வருடம் மிக வேகமாக ஓடிவிட்டது. சான்ட்ரா இப்போது இரண்டாம் ஆண்டு படிப்பை ஆன்லைனில் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். ஆன்ட்ரூ இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு தொடர்கிறான். பெரிதாக எந்த நிகழ்வும் இல்லை. சான்ட்ராவுக்கும் சக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலத் தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனாலும் சான்ட்ராவின் 18 ஆவது பிறந்த நாள் அன்று எல்லோருமே சிறிது கவனமாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
செல்லராஜின் தோட்டத்துக்கு எல்லோரும் போகலாம் என்று முடிவு செய்தார்கள். பழைய பகையை எல்லாம் மறந்து அருமைநாயகமும், செல்லராஜின் குடும்பத்தாரும் அன்று தான் மனம் விட்டுப் பேசினார்கள். சான்ட்ரா கேக் வெட்டினாள். சிறுபிள்ளைகளுடன் நன்றாகவே விளையாடினாள்.
ஆன்ட்ரூவின் வீட்டாரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் சான்ட்ராவின் அப்பாவும் ஆன்ட்ரூவின் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் முகத்தைப் பார்த்து பேசிக் கொள்ளவே இல்லை. இது செல்லராஜுக்கும், அலெக்சான்டருக்கும் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது.
மாலை காஃபி டிஃபனுக்குப் பின் வீடு திரும்புவதாக யோசித்திருந்தார்கள். அங்கிருந்த குச்சிகள், செங்கல்கள், மண் பானை என்று சாதாரண கிராம ஸ்டைலில் கருப்புகட்டி காப்பியும், அவித்த பயறும் அங்கிருந்த அனைவருக்குமே வித்தியாசமாக இருந்தது. எல்லோருமே வாழை இலையில் வைத்து பயறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருந்த ஐந்தாறு தம்ளர்கள் மீண்டும் மீண்டும் பம்ப் செட் தண்ணீரில் கழுவப்பட்டு காப்பி பரிமாற பயன்பட்டன.
ஆன்ட்ரூவிடம் தனியாகப் பேசக் கிடைத்த ஒரு சிறிய வாய்ப்பில் சான்ட்ரா அவனிடம் “ஹாய்” என்று மட்டும் சொல்லிவிட்டு, “நான் காலேஜ், ஹாஸ்ட்டல்னு இருந்திருந்தா இன்னிக்கோ நாளைக்கோ சக்தி வந்து என்னக் கூட்டிட்டுப் போயிருப்பான். நானும் அவனுக்கு குடுத்த வாக்க காப்பாத்துவேன். அவனும் எனக்குக் குடுத்த ப்ராமிஸ கீப் அப் பண்ணுவான்னு நினைக்கிறேன். நான் பிற்காலத்துல கில்ட்டியா ஃபீல் பண்ணாம இருக்கணும்னா, எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்.”
“சொல்லு சான்ட்ரா, கண்டிப்பா என்னால முடிஞ்சத செய்றேன்.”
“உன்னால முடியும். அது எனக்குத் தெரியும்.”
“சரி சொல்லு.”
“சக்தியப் பாத்து ஒரே ஒரு மேட்டர் மட்டும் எனக்காகக் கேக்கணும்.”
“அவன் எங்கிட்ட பேச மாட்டான். ஒரு தடவ எங்க ரெண்டு பேருக்கும் சண்ட வந்திருச்சு.”
“என் பேர சொல்லு அவன் கண்டிப்பா உன்ன நல்லா ட்ரீட் பண்ணுவான்.”
அலெக்சான்டருக்குத் திடீரென ஒரு ஃபோன் கால் வந்தது. பதட்டமாக இருந்தான் அலெக்ஸ். செல்லராஜிடம் ஓரமாகப் போய் மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான். தன் பையிலிருந்து கார் சாவியை செல்லராஜிடம் கொடுத்துவிட்டு சட்டென்று தோட்டக்கார அண்ணாச்சியுடன் அவர் பைக்கில் வேகமாக வெளியேறினான்.
எல்லோரும் “என்னாச்சு?” என்று கேட்க விரும்பினார்கள். செல்லராஜ் தான் சான்ட்ராவின் அப்பாவிடம் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் கிணற்றின் சுவரில் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அருமைநாயகம் பேயறைந்தது போல இருந்தார். செல்லராஜ் தைரியமாகவும், தெளிவாகவும் பேசிக் கொண்டிருந்தான்.
செல்லராஜ் தன் காரை எடுத்துக் கொண்டு, ஆன் ட் ரூவையும் அவன் அப்பா அம்மாவையும் காரில் ஏறச் சொல்லி, “நீங்க எல்லாம் இங்கேயே இருங்க. நான் திரும்ப வந்து உங்கள எல்லாம் கூட்டிட்டுப் போறேன். உங்க கார ஓட்டறதுக்கு என் ஃப்ரெண்ட் ஒருத்தன கூட்டிட்டு வர்றேன்.”
எல்லோரும் குழப்பத்தில் இருக்கும் போது லீலா அம்மா அருமைநாயகத்திடம் போய் “என்னாச்சு?” என்று கேட்கும் போது சான்ட்ராவும் அருகில் இருந்தாள். “யாரோ ஒருத்தன் நம்ம வீட்டு காம்பவுண்ட்ல ஏறி குதிச்சிருக்காங்க. அப்போ காம்பவுண்ட் ஓரமா போற ஈ பி லைன்ல ஷாக் அடிச்சு நம்ம காம்பவுண்டுக்குள்ள விழுந்துட்டானாம். அலெக்ஸ் போய் பாத்துக்கிறேன்னு சொன்னான். ஏதும் பிரச்சனைன்னா பெருமாள வரச் சொல்லிருக்கேன். நாம இப்போதைக்கு திருச்சிக்குப் போகணுமாம். ரெண்டு நாளாச்சும் ஆகும். எல்லாம் நார்மலா ஆகறதுக்கு.”
“யாரு திருடனா?” சான்ட்ரா கேட்டாள்.
“தெரியல” என்று அப்பா சொல்லவும், மெதுவாக அவள் சிறு பிள்ளைகளைப் பார்த்துப் போனாள்.
குரலைத் தாழ்த்தி மனைவியிடம் சொன்னார் அருமைநாயகம், “யாரோ சக்தியாம். சான்ட்ராவுக்கு தெரிய வேண்டாம்னு சொன்னான். உனக்கு அவன் யாருன்னு தெரியுமா?”
“ம்… ஹூம்” என்றார் லீலா அம்மா.