“அரட்டை பாப்” – ராபர்ட் க்ளெமெண்ட்ஸ். Title in bold big letters – all months the same.

கேரளாவுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்! – title of this month’s article – in smaller letters

எனக்கு வந்தது போலவே உங்களில் பலருக்கு வாட்ஸப்பில் ஒரு ஆடியோ பேச்சுத் துண்டு வந்திருக்கும். ஒரு ஆண்மணி கேரளாவின் வெள்ளத்தைப் பற்றி உரையாற்றி, கேரளாவுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள் என்றார். பணக்காரர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு எதுவும் தேவையில்லை, முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கும் கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார். அது முழுவதும் புளுகு மூட்டை தான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்னவென்றால் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆடியோவை மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சு நம்பும்படியாகவா இருந்தது? அந்த ஆளின் மென்மையான பேச்சு காரணமா? அந்த ஆள் ஜோடித்த கட்டுக்கதையான புள்ளி விபரங்கள் காரணமா? இவைகளை எல்லாம் நம்பும் வகையில் அழகாக பேக் செய்து கொடுத்துவிட்டார் அந்த ஆள். அதனால் தான் அந்த ஆடியோ வைரலாகப் பரவியதா?

இந்த புத்திகெட்ட ஃபார்வர்ட் காரணமாக எத்தனை பேர் கேரளாவுக்கு உதவி செய்வதை நிறுத்தியிருப்பார்களோ என்று நான் யோசித்துப் பார்த்தேன். அதையே ஒரு நண்பருக்கு அனுப்புவதற்கு முன்பாக எந்த கேள்விகளை எல்லாம் நாம் கேட்டுப் பார்க்க வேண்டும்? நாம் உண்மையை சரி பார்ப்பதே இல்லை. அல்லது பகுத்தறியும் மனதுடன் யோசிப்பது இல்லை. மாறாக வெற்றிப் பெருமிதத்துடன் அதை எடுத்து, அந்த ஆள் செய்தது போலவே நாமும் மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு மகிழ்ச்சிப் புன்னகை பூத்துக் கொள்கிறோம்.

ப்ரேக்கிங் ந்யூஸ்களும் கட்டுக்கதைகளும் என்ற தலைப்பில் பேசுவதற்குப் பல இடங்களுக்கு போன மாதம் நான் அழைக்கப்பட்டிருந்தேன். எனது பேச்சின் சுருக்கம் இது தான்:  நமது வாட்ஸப் மற்றும் ஈ மெய்ல் ஃபார்வர்ட்களில் நாம் ஒரு பத்திரிக்கை ஆசிரியரைப் போல செயல்படுகிறோம்.  நம் உண்மைத் தன்மையை நம்பியிருக்கும் பல ஃபாலோவர்கள் நமக்கு இருக்கின்றனர். நாம் எந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்பதில் நமக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த பொறுப்பை நீங்கள் அக்கறையாக எடுத்துக் கொள்கிறீர்களா?

உங்கள் செல்ஃபோனை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு சிறு நடை நடந்து போகலாம். பழங்காலத்து சாக்ரட்டீசை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம்.

“சாக்ரடீஸ், எனக்கு வந்த வாட்ஸப் மெசேஜ உங்களுக்கு அனுப்பி வைக்கட்டுமா?” என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

“ஒரு நிமிஷம் பொறு” என்று சொல்லும் சாக்ரடீஸ் தன் அறிவுப் பெட்டகத்திலிருந்து சின்னப் பலகாரங்களைக் கொடுக்கின்றார், “எந்த மெசேஜையும் ஃபார்வர்ட் பண்றதுக்கு முன்னால, ஒரு சின்ன பரீட்சை வச்சுப் பாக்கணும் நீ. முதலாவது வடிகட்டி, உண்மை. உனக்கு வந்த மெசேஜ், நீ ஃபார்வர்ட் பண்ணப் போற மெசேஜ் உண்மையிலேயே உண்மை தானா?”

“ம்…ம் இல்ல” தயக்கத்துடன் நீங்கள் பதிலளிக்கிறீர்கள், “உண்மையச் சொல்லப் போனா எனக்கு இன்னொருத்தங்க அனுப்புனது தான் அது.”

“சரி, அப்படின்னா இது உண்மையிலேயே உண்மையா இல்லியான்னு உனக்குத் தெரியாது. விடு, ரெண்டாவது வடிகட்டியப் பாப்போம்” சாக்ரட்டீஸ் தொடர்கிறார், “நன்மை அப்படிங்கற வடிகட்டி. நீங்க ஃபார்வர்ட் பண்ணப் போறது கேக்கறதுக்கும் வாசிக்கறதுக்கும் நல்லது தானா?”

“அது, வந்து நல்லது இல்ல தான்” நீங்கள் தடுமாறுகின்றீர்கள்.

“அப்படின்னா, நல்லது இல்லாத, உண்மையா இல்லியான்னு தெரியாத ஒண்ண மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கப் போற. சரி இன்னும் ஒரு டெஸ்ட், வடிகட்டி இருக்குது அதையும் பாத்துறலாம். அது தான் உபயோகம். நீங்க அனுப்பி வைக்கிற மெசேஜ் எல்லாருக்கும் உபயோகமா இருக்குமா? அதுவும் இந்தக் கேஸ்ல, கேரளாவுல இருக்கறவங்களுக்கு உபயோகமா இருக்குமா?”

“கண்டிப்பா இல்ல” நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள்.

“ம்.. நீங்க ஃபார்வர்ட் பண்ண நினைக்கிறது, உண்மையும் இல்ல, நல்லதும் இல்ல, உபயோகமாவும் இல்ல அப்படின்னா, அத ஏன் நீங்க அனுப்பி வைக்கணும்?”

“நன்றி சாக்ரட்டீஸ் ஐயா” அவமானத்தால் சிறிது குனிந்த முகத்துடன் நீங்கள் திரும்புகிறீர்கள் நிகழ்காலத்துக்கு.

“போய்ட்டு வாங்க” என்று சத்தமாகச் சொன்ன அந்த ஞானி, மெதுவாக என் காதுக்குள் கிசுகிசுத்தார், “பாப், மக்கள கொஞ்ச விழிப்பா இருக்கச் சொல்லு, ஏன்னா, உன் ஃபோனுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் எல்லாமே ஏமாத்துக்காரங்க கிட்ட இருந்து தான் வருது. நீங்க ஃபார்வர்ட் பண்ணலன்னா, அந்த செய்திங்க எல்லாம் யாரையும் பாதிக்காது.”

================================================================

ராபர்ட் க்ளமெண்ட்ஸ் பத்திரிக்கைகளில் பத்தி (Column) எழுத்தாளர்.  தினமும் இவர் எழுதும் பத்திகள் 60க்கும் மேலான பத்திரிக்கைகளில் வெளியாகின்றன. துபாயின் கலீஜ் டைம்ஸ் முதல் லண்டன் மார்னிங் ஸ்டார் வரை பல நாடுகளில் எழுதுகிறார். இந்தியாவில் கொல்கொத்தாவின் ஸ்டேட்ஸ்மேன் முதல் காஷ்மீரில் காஷ்மீர் டைம்ஸ் வரை, சென்னையில் ட்ரினிட்டி மிரர் வரை ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் இவரது எழுத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஹிந்தி, பஞ்சாபி, உருது போன்ற மொழிகளிலும் இவரது எழுத்துக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குருத்தோலைக்காக இவரது சில படைப்புக்களை தமிழாக்கம் செய்ய அனுமதி கேட்ட போது மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். 60 லட்சத்துக்கும் மேலான அவரது வாசகர்களில் நாமும் இணைந்து கொள்வது ஒரு மகிழ்வான அனுபவமே. ஆங்கிலத்தில் தினமும் உங்களுக்கு அவரது எழுத்துக்கள் வரவேண்டும் என்றால் உங்கள் வாட்ஸப் எண் மற்றும் பெயரை  ஈ மெய்ல் மூலம்  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள். rtgclements@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *