சிரஞ்சீவிக்கு அவசரம் ஒன்றும் இல்லை. ஆனாலும் காலையில் இருட்டோடேயே  எழுந்துவிட்டான். காகங்களின் கரைச்சல்களும், குருவிகளின் கீச்சுக் கத்தல்களும் நகரத்து இரைச்சல்களை விட இயந்திரங்களின் பீப் ஒலிகளை விட இனிமையாகத் தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். தூங்கிக்கொண்டிருக்கிற ஆசை மனைவியை லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது. “மேகலா இங்க இருக்கற நாள் ஒரு வேலயும் செய்யக்கூடாது” என்று அம்மா தடையுத்தரவு போட்டதால் தூங்கட்டும் என்று விட்டுவிட்டேன். இரவில் கூட கிராமத்து நினைவுகளை அவன் ஓட விட ரசிகையாய் மாறி நீண்ட நேரம் அவனைத் தூண்டித் துருவி பல காட்சிகளை மீண்டும் நிகழச் செய்தாள். நேயர் விருப்பமாகச் சில நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் கேட்டு கொட்டாவிக்குள் கலந்து கண்ணயரும் போது கண்டிப்பாக நடுராத்திரி தாண்டியிருக்கும்.

விழியோரத் துளி அழுக்குகளை இடது கைப் பெருவிரல் நடுவிரல் கூட்டணியால் ஒற்றி எடுத்துவிட்டு கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டான். அம்மா குக்கரின் விசிலை மிஞ்சும் குரலில் உதவிக்காரப் பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தாள். கடைசிப் படியில் இறக்கும் போது தான் பேஸ்ட் ப்ரஷ் சமாச்சாரங்களை மாடியிலேயே வைத்துவிட்டதை உணர்ந்தான். சட்டெனெத் திரும்ப மனமில்லை. வேப்பங்குச்சி என்ற மாற்று யோசனை வீட்டு முற்றத்துக்கு அவனை அனுப்பியது.

வேப்பங்குச்சியை ஒடிக்க மேலே ஏறிய போது கிளையிலிருந்த சிறுவயதில் நாங்கள் கட்டிய ஊஞ்சலின் தழும்பு அவன் மூளையின் மடிப்புகளில் சிறிது அதிர்வுகளை ஏற்படுத்தியது. “பாத்துடா…” அப்பா வயலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்.

“ஏண்டா உங்க பாக்கெட் பாலில இந்த மாதிரி மணம் இருக்குமா?  என்னத்த சுண்டக் காய்ச்சினாலும் பால் தண்ணியாத் தான் இருக்கும்.”அம்மாவின் காஃபி அதே பெரிய தம்ளரில் இன்னும் மணமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் அப்பாவின் கம்ப்யூட்டருக்கு என்ன பிரச்சனை என்று பார்த்துக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி. மூன்று நாட்களாக அதைப் பார்க்கத் தொடங்கி முடியவில்லை.     ஆறுமாதங்களுக்கு முன் அந்த கம்ப்யூட்டரை வீட்டில் வாங்கி வைத்து கொஞ்சம் இண்டர்நெட், சமாச்சாரங்களும் அப்பாவுக்கு சொல்லிக்கொடுத்திருந்தான். அவர்களது வெப் கேமரா மூலமான பேச்சுக்கள் எல்லாவுமே போன மாதம் முடிவுக்கு வந்தது. சிவப்பு எழுத்துக்களில் பல வைரஸ்கள் பற்றி எச்சரிக்கைகள் வந்ததுடன் கம்ப்யூட்டர் குடை சாய்ந்ததாக அப்பா சொன்னார். பக்கத்து டவுன் கம்ப்யூட்டர் கடைக்காரனை அப்பாவுக்குப் பிடிக்கவே இல்லை. “நீ வந்தப்புறம் பாத்துக்கலாம் டா” என்று சொல்லிவிட்டார்.

கம்ப்யூட்டரின் ஜாதகங்கள் சிடிக்கள் எல்லாவற்றுடன் அப்பா தரையிலேயே உட்கார்ந்து விட்டார்.  இப்போது அவன் ஏதோ நோண்டிக் கொண்டிருக்க மானிட்டர் நீலநிறத்திலேயே அதிக நேரம் ஓட “அப்பா, அம்மா ரெண்டு பேருமே இங்க வாங்க. இது முடியறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். நாம பேசலாம். மதியத்துக்கு மேல கிளம்பற அவசரத்துல இருப்போம்.” என்றான்.

“அப்பா நான் நல்லா யோசித்துப் பாத்து ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அண்ணனுக்கு நான் எதுவும் பணமா குடுக்கறாப்புல இல்ல. வேணும்னா சொத்துல என் பங்க எல்லாம் விட்டுக்குடுத்துடறேன் னு சொல்லிடுங்க.

அதற்குள் மேகலா அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். “நானும் சேந்துக்கலாமில்லியா உங்க பேச்சுக்கள்ல?”

“நீ தான் கண்டிப்பா இருக்கணும். இந்தப் பயகிட்ட படிச்சுப் படிச்சு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டிக்கிறான். உனக்கே தெரியும் இவன் இந்த ஊரு, இந்த வீட்டு மேல எவ்ளோ ஆசயா இருக்கறான்னு. அண்ணனுக்கு உதவி செய்யறது முக்கியம். நான் தான் அதையும் சொன்னேன். ஆனா ஒரு லோன் எடுத்துக் குடுத்துட்டா, மாசா மாசம் அண்ணன் காரனே திருப்பி அடச்சிடுவான். ஏற்கனவே அவனும் அவன் வீட்டுக்காரியும் லோன் எடுத்துட்டாங்க. நம்ம சொத்துக்களும் நம்ம கிட்டயே இருக்கும்னு சொல்றேன்.”

அம்மா மேகலாவுக்கும் காஃபி கொண்டு வந்தாள். “இதுல பாதி போதும் மாமி” சிணுங்கியபடியே சமையல் கட்டிற்குப் போனாள் அவள்.

“அவளும் சொன்னா. நான் எல்லாருக்கும் எங்கிட்ட ஒரே பதில் தான். அதே பதில் தான். கடன், மாசத் தவணை இல்லாத வாழ்க்கைக்காக நான் போராடிட்டு இருக்கறேன்… நான் எனக்கே லோன் போடறது இல்ல… அண்ணனுக்காகப் போட்டுட்டு காலம் பூராவும் பணத்த அடைக்கறது வேஸ்ட்… அவனே அடச்சாலும் கூட அவனுக்கு அது நல்லது இல்லன்னு சொல்லுங்க. அவனுக்கும் பொறுப்பு இருக்குதுன்னு தெரியணும். கஷ்ட்டப்படணும். என்னால முடிஞ்சதத் தான் நான் செய்வேன்.”

“ கூளுக்கும் மீசைக்கும் ஆசப்படக்கூடாது. அண்ணன் அந்த பிசினஸ் பண்ணி கடன் வாங்கறப்போ தெரிஞ்சிருக்கணும். இப்போ மானம் தான் பெரிசுன்னா, சொத்த வித்து கடன் அடைக்கச் சொல்லுங்க. சொத்த விக்கறது கவுரவம் குறைவுன்னா, கடன்காரண்ட தலை குனியறது அதவிட கவுரவக் குறைச்சல் தானே. என்னால முடியாதுப்பா.”

சிடிக்களைப் போட்டு இன்ஸ்டால் பண்ணிக் கொண்டே தொடர்ந்தான்.

“கவர்மெண்ட் வேலயில யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் அப்படின்னு சொல்வாங்க. இந்தக் காலத்துல யானை இருந்தாத்தான் ஆயிரம் பொன், இல்லாட்டி ஆயிரம் மண்ணு கூட கிடைக்காது. பென்ஷன், பி.எஃப் எதுவும் கிடையாது தெரியுமா? அடுத்த மாசம் அதே கம்பெனியில வேலையில இருப்போமா அப்படிங்கறதே உறுதி இல்ல. வீடு வாங்க, கார் வாங்க கடன், கிரடிட் கார்டு ஏராளமா கிடைக்கும். தினசரி ஃபோன் மேல ஃபோன் போட்டு கேட்டுட்டே தான் இருக்காங்க எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டு என்ன பண்றது. அண்ணன மாதிரி யாருக்கு எவ்வளவு வட்டி கட்டணும். வட்டி கட்டறதுக்கு யாருட்ட கடன் வாங்கணும்னு கணக்கு போட்டுட்டே இருக்க வேண்டியது தான்.”

“அப்பா இனிமே வாரா வாரம் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் கேக்கும். க்ளிக் பண்ணுனா போதும் அதுவே நெட்ல அப்டேட் ஆயிடும்.” அப்பா சுவராசியமில்லாமல் “ம்” சொன்னார்.

சிரஞ்சீவிக்கு மனதுக்குள் அப்பாவின் மென்மையான இருதயத்தை கத்தியால் கீறியது போல வேதனை இருந்தது. அம்மாவின் முகத்தையே அவனால் பார்க்கக் கூச்சமாக இருந்தது. வாரக்கடைசி இஞ்சிச் சாறு, அவ்வப்போது வேப்பிலைக் கஷாயம் சாப்பிட்ட ஞாபகம் வந்தது. தம்ளரில் இருக்கும் திரவம் காலியாகும் வரை அம்மா அங்கேயே நிற்பாள். அதிக பட்சம் பத்து நிமிடங்கள் கடத்தலாம், எப்படியும் குடித்துத் தானே ஆகவேண்டும். அதே நிலை தான் அவனுக்கும். அண்ணன் வீட்டுக்குப் போயிருந்த போது அவனுக்கு என்னிடம் பேசத் தயக்கம் நன்றாகவே தெரிந்தது.

“நாங்க சொல்றதச் சொல்லிட்டோம். எங்க காலம் முடிஞ்சு போச்சு. உங்க காலத்துல நல்லா இருக்கணும். அது தான் எனக்கு வேணும்.”

என்னோட முடிவச் சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். விளக்கமெல்லாம் அப்புறமா. விவரமா அனுப்பி வைச்சுடுவேன். இப்போ எல்லாருமே உணர்ச்சி வசப்பட்டு இருக்கறாங்க. எல்லாரும் அமைதியா இருக்கறப்போ வேணும் னா படிச்சுப்பாத்துக்கட்டும்… விவாதம் பண்ணுனா விரோதம் வரும், தேவையில்லாம அடங்கிப்போனா அட்டாக் பண்ணுவாங்க. அதான் என்னோட முடிவு இது தான் அப்படின்னு பாலிஷ்டா சொல்லிட்டுப் போயிருவேன்.

“நான் சம்பந்தப்பட்டிருக்கிற முடிவுகள்ல எனக்காக மத்தவங்க முடிவு எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்கறதெல்லாம் என்னோட பிரின்சிப்பிள்களுக்கு குறுக்கால நிக்க முடியாது.”

அவங்க காலத்துல பென்ஷன், ஜாப் செக்யூரிட்டி, கவர்மெண்ட் வேல மாச சம்பளம் எல்லாம் இருந்தது. இப்போ நிலைமையே வேற….

இப்போதய கதையப் பாக்கணும், எதிர்காலத்தப்பத்தியும் அதிகம் யோசிக்கணும்

அவள் அவனை பெருமையுடன் பார்த்தாள்… நான் என் குடும்பத்துக்குத் தல…. நீ என்னோட கழுத்து. உங்கிட்ட ப்ளீஸ் கேட்பேன்…  நீ விவாதம் பண்ணுனா நான் தோத்துடுவேன்.இதெல்லாம் நம்ம குடும்ப விவகாரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *