“ரோட்டுல போற எல்லா பிள்ளைங்களையும் சைட் அடிக்காம ஒருவனுக்கு ஒருத்தின்னு, ஒழுக்கமா இருக்கறது தப்பா? இதையெல்லாம் கர்த்தர் கண்டுக்கவே மாட்டாரா?”

“ஆன்ட்ரூ, உனக்கு எப்ப இருந்து சான்ட்ரா மேல இந்த மாதிரி க்ரேசி லவ் உருவாச்சுது? அவ பதிலுக்கு எதுவுமே சொன்னது மாதிரி தெரியலியே? இது என்ன ஒரு தலைக்காதலா?”

“அண்ணே வீட்டுக்கு வாங்க, எல்லா ப்ரூஃபும் நாம் காட்டுறேன். ஃபோட்டோஸ் இருக்கு. அவ எனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் இருக்குது. க்ரேஸ் பாட்டிம்மா தான், எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும்னு அவங்க செத்துப் போறதுக்கு முன்னால சொல்லிட்டு செத்தாங்க. நானும் சான்ட்ராவும் ஒண்ணா சேந்து அழுதோம். அப்புறமா, சான்ட்ராவும் நானும் சத்தியம் பண்ணிக்கிட்டோம். உனக்கு நான் எனக்கு நீன்னு சொன்னோம். சீனி மாமா கூட எங்க ரெண்டு பேரையும் சேத்து ஃபோட்டோ எடுத்தாங்க. அருமை மாமா மட்டும் ட்ரான்ஸ்ஃபர் ஆகாம இருந்திருந்தா, இப்போ சான்ட்ரா லைஃப்ல சக்தி புகுந்திருக்கவே மாட்டான்.”

“டேய், எல் கே ஜில நடந்தத வச்சிக்கிட்டு இப்படி அப்பாவியா லவ் பண்ணிட்டு இருக்கியே, உன்ன நினைச்சா எனக்கு அழவா சிரிக்கவான்னு தெரியல. அவ ரெண்டு மூணு சிட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி சுத்தி வர்றப்போ நிறைய பேர பாத்திருப்பா. சிட்டி கல்ச்சர்ல எல்லார்ட்டயும் சோஷியலா பழகற மாதிரி தான் சக்தி கிட்டயும், மத்த பசங்க கிட்டயும் பழகியிருப்பா. பட்டிக்காட்டு பய, அத லவ்வுன்னு நினைச்சு அவன் வாழ்க்கையையும் தொலைச்சு, அவளயும் குட்டிச் சுவரா ஆக்கிட்டு, உன்னயும் இப்படிப் புலம்ப வச்சுட்டான்.”

“அண்ணே, அவ மட்டும் எங்கிட்ட நல்லா இருந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது. நான் பூ மாதிரி அவள வச்சுப் பாத்திருப்பேன்” ஆன்ட்ரூவின் குரல் தழுதழுத்தது.

செல்லராஜ் ஆதரவாக அவன் தோளில் கையை வைத்தான். “ஏண்டா பழசயே நினைச்சிட்டு இப்படி உளறிட்டு இருக்கே. நடக்கப் போறதப் பாரு.”

“அண்ணே நான் தான் தப்புப் பண்ணிட்டேன். அவ மத்தவங்க கிட்ட கலகலப்பா பழகி, சக்தி தப்பா புரிஞ்சு, தப்புத் தப்பா இப்படி செய்யறதுக்குள்ள, நான் சான்ட்ராகிட்ட என்னோட லவ்வ சொல்லியிருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா இனியும் இதே தப்ப செய்ய மாட்டேன். கண்டிப்பா சான்ட்ராவோட வாழ்க்கை நல்லா இருக்கறதுக்கு என் உயிரக் கூட குடுப்பேன்.”

“ஏண்டா இப்படி? உயிரக் குடுக்க உனக்கு ஆசை தான். ஆனா வழி இல்லியே? பாரு உங்க மாமாவுக்கும் உங்க அப்பாவுக்கும் சண்ட. உனக்கும் கொரோனா வந்து எதுவும் செய்ய முடியாம வீட்டுலயே இருக்க வேண்டியது வந்துருச்சு.”

ராசம்மா இளநீரைக் கொண்டு வந்து கொடுக்க, முதல் இளநீரை ஆன்ட்ரூவிடம் கொடுத்தார் செல்லராஜ்.

“அய்யா இன்னும் ரெண்டு எளனி வெட்டட்டுமா?” பம்ப் செட் அருகே இருந்த தென்னை மரத்தின் மேல் இருந்து கத்தினார் தம்பு.

“போதும் அண்ணாச்சி” என்ற செல்லராஜ், “ஆன்ட்ரூ இன்னும் ஒண்ணு இருக்குது உனக்கு. போதுமா இன்னொண்ணு வெட்டச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

“போதும் அண்ணே” என்றபடியே அவர்கள் உட்கார்ந்திருந்த வரப்பில் இருந்து எழுந்து கால்களில் ஏறியிருந்த எறும்புகளைத் தட்டி விட்டபடியே, கால்களுக்கு அருகே இருந்த எறும்புப் புற்றை விட்டு சிறிது நகர்ந்து உட்கார்ந்தான்.

“ஆன்ட்ரூ, நீ ஒரு பொண்ண காதலிக்கிற மாதிரி ஏன் கடவுள நேசிக்க முடியல?”

“அண்ணே நான் ஒரு ஆம்பள. நான் பொண்ணத் தான லவ் பண்ண முடியும்?”

“நான் சான்ட்ராவோட உனக்கு இருக்கற லவ்வயும், ஆண்டவர் மேல் உனக்கு இருக்கற அன்பையும் கம்பேர் பண்ணிப் பாக்கச் சொல்றேன்.”

“அண்ணே அது வேற இது வேற. கடவுள் ஒரு தடவ எனக்கு காட்சி குடுக்கட்டும், அப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டு நான் சாமியாராப் போயிருதேன்.”

“நான் சொன்னத ஒரு பேச்சுக்காவது யோசிச்சு எனக்கு பதில் சொல்லேன்.”

“ஹார்மோன்ஸ் அண்ணே. நம்ம கன்ட்ரோல்ல என்ன இருக்கு? எதப் பாத்தாலும் அவ நினைப்பு தான். சுத்திச் சுத்தி, ஏதோ ஒரு மேஜிக் மாதிரி. தெரியல அண்ணே, சான்ட்ரா மட்டும் கிடைக்கலன்னா நான் பைத்தியம் ஆயிருவேன் அல்லாட்டி செத்துப் போயிருவேன்னு நினைக்கிறேன்.”

“இப்போ சான்ட்ராவோட நினைப்பு உனக்கு இருக்கற மாதிரி, ஆண்டவரப் பத்தி நினைச்சுட்டு, இப்போ நீ ஆண்டவர நினைக்கிற அளவுக்கு சான்ட்ராவப் பத்தி நினைச்சா எப்படி இருக்கும்?”

“உண்மையிலேயே அது சூப்பராத் தான் இருக்கும். ஆனா என்னால அதுல்லாம் முடியுமான்னு சந்தேகமா இருக்கு. சான்சே இல்ல.”

“நானும் உங்க அண்ணியும் லவ் பண்றப்போ நான் ஆண்டவரத் தான் முதலாவதா நினைச்சிட்டு இருந்தேன். அதனால எனக்கு உன்ன மாதிரி பிரச்சன வரல. அதுக்கும் மேல எங்க ரெண்டு பேருக்குமே வேலை இருந்தது, ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க. சர்ச்ல யூத் ஊழியம் இருந்தது. வீட்டுல கடன அடைக்கறது, கார், வீட்டு லோன் இது எல்லாம் இருந்ததுனால உன்ன மாதிரி இப்படி பைத்தியமா இல்ல. அதனாலத் தான் நான் சொல்றேன், கொஞ்ச வருஷம் எல்லாத்தையும் லூஸ்ல விடு.”

“நான் தான் சொல்றேனே, எனக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மட்டும் கிடைச்சுட்டுதுன்னா நான் எத்தன வருஷம்னாலும் காத்துக்கிட்டு இருப்பேன்.”

“இப்போ அப்படித்தான் சொல்லுவ. அப்புறமா செல்ஃபோன்ல பேசணும்னு தோணும், அப்புறம் நேரில பாக்கணும்னு இருக்கும். இது எல்லாமே ஒரு ச்செய்ன் ரியாக்‌ஷன் மாதிரி. நான் நீ எல்லாத்தையும் மறந்துருன்னு சொல்லல. கர்த்தர் கையில எல்லாத்தையும் குடுத்துட்டு நிம்மதியா இரு. நடக்க வேண்டிய காலத்துல எல்லாம் நல்லா நடக்கும். என்ன வந்தாலும் ஏத்துக்கிறதுக்கு கர்த்தர் பலம் தருவார்.”

“அண்ணே இன்னிக்கு காலைல ஈசாக்க பலி உடுறதுக்கு ஆபிரகாம் மலைக்குப் போனதத்தான் வாசிச்சேன். அதே மாதிரி, கர்த்தர்ட்ட சான்ட்ராவ ஒப்புக்குடுத்து ஜெபம் பண்ணுனா, ஆபிரகாமுக்கு ஈசாக்கத் திரும்பக் குடுத்த மாதிரி அவர் அவள எனக்குத் திரும்பத் தந்துருவாரா?”

“ஆன்ட்ரூ, ஆன்ட்ரூ” அவன் நிலையைக் கண்ட செல்லராஜ் உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டு சொன்னார், “தம்பி, உன்னோட நிலம எனக்குப் புரியுது. நாம கர்த்தர் கிட்டவே ஜெபம் பண்ணுவோம்.”

அந்த வரப்பில் அவர்கள் இருவரும் முழங்கால் போட்டு ஜெபிக்கும் போது செல்லராஜ் அண்ணன் ஆன்ட்ரூவின் சார்பாக கண்ணீரோடு ஜெபித்ததில் ஆன்ட்ரூ அதிகமாகவே உருகிப் போயிருந்தான்.

“அண்ணே நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். சொல்லுங்க அண்ணே. எனக்கே என்ன நினைச்சு வெக்கமா இருக்கு.”

“ஒண்ணும் இல்ல. கர்த்தாவே நீங்க தான் என் வாழ்க்கையில எல்லாமே. உங்களுக்குப் பிரியமானது எனக்குப் பிரியம். நீங்க தான் என் வாழ்க்கையில எல்லா ஏரியாவுலயும் ஃபுல் அத்தாரிட்டியா இருக்கணும். அப்படின்னு ஜெபம் பண்ணு. இதத் தான் இரட்சிப்பு, மனம் திரும்புதல்னு சொல்வாங்க. இப்போ இந்த வாக்கு மட்டும் கர்த்தருக்கு குடு. மத்த டீட்டெய்ல் எல்லாம் நான் உனக்கு விளக்கமா சொல்றேன்.”

மதிய உணவு முடிந்து, சிறிது நேரம் இருவரும் பைபிள்களை உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

கருப்பட்டி காப்பியுடன், வறுத்த வேர்க்கடலையும் தோட்டத்திலேயே இருந்து வந்தது என்று அறிந்த போது ஆன்ட்ரூவுக்கு இது வரைக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ இனிமையான அனுபவங்களைத் தவற விட்டது போலத் தோன்றியது. அவனைச் சுற்றி தெரிந்தவைகள் எல்லாமே பெரும் மழைக்குப் பின் சுத்தமான தரையைப் போல இருந்தன. மாட்டுச் சாணி கூட ஃப்ளோரசன்ட் நிறத்தில் தெரிந்தது. ஏதோ ஒரு ஆன்மீக டூயட் பாடல் பாடியது போல அவனது இதயம் ரிதம் கொடுக்க, அவன் மனதுக்குள்ளேயே ஒரு புதிய ராகம் உருவாகியிருந்தது. ‘சான்ட்ரான்னா யாரு?’ என்று கேட்பான் போலத் தெரிந்தது.

“இன்னிக்கு டேக் அவே என்ன ஆன்ட்ரூ?”

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். இந்த வசனம் இருக்கற இடத்த மனப்பாடம் பண்றதுக்கு ஒரு டெக்னிக் வச்சிருக்கேன். ஆன்ட்ரூ ஜான் முதலாவது வேவ் கொரோனா சீசன், நாலாவது மாசம் ஏப்ரல், 19 ஆம் தேதி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *