். திரும்பிப் போகும் போது, “அண்ணா, உங்களுக்கு எப்போ என்னப்பத்தின உண்மைகள் எல்லாம் தெரியுதோ அப்போ, நீங்க இங்க வரலாம். நம்ம வீடு எப்பவும் உங்களுக்காக தொறந்தே இருக்கும். வரட்டுமா?” என்று சீரியசாகச் சொல்வது போலத் தான் சொல்லிச் சென்றார்.
செல்வம் அருகில் இருந்து கொண்டு, “அய்யா, நம்பிறாதீங்க” என்று கிசுகிசுப்பாகச் சொன்னார்.
“இனிமே நம்புற மாதிரி இல்ல.”
“அய்யா எதுக்கும் நீங்க கவனமா இருங்க. உங்க வீட்டுல இருக்கற பொண்டுகள் யாரும் தலையில இருந்து கழியிற முடிய ரொம்ப பத்திரமாப் பாத்துக்கச் சொல்லுங்க. செருப்பு இல்லாம மண்ணுல நடக்க வேணாம்னு சொல்லுங்க. யாரும் உங்க வீட்டு பக்கத்துல வராம பாத்துக்கோங்க. கால் மண்ணு, முடி எல்லாம் எடுத்துத் தான் இவனுங்க மந்திரம் பண்ணுதானுங்க.”
“செல்வம் நீ கொஞ்சம் அமைதியா இருக்கிறியா?”
“அய்யா, நீங்க எவ்வளவு நல்லவங்க, அவரு எவ்வளவு மோசமானவருன்னு தெரிஞ்சு தான் சொல்றேங்கய்யா. அப்படியே சின்னய்யாட்ட சொல்லிருக்கேன், அந்த பெந்தெகோஸ் பெரியம்மாக்கிட்ட பாப்பாவக் காட்டுங்க. தயவு செய்து, உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லியோ, எங்களுக்காக செய்யுங்க. நாங்க உங்க உப்புல வாழ்றவங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா எங்களால உண்மையிலேயே தாங்கிக்க முடியாது.”
செல்வத்தின் தளுதளுத்த குரல், அன்புக்கு இல்லாத அந்த அடைக்கும் தாளை நினைவுபடுத்தியது. அலெக்சான்டர் மெதுவாக அவரது தோளில் கை வைத்தார். பேசினது போதும் என்றா, புரிந்தது என்றா, நன்றி என்றா, அது என்ன செய்தியைச் சொன்னது என்று தெரியவில்லை. செல்வம் அதன் பின் வீடு திரும்பி, அவர்கள் “போய்ட்டு வர்றேன்”
என்று சொன்ன போது தான் பதில் சொன்னார்.
***
திரும்பி வரும் போது அப்பாவும் மகனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அரை மணி நேரம் அப்பா தூங்கிவிட்டார். விழித்ததும் ஒரு ரோட்டோரக் கடையில் டீ குடித்து முகம் கழுவிக் கொண்டனர்.
“அலெக்ஸ், எனக்கு கடவுள், பேய் மேல நம்பிக்கையே இல்ல. இருந்தாலும் பரவால்ல, இல்லாட்டினாலும் பிரச்சனை இல்ல. இது தான் என்னோட ஸ்டான்ட். நீயும் உங்க அம்மாவும் இந்த அளவுக்கு பாப்பா மேல இருக்கற அன்புல தான் ஜெபம் தவம் எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. நான் ஒண்ணும் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா ஒழுங்கா மருந்து குடுத்து சரியாகிறத, ஜெபம், பட்டினின்னு இருந்து கெடுத்துறாதீங்க. மருந்து குடுக்காம ஜெபம் பண்ணியே நிறைய பேற சாகடிச்சவங்களப் பத்தி நான் கேள்விப்பட்டுருக்கேன், பாத்திருக்கேன். நீ அந்த மாதிரி இல்லன்னு தெரியும். ஆனா உங்க அம்மாவ நினைச்சாத்தான் பயமா இருக்கு. நீ கண்டிப்பா பிரச்சனை பெரிசாகாம பாத்துக்குவேன்னு எனக்கு வாக்கு குடுக்கணும்.”
“அப்பா, நீங்க நினைக்கற மாதிரி நான் ஞானம் இல்லாம நடந்துக்கிறவன் இல்ல. ஆண்டவன் குடுத்த அறிவ நிச்சயமா பயன்படுத்திட்டு தான் இருக்கேன். ஆனா கடவுள்னு வந்துட்டாலேயே சில விஷயங்கள், நீங்க சொல்ற பகுத்தறிவால புரிஞ்சுக்க முடியாததாத்தான் இருக்கும். அற்புதங்கள், ஆவி உலகம் இதுல்லாம் இல்லாம கிறிஸ்தவ நம்பிக்கையே இல்ல. எல்லா தத்துவங்களும் அதப் பின்பற்றுறவங்களோட நம்பிக்கையில தான் நிக்குது. நீங்க கூட கடவுள் இல்ல அப்படிங்கற நம்பிக்கையில தான் உங்க வாழ்க்கையையே கட்டி இருக்கீங்க. நான் இருக்கிறார்ங்கற நம்பிக்கையில என் வாழ்க்கைய கட்டியிருக்கேன். இல்லாத ஒண்ணு நல்ல அஸ்திபாரமா, இருக்கற ஒண்ணு நல்லதான்னு நான் விவாதம் பண்ண வரல. உங்கள நான் மதிக்கிறேன். என்னயும், சான்ட்ராவையும் அம்மாவையும் நீங்க நேசிக்கிறீங்க. நம்ம குடும்பத்துல ஒரு நாளும் உங்கள நாங்க விட்டுக் குடுக்கவும் இல்ல. நீங்களும் எங்க சுயமரியாதைக்கு எந்த தாக்குதலும் வராம பாத்திருக்கீங்க. நான் நிச்சயமா உங்க பக்கம் தான் இருக்கிறேன். அதுவும் சான்ட்ராவோட எதிர்காலத்துல உங்களுக்கு இருக்கற அதே அக்கறை, கவலை எல்லாம் எனக்கும் இருக்கு. நீங்க உங்க வழியில அவளுக்கு என்னல்லாம் நல்லது செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதே மாதிரி நான் என்னோட வழியில அவளுக்கு நல்லது தான் செய்வேன். கண்டிப்பா அம்மா கிட்ட நான் நல்லதனமா பேசிப் பாக்குறேன். ஏற்கனவே அவங்க நொந்து போயிருக்காங்க. அதனாலத் தான் அவங்கள அதிகமா எதுத்துக்காம, அவங்க வழியிலேயே போய், அப்படி இப்படின்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.”
அப்பா அலெக்ஸின் கையை ஸ்டியரிங்கோடு சேர்த்து லேசாக அழுத்தினார். அதில் அலெக்ஸ்க்கு பல தகவல்கள் கிடைத்தது போல இருந்தது. அவன் கண் ஓரத்தில் நீர் கோர்த்திருந்தது. அந்தத் துளிகளையே தன் ஜெபமாகத் தன் அப்பாவுக்காக அர்ப்பணித்து மனதில் “கர்த்தாவே ஸ்தோத்திரம், கர்த்தாவே இரக்கமாய் இரும்” என்று சொல்லிக் கொண்டான்.