MicYell.com

...open minds matters

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நான் தமிழ்ப்படுத்திய என் நண்பனின் கதை

 

 

ஒவ்வொரு நாளும் நான் என் மானிட்டரின் முன் உட்காரும் போதும் ஜி டாக்கிலிருந்து வந்து
”ஹாய் குட் மார்னிங்  have a gr8 day” என்று சொல்லும் ஒரு பாப் அப். அதைப்பார்த்ததும் என்                             முகத்தில் பூக்கும் புன்முறுவல்.

நான் நேரில் பார்த்திராத அவள் ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். காலப்போக்கில் நல்ல நண்பர்களானோம் நாங்கள். எப்போதெல்லாம் நான் பிரச்சனையுடன்                         யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேனோ அப்போதெல்லாம் அதைப் பகிர்ந்து கொள்ள                   நான் தேர்ந்தெடுப்பது அவளைத் தான் ஏனென்றால் அவள் எப்போதுமே ஆன் லைனில் இருந்து தான்                  வேலை செய்து கொண்டிருப்பாள்.

எப்போதுமே ”டோண்ட் ஒர்ரி நான் ப்ரே பண்ணிக்கிறேன்” என்று பதில் தருவாள்.

அந்த ஒரு வரி என்னைச் சரியாக்கிவிடும்.

பிரச்சனை முடிந்ததும் சொல்வாள், “நான் சொன்னேன் இல்லையா பிரச்சனை சரியாயிடும்னு?” என்பாள்.

நாட்கள் கடந்தன... சில நாட்களாகவே ஜி டாக், பாப் அப்புகள் என் மானிட்டரில் முளைப்பதில்லை,                  குறிப்பாக அவளுடையது.

ஒரு வாரத்துக்குப் பின் காரணம் கேட்டு நான் அனுப்பிய என் மெயில் பதில் கொண்டுவரவில்லை.
 
சில நாட்களுக்குப் பின் மீண்டும் அவளது வரி பாப் அப்பானது. "hi good morning  have a gr8 day"

மகிழ்ந்தேன்... ”ஏன் இத்தனை மவுனம்” என்றேன்.

”வேலையிலிருந்து தூக்கிட்டாங்க” என்றாள்

”என்ன ஆச்சு” ஊமையாகிப் போன நான் கேட்டேன்.

“வழக்கம் போல வேலையைச் செஞ்சுட்டு இருந்தேன். வெளியே போக வழியக் காட்டினார் மானேஜர்” என்றாள்.

பதில் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

" r u there". என்றாள்.


பாரமான இருதயத்துடன் என் இடது கை சுட்டு விரலால் "s" சொன்னேன்.

“கடவுள் கைவிட மாட்டார்னு எனக்குத் தெரியும். விலகவும் மாட்டார். இப்போ வேலை தேடிட்டுத் தான் ஆன்லைன்ல இருக்கேன்” என்றாள்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு...

”டோண்ட் ஒர்ரி நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” என்றேன்.

அவள் ஸ்மைலி மூலம் சிரித்தாள்.

நான் அழுதேன்.


எட்வினா கார்த்திகா ராஜ்குமார்.

 

அடுத்த தேர்தலுக்கு முன்னால அய்யா!

 

(என் நண்பர் Bob Clements அவர்களது அனுமதியுடன் இதை தமிழாக்கியிருக்கிறேன். அனுமதியில்லாமல் உபயோகிக்காதீர்கள். அவர் பெரிய எழுத்தாளர் காப்பி ரைட் எல்லாம் வைத்திருப்பார். கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் அவரது இணையத்தில் இன்னும் அதிக படைப்புக்களைப் பாருங்கள்)

பொதுத் தேர்தல் பற்றி அறிவிப்புகள் இப்போது தான் வந்திருக்கின்றன. ஒலி பெருக்கிகளின் கூச்சல்களும், குழப்பமான குரல்களும் சத்தமாக ஒலிக்கப் போகின்றன. நான் என் வீட்டு ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்து எழுதத் துவங்கும் போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. நான் எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தேன். மணி திரும்பவும் ஒலித்தது, பொறுமையாக இன்னும் சத்தமாக. கோபத்துடன் கதவை நோக்கி நடந்தேன். திறந்தால் இளித்துக் கொண்டிருந்த ஒரு முகம் கைகளைக் கூப்பிக் கொண்டிருந்தது.

"வணக்கம் அய்யா" இளிக்கும் முகம் என் கைகளைக் குலுக்கவும் என்னைத் தாண்டி வீட்டுக்குள் போகவும் முயற்சி செய்து கொண்டே சொன்னது, "நான் உள்ளே வரலாமா?".

"வேண்டாம்! உங்கள எனக்குத் தெரியாது" என்றேன் நான்.

"என்னை உங்களுக்குத் தெரியும் அய்யா" அகலமான இளிப்புள்ள முகம் என்னைக் கட்டிப்பிடிப்பதற்காக கைகளை நீட்டியது.

"இல்ல எனக்குத் தெரியாது"

"உங்களுக்குத் தெரியும்"

"இல்ல எனக்குத் தெரியாது"

"அஞ்சு வருசத்துக்கு முன்னால நாம சந்திச்சிருக்கோம் அய்யா"

"எங்கே?"

"இங்கேயே தான் அய்யா"

"இங்கேயா?"

"ஆமா அய்யா"

"இங்க எதுக்கு சந்திச்சோம்?"

"உங்க கிட்ட ஓட்டுக் கேக்க வந்தேன் அய்யா"

"ஓஹோ, நீங்க...?"

"பாரளுமன்றத்துல உங்களோட குரல் நான் தான் அய்யா. இப்போ நான் உள்ள வரலாமா?"

"கூடாது"

"ஏன் அய்யா?"

"உங்களப் பாக்க நான் எத்தன தடவ வந்தேன் அப்படிங்கறது உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியாது அய்யா"

"அப்ப எல்லாம் உங்களுக்கு நேரம் இல்ல. நீங்க எப்பவுமே பிசியா இருந்தீங்க, ரெம்ப பிசி. உங்க ஆளுங்க என்னத் துரத்தி விட்டாங்க. உங்க ஆஃபீசுக்கு வெளியில அடியாள்கள் நின்னுக்கிட்டு கேலி பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா? கண்டிப்பா உங்களப் பாக்கணும்னு வற்புறுத்துனப்போ அவங்க என்ன கிட்டத்தட்ட அடிக்கவே செஞ்சுட்டாங்க"

"எதுக்காக என்னப் பாக்க வந்தீங்க அய்யா?"

"ஊரு முழுசும் ரோடு ரிப்பேர் ஆகிக் கிடக்குது. எங்க ஏரியாவுல எங்க குழாயத் தவிர எல்லா எடத்துலயும் தண்ணி வருது. ஒவ்வொரு நாளும் அடிதடி அதிகமாயிட்டே வருது. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"எழுதிட்டு இருக்கேன் அய்யா"

"இப்பவா?"

"நீங்க எனக்கு ஓட்டுப் போட்டீங்கன்னா நான் எல்லாத்தையும் செய்துடுவேன் அய்யா"

"இதத் தானே போன தடவையும் சொன்னீங்க?"

"அப்படியா அய்யா? நிறைய மக்கள் கிட்ட நான் பேசறதால எல்லாம் ஞாபகத்துல இருக்கறதில்ல அய்யா"

"ரோடு எல்லாம் சரி பண்ணுவீங்களா?"

"உங்க ஓட்டு தான் அதுக்கு உத்தரவாதம்"

"தண்ணி வருமா?"

"என்னோட சின்னம் வாழை இலை அய்யா"

"குப்பைத் தொட்டிய எல்லாம் சுத்தம் பண்ணுவீங்களா?"

"இது தான் உங்க பூத் நம்பர் அய்யா"

"எல்லாத்தையும் எழுதிக்கிட்டீங்களா?"

"எல்லாத்தையும் எழுதல அய்யா: நாலாம் வகுப்பு வரைக்கும் நாங்க மெதுவாத்தான் எழுதிப் படிச்சோம் அய்யா"

"அப்படின்னா எல்லாத்தையும் எப்படி ஞாபகத்துல வச்சிருப்பீங்க?"

"தேர்தல் முடிஞ்சதும் என்னோட ஆஃபீசுக்கு வாங்க அய்யா"

"ஆனா என்னப் பாக்கறதுக்கு உங்களுக்கு நேரமே இருக்காதே?"

"அப்படின்னா நானே உங்களப் பாக்க வர்றேன் அய்யா"

"எப்போ?"

"அடுத்த தேர்தலுக்கு முன்னால அய்யா"


http://www.bobsbanter.com/indian-political-satire/before-the-next-election-sir/

 

இது தாங்க நெட் ஒர்க்

"ஒரு மாசமா அலையா அலஞ்சும் நடக்காத ஒரு விஷயம் ஒரு அரசாங்க ஆஃபீஸ்ல இன்னிக்கி நடந்திருக்கு." என்றார் என் நண்பன் மாயா.
அந்தக் காரியம் நடப்பதற்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பதவி அதிகாரம் எதையும் பயன்படுத்தவில்லை. ஒரு சின்னத் தொடர்பை ஏற்படுத்தினோம்.
என் நண்பருக்கு காரியம் நடக்க வேண்டும். அதே துறையில் இன்னொரு ஊரில் இருக்கும் என் நண்பர் குணாவிடம் கேட்டேன் " சம்பத்ங்கறவரப் போய் பார்த்து என் பெயரச் சொல்லச் சொல்லு" என்றார். குணா பெயரைச் சொன்னதும், மாஜிக் நடந்திருக்கிறது. "ஒரு மாத வெட்டி அலைச்சலில் இன்னிக்கித் தான் உருப்படியா ஒரு அசைவு நடந்திருக்கு" என்றார் மாயா. மட்டுமல்ல "குணா பெயரைக் கேட்டதும் அதிக சந்தோஷமா ஆயிட்டாரு. அவரு ஃபோன் நம்பர் இருக்கான்னு கேட்டார்" என்றார்.

நடந்தது என்ன? "அந்த ஆள ஒருத்தனும் மனுஷனா மதிக்காம இருந்தப்போ நான் அவர மதிச்சேன் அவ்ளோ தான்" என்றார் நண்பர் குணா. உண்மையிலேயே மனிதர்களை மதிக்கிறவர் அவர். "நீங்க எப்பவும் இருக்கற மாதிரி தானே இருந்திருக்கீங்க. அதுக்கே இத்தன நடக்குதுன்னா, எல்லா மக்களும் இப்படி இருந்தா, அல்லது நாம கொஞ்சம் எக்ஸ்ட்ரா முயற்சி எடுத்தா, ஒலகம் எப்படியோ மாறிடும் இல்ல" என்றேன் நான்.

இது தான் நெட் ஒர்க்.
நல்லவங்களோட நெட் ஒர்க் நல்ல நெட் ஒர்க்.
நல்லது பரவும் நெட் ஒர்க்.
 

மக்கள் சக்தி.


"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்," "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" இந்தக் கூற்றுக்களெல்லாம் சுய உதவிக் குழுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், சமூக சேவைக் குழுக்கள் ஆகியவறால் சிறிது  உயிர்பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். ஆனாலும் பெரும்பாலான மக்கள் மாக்களாகத் தான் தொடர்ந்து கொண்டுவருகின்றனர். நேற்று ஒரு கடையில் மனுக்களை பிரதியெடுக்க ஒரு மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட்டம் கூடினால் தான் அரசாங்கம் திரும்பிப் பார்க்கிறது என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சி தந்தது. மக்கள் சக்தி பெருகுகிறதே என்ற மகிழ்ச்சி அது. ஆனால் அடுத்த வார்த்தை என்னை கலங்கடித்துவிட்டது. "கூட்டத்துல உக்காந்திருக்கவங்க கிட்ட ஏன் மறியல் செய்றீங்கன்னு கேட்டா, முன்னால நிக்கிறவங்க கிட்ட கேளுங்கன்னு சொல்லிடுறாங்க" இங்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரவில்லை. பணம் தான் பேசுகிறது. பெரிய அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். சின்ன அரசியல்வாதிகள் கவனத்தைத் திருப்புவதற்காக பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது தான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி அரசியல் தலைவர்களுக்கு அக்கறை வரும். அதுவும் இதுவரை அக்கறை இல்லாதவர்கள் எல்லாரும் சில தீக்குளிப்புகள், மக்களின் அனுதாபம் இவற்றைப் பார்த்த பின் தங்களுக்கும் இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். பல தலைவர்கள் உண்மையான அக்கறை இருக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மை மக்கள் எங்கே சாய்கிறார்களோ அங்கே தான் அக்கறையும் இருக்கிறது. மக்களுக்கு சக்தி இருக்கிறது. பல நேரங்களில் அது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது அல்லது பெருச்சாளிகளால் திருடப்பட்டு பணமாக்கப்படுகிறது.
 

Election

வருஷத்துக்கொரு தேர்தல்
மாதத்துக்கொரு நலத்திட்டம்
வாரத்துக்கொரு பிரபலத்தின் வருகை
வசதிகள் கிடைத்தால் போதும் எங்களுக்கு.
 

விளம்பரம்

இதுவரை ஒரு பயலைக் கூடத் திரும்பிப் பார்த்திராத அடுத்த அலுவலகத்து திவ்யா வசீகரனைப்பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாள்.

வசீகரனுக்கு கை கால் ஓடவில்லை. கிள்ளிப்பார்க்கவும் தோணவில்லை.

இந்த சட்டை எந்தக் கடையில் வாங்கினீங்க?”

கடையின் பெயரைச் சொன்னான்.

செல்லம் நான் திவ்யா பேசறேன். உனக்கு சட்டை வாங்கித்தர்றேன்னு சொன்னேனில்ல…. வா…. வடக்கு மாடவீதியில….” மொபைல் பேச்சை அவள் தொடர, தான் வேலை செய்யும் விளம்பரக் கம்பெனியை நோக்கி இரண்டு இரண்டு படியாகத் தாவி ஓடினான் வசீ.

யுரேகா” கத்திக்கொண்டே உள்ளே நுழைந்து தன் கான்சப்ட்டைச் சொல்ல

சூ….ப்ப்பர்…” வசீகரன் மேஜையைச்சுற்றி அனைவரும் கத்தினர் கோரஸாக.

ஜான் ஆப்ரகாம்…

ஷாருக் கான்…

மந்திரா பேடி….

ஜாக்கி சான்….

க்ராஃபிக்ஸ்….

அந்த மாடலைச் சுற்றி காமரா 360 டிகிரி சுற்றி வந்து நிற்க… லீட் கிட்டார் அலற அரைக்கிறக்கத்தில் ஒரு பெண் கிசு கிசுத்தாள்  இந்த சட்டை எங்கே வாங்கினீங்க “ அவன் ஜொள்ளு தெரிக்க கடைப் பெயரைச் சொல்ல அவள் தனது பாய் ஃப்ரண்ட்டை அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று சட்டை வாங்கிக் கொடுப்பதாக விளம்பரப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. வசீகரனுக்கு அடுத்த விளம்பரப்படங்களுக்கு வாய்ப்புக்களும் வந்து கொண்டிருந்தன. 

ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டே வந்த வசீ மனதில் சொல்லிக் கொண்டான். ‘அந்த திவ்யாவுக்கு ஒரு நாள் ட்ரீட் குடுக்கணும். அவளோட பாய் ஃப்ரண்டுக்கும் சேத்துத் தான்.
 

அடையாளப் பரிமாற்றம்

எனக்கென்று அடையாளம் இல்லை

கிடைக்கும் வரை உனதைப் பயன்படுத்தட்டுமா?

உனது உன்னுடையது தானா?

உண்மையானது தானா?

உனதும் நகல் தானா?

 

மதயானை

சர்வ சமய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அய்யாவ அழைச்சிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” ஒரு கிராமத்துக் கூட்டம் பவ்யமாகக் கேட்டது.

அய்யாவுக்கு ஒரு கோர்ட் கேஸ் இருக்கு. அடுத்த வாரம்னா பரவாயில்ல.” அவர்களை அனுப்பி வைத்த அய்யாவின் உதவியாளர் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார், நம்ம மதத்துக்குள்ளால இணக்கத்துக்கு வழியில்ல கோர்ட் கேஸ்-இன்னு ரெண்டு மூணு பிரிவுகளுக்குள்ளால அடிச்சிக்கிட்டு இருக்கோம். இதுல சர்வ மதப் பிரார்த்தனை தான் குறைச்சலாம்.’
 

பச்சைத் தண்ணீர்…

பாலைவனத்தில்

ஒரு ஓட்டைக் குழாயாய்

என்னைச் சுற்றி

பசுமை பரவ

குழாயில் தண்ணீருடன்

ஓட்டையும் தா.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

Latest Comments

Polls

Joomla! is used for?
 

Who's Online

We have 1 guest online

Advertisement

Featured Links: