(என் நண்பர் Bob Clements அவர்களது அனுமதியுடன் இதை தமிழாக்கியிருக்கிறேன். அனுமதியில்லாமல் உபயோகிக்காதீர்கள். அவர் பெரிய எழுத்தாளர் காப்பி ரைட் எல்லாம் வைத்திருப்பார். கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் அவரது இணையத்தில் இன்னும் அதிக படைப்புக்களைப் பாருங்கள்)
பொதுத் தேர்தல் பற்றி அறிவிப்புகள் இப்போது தான் வந்திருக்கின்றன. ஒலி பெருக்கிகளின் கூச்சல்களும், குழப்பமான குரல்களும் சத்தமாக ஒலிக்கப் போகின்றன. நான் என் வீட்டு ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்து எழுதத் துவங்கும் போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. நான் எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தேன். மணி திரும்பவும் ஒலித்தது, பொறுமையாக இன்னும் சத்தமாக. கோபத்துடன் கதவை நோக்கி நடந்தேன். திறந்தால் இளித்துக் கொண்டிருந்த ஒரு முகம் கைகளைக் கூப்பிக் கொண்டிருந்தது.
"வணக்கம் அய்யா" இளிக்கும் முகம் என் கைகளைக் குலுக்கவும் என்னைத் தாண்டி வீட்டுக்குள் போகவும் முயற்சி செய்து கொண்டே சொன்னது, "நான் உள்ளே வரலாமா?".
"வேண்டாம்! உங்கள எனக்குத் தெரியாது" என்றேன் நான்.
"என்னை உங்களுக்குத் தெரியும் அய்யா" அகலமான இளிப்புள்ள முகம் என்னைக் கட்டிப்பிடிப்பதற்காக கைகளை நீட்டியது.
"இல்ல எனக்குத் தெரியாது"
"உங்களுக்குத் தெரியும்"
"இல்ல எனக்குத் தெரியாது"
"அஞ்சு வருசத்துக்கு முன்னால நாம சந்திச்சிருக்கோம் அய்யா"
"எங்கே?"
"இங்கேயே தான் அய்யா"
"இங்கேயா?"
"ஆமா அய்யா"
"இங்க எதுக்கு சந்திச்சோம்?"
"உங்க கிட்ட ஓட்டுக் கேக்க வந்தேன் அய்யா"
"ஓஹோ, நீங்க...?"
"பாரளுமன்றத்துல உங்களோட குரல் நான் தான் அய்யா. இப்போ நான் உள்ள வரலாமா?"
"கூடாது"
"ஏன் அய்யா?"
"உங்களப் பாக்க நான் எத்தன தடவ வந்தேன் அப்படிங்கறது உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது அய்யா"
"அப்ப எல்லாம் உங்களுக்கு நேரம் இல்ல. நீங்க எப்பவுமே பிசியா இருந்தீங்க, ரெம்ப பிசி. உங்க ஆளுங்க என்னத் துரத்தி விட்டாங்க. உங்க ஆஃபீசுக்கு வெளியில அடியாள்கள் நின்னுக்கிட்டு கேலி பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா? கண்டிப்பா உங்களப் பாக்கணும்னு வற்புறுத்துனப்போ அவங்க என்ன கிட்டத்தட்ட அடிக்கவே செஞ்சுட்டாங்க"
"எதுக்காக என்னப் பாக்க வந்தீங்க அய்யா?"
"ஊரு முழுசும் ரோடு ரிப்பேர் ஆகிக் கிடக்குது. எங்க ஏரியாவுல எங்க குழாயத் தவிர எல்லா எடத்துலயும் தண்ணி வருது. ஒவ்வொரு நாளும் அடிதடி அதிகமாயிட்டே வருது. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"
"எழுதிட்டு இருக்கேன் அய்யா"
"இப்பவா?"
"நீங்க எனக்கு ஓட்டுப் போட்டீங்கன்னா நான் எல்லாத்தையும் செய்துடுவேன் அய்யா"
"இதத் தானே போன தடவையும் சொன்னீங்க?"
"அப்படியா அய்யா? நிறைய மக்கள் கிட்ட நான் பேசறதால எல்லாம் ஞாபகத்துல இருக்கறதில்ல அய்யா"
"ரோடு எல்லாம் சரி பண்ணுவீங்களா?"
"உங்க ஓட்டு தான் அதுக்கு உத்தரவாதம்"
"தண்ணி வருமா?"
"என்னோட சின்னம் வாழை இலை அய்யா"
"குப்பைத் தொட்டிய எல்லாம் சுத்தம் பண்ணுவீங்களா?"
"இது தான் உங்க பூத் நம்பர் அய்யா"
"எல்லாத்தையும் எழுதிக்கிட்டீங்களா?"
"எல்லாத்தையும் எழுதல அய்யா: நாலாம் வகுப்பு வரைக்கும் நாங்க மெதுவாத்தான் எழுதிப் படிச்சோம் அய்யா"
"அப்படின்னா எல்லாத்தையும் எப்படி ஞாபகத்துல வச்சிருப்பீங்க?"
"தேர்தல் முடிஞ்சதும் என்னோட ஆஃபீசுக்கு வாங்க அய்யா"
"ஆனா என்னப் பாக்கறதுக்கு உங்களுக்கு நேரமே இருக்காதே?"
"அப்படின்னா நானே உங்களப் பாக்க வர்றேன் அய்யா"
"எப்போ?"
"அடுத்த தேர்தலுக்கு முன்னால அய்யா"
http://www.bobsbanter.com/indian-political-satire/before-the-next-election-sir/


