“குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி.”

“நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?”

“நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.. ஒண்ணு தெரியுமா? நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்.”

“எனக்குத் தெரியும்.”

“அப்புறமா ஏன்?”

“உண்மைய சொல்லட்டுமா?”

“அப்போ இத்தன நாளும் சொன்னது?”

“இல்லடா, இந்த விஷத்தப்பத்தி உண்மைய சொல்லட்டா?”

“ம்” தலையை பக்கவாட்டில் சாய்த்துக் கொண்டு கேட்க தயாரானாள்.

“ நான் தயங்கித் தயங்கிக் கேட்டப்போ, ‘என்ன வேணாலும் பண்ணிக்கோன்’னு நீ சொன்னதாலத் தான் என்னால ஒண்ணுமே செய்ய முடியல.”

“நான் உன்ன முழுசா நம்பினேன். இன்னமும் நம்புறேன். அதனாலத்தான்….” அவள் விசும்பி உடனே அடங்கி சட்டென புன்முறுவினாள்.

***

மைதிலியும் நானும் உள்ளூர பயந்துகொண்டே தான் மகாபலிபுரம் போனோம். போலீஸ் கெடுபிடி, ரவுடிகள் தொல்லை, எத்தனையோ பத்திரிக்கைச் செய்திகள்…. தெரிந்தும் அந்த ஆர்வம் எங்கள் இருவரையும் உந்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும். பொதுவாக கொள்கைகளுக்காக எதையும் விட்டுக்கொடுக்காத நான், எப்போதுமே பயந்து செத்துக் கொண்டிருக்கும் மைதிலி. காதல் வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பழமொழியை மாற்றவேண்டும்.

அங்கே எப்படியோ நண்பர்கள் உதவியில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கிவிட்டோம். எங்கள் வீட்டில் பிரச்சனை எதுவுமில்லை. அவள் தான் ஏதோ ப்ராஜக்ட் ஒர்க் என்று வீட்டில் சொல்லி, அண்ணன் பெங்களூரு ரயிலில் ஏற்றிவிட வேலூரில் இறங்கி அடுத்த பாசஞ்சரில் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே வந்தோம்.

ஒரு விஷயம் எங்கள் இருவருக்கும் உறுத்தலாகவே இருந்தது. இப்படிப் பொய் சொல்லி,  பயந்து பயந்து ஒரு காதல் தேவை தானா? நண்பர்களாகவே வெகுகாலம் இருந்த நாங்கள் எப்போது காதலர்களானோம்? சூது வாது இல்லாமல் இருவரும் அடுத்தவர் வீட்டுக்குப் போய் வந்தது நின்றுபோனது ஏன்? எத்தனை தான் சமாதானம் செய்து கொண்டாலும் எல்லோருக்கும் துரோகம் செய்வதாக ஒரு உறுத்தல் துடைத்துப் போட முடியாத அளவு ஒட்டிக்கொண்டே இருக்கிறதே.

அந்த இரவு நிஜமாகவே சிறிது சூடானதாகத் தான் இருந்தது. ஆனால் ஏனோ நான் என்னை அடக்கிக் கொள்ள முடிந்தது. நான் கடவுளை நம்புபவன் தான் ஆனால் இந்த விஷயத்தில் கடவுளை இழுக்க மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அசாதாரணமாக மைதிலி ஒரே ஒரு முறை தான் பயத்தை வார்த்தைகளில் காட்டினாள். நாளை உலகம் முடிந்துவிடுவது போல் பேசிக்கொண்டிருந்தோம். முகத்தில் தண்ணீர் தெளித்து… சிறிது நடந்து… ஃப்ளாஸ்க்கில் இருந்த டீயைக் குடித்து…. கடைசியில் ஒருவருக்காக ஒருவர் அக்கறைப்பட்டு கண்களில் பிதுங்கிக் கொண்டிருந்த தூக்கத்தைச் சாக்கு வைத்து அதிகாலை நாலு மணிக்கு உறங்கப்போனோம்.

அதிகாலையில் திரும்பி வரும்போது ஹோட்டலில், பஸ்ஸில், சாலையில் எல்லோருமே எங்களைப் பார்த்து நெற்றிக் கண்களைத் திறப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டாலும் மனதுக்குள் ஒரு அல்ப சமாதானம். நான் பெரிய துரோகம் பண்ணவில்லை. மைதிலி வெளியே தெறிக்காத விழிகளைப் பளபளப்பாக்கிய கண்ணீருடன் சிக்கனமாகச் சொன்னாள், “நீ நல்லவன் டா.”

***

காஃபி டேயில் சந்திக்கவேண்டும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். அடுத்த ஏரியாவிற்குப் போனால் அயல்நாட்டவர் போல அடையாளங்கள் தெரியாத பட்டணம். வசதி தான் எங்களை மாதிரி காதலர்களுக்கு. பொதுவாக மைதிலி அவசரமாக எப்பவுமே இப்படி அழைப்பதில்லை. அவளுக்கே உரிய பாணியில் ஒரு வாரத் திட்டத்திற்குப் பின் தான் ஒரு சந்திப்பு இருக்கும். நான் கொஞ்சம் அவசரக்காரன்.

வழக்கமான மேஜையில் எனக்கு முன்பாகவே வந்து உட்கார்ந்திருந்தாள் மைதிலி. கண்களில்  சோகத்தை நான் பார்க்க முடிந்தது.

காஃபி வருவதற்கு முன்பாகவே நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டாள்.

மூக்கை உரிஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள், “உன்ன நான் ரொம்ப நம்புறேன். உன்ன விட எனக்கு பெஸ்ட் பார்ட்னர் கிடைக்க முடியாது. உன்ன நான் உயிரா நேசிக்கிறேன். அதனாலத் தான் என்னால எப்படிச் சொல்றதுன்னு தெரியல.”

அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை முக்கால்வாசி புரிந்து கொண்ட நான் அவளைத் தொடரவிட்டேன், “ மைதிலி என்கிட்ட நீ நீயா இருக்கலாம். எந்த நிபந்தனையோ, கட்டுப்பாடோ கிடையாது.”

“தெரியும் அதனாலத் தான் சொல்றேன். நாம பிரிஞ்சுடலாம். ஒருவேள எதிர்காலத்துல உன்ன அடையற பாக்கியம் எனக்கு கிடைக்கணும்னு சாமிய வேண்டிக்கிறேன்.” ஹாண்ட் பேக்கைத் திறந்து நான் அவளுக்கு ஆசையாய் வாங்கித் தந்திருந்த அந்த மொபைல் ஃபோனை மேஜை மேல் வைத்தாள். அதில் கட்டியிருந்த பொம்மை இல்லை.

அவள் முகம் தெளிவாக இருந்தது. கண்கள் அப்படியே தான் பளபளப்பாக…

அந்த வித்தியாசமான வாயில் நுழையாத பெயருள்ள காஃபி கசந்தது…. ஆனால் ருசிகளில் வித்தியாசமுண்டு என்பதை நாங்கள் புரிந்து அனுபவிக்க ஆரம்பித்திருந்தோம்.

அவள் போய் இரண்டு காஃபிகள் குடித்திருந்தேன். அவள் விட்டுச் சென்ற செல்ஃபோனில் எல்லாம் வெறுமையாக… மெயில் பாக்ஸ், அட்ரஸ் புக்…. எதிலும் எதுவும் இல்லை.

நான் என் ஃபோனில் இருந்த மைதிலியின் எண்ணை அழுத்தினேன். என் கையிலேயே மைதிலியின் ஃபோன் மெதுவாக அதிர்ந்தது. சட்டென அந்த எண்ணையும் அவள் அனுப்பியிருந்த எஸ்.எம்.எஸ்களையும் ஒவ்வொன்றாக அகற்றிக் கொண்டே வந்தேன்…

கடைசியாக அவள் அனுப்பியிருந்த கவிதையை மட்டும் அழிப்பதற்கு முன் ஒருமுறை கடைசியாகப் பார்த்தேன்… இப்போது அதன் அர்த்தம் மிகத் தெளிவாக…

என் மனக்குகையின்

அஜந்தாவாகிவிட்ட

உன்னை

மங்கச் செய்யும்

சாத்தியங்கள்

இரண்டு…

காதங்கள்,

காலங்கள்.

என் சாம்பல் வஸ்துவின்

ந்யூரான்களில்

அதிர்ந்து கொண்டிருக்கும்

உன்னை மறக்கும்

சாத்தியங்களில்

…ஒன்று

பைத்தியம்

…அடுத்தது

மரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *