(இது செங்கல்களைப் போன்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு. சிமெண்ட், கலர் போல கொஞ்சூண்டு கற்பனை இருக்கும். நான் இந்தக் கதைகளை எழுதக் காரணம், இரண்டு விளிம்புகளில் வரும் பலவித தகவல்களால் குழம்பியிருக்கும் நம் தமிழ் கூறும் நல்லுலகத்து அன்பர்கள், ஒரேயடியாக பொழுது போக்கிலோ அல்லது பயத்திலோ மூழ்கி செத்துவிடாமல் இருக்க, சின்ன கட்டுமரமாக இந்தக் கதைகள் இருக்க வேண்டும். பொழுது போக்குக் கடலில் மூழ்கவிருப்பவர்களுக்கு நிஜத்தையும், பயத்தின் அலைகளில் தத்தளிப்பவர்களுக்கு சிறிது ஆசுவாசமான எதார்த்தத்தையும் மிதவையாகக் கொடுப்பது தான் இந்தத் தொடரின் நோக்கம். உங்கள் கருத்துக்கள், அறிவுரைகள் வரவேற்கப்படவில்லை. ஆனாலும் அனுப்பினால் வாசித்துப் பார்த்துக் கொள்வேன்.)

நான் ஒரு நல்ல மனிதனை அறிவேன். அவர் கொஞ்சம் வில்லங்கமானவர் தான் (திமிர், கொழுப்பு). ஆனாலும் அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் உண்டு. அது எனக்குத் தெரியும். அவர் கடவுளுக்கு பயந்தவர். பைபிளைப் பின்பற்ற 99% முயற்சிப்பவர். மீதமுள்ள 1% நம்முடைய சோப்புகள், சானிட்டைசர்களைப் போல எப்போதாவது தப்பிப் போய்விடும் கிருமிகளால் வரும் தொற்றுக்களைப் போல அவர் தடுமாறி பின்பற்றாமல் விட்டுவிட்ட பைபிள் விதிகளுக்காக.
இவர் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் ஷ்ரமம் இருந்தும், ஸ்வாப் டெஸ்ட்டோ, சி டி ஸ்கேனோ செய்யவில்லை. அனுமதிக்கவில்லை. மருத்துவரையும் போய்ப் பார்க்கவில்லை. கஷாயங்கள், ரசம், இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றால் தன்னைக் காத்துக் கொண்டால் போதும். எனக்கெல்லாம் கொரோனா வராது என்று சொல்லிக் கொண்டவர். அவருக்கு கொரோனா வந்ததா? வந்து போனதா? முதல் அலையில் எப்படி இரண்டாவது அலையில் எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவரது வாதங்கள், விளக்கங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவரது ஆலோசனையின்படி தான் இந்தக் கதைகளை நான் எழுதுகிறேன்.
முதலாவதாக லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்களின் மனதுக்குள் இருக்கும் வைரஸ் தொற்று, கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் தொற்றுக்களைத் தான் இப்போது பார்க்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டவர்கள், மாண்டவர்கள் எண்ணிக்கை, பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்போதுமே துல்லியமாக இருக்காது. படைத்துக் காத்து அழிக்கும் கர்த்தருக்கே வெளிச்சம். ஆனால் எல்லாருமே லாக்டவுண் காரணமாக கொஞ்சம் கழன்று போய் தான் இருக்கிறார்கள். இது உண்மை. யாரும் மறைக்க முடியாது.
கழன்றதின் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.
உதாரணமாக, ஒரு @ஊழியர் யூட்யுபில் அரை மணி நேரம் உரை ஆற்றினார். என் வாழ்க்கையிலேயே முழுவதுமாக ஆன்லைனில் நான் கேட்ட பிரசங்கம் அது தான். 2% என்னால் ஏற்றுக் கொள்ளமுடிந்த கருத்துக்களை சொன்னார். மற்றதெல்லாம் @#$%&* ஆகத் தான் இருந்தது. அவர் சொல்கிறார், “இப்போ செத்துப் போறவங்க எல்லாரும் கர்த்தரால நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவங்க. அவங்க எல்லாருமே தப்பானவங்க. செத்துப் போன ஊழியக்க்காரங்க எல்லாருமே தப்புத் தப்பா ஊழியம் செஞ்சவங்க. கர்த்தரோட நியாயத்தீர்ப்பு தான் இது. இங்க இருக்கற நாம எல்லாம் பத்திரமா இருப்போம்.பயப்படாதீங்க” என்றார்.
எனக்கு இதைக் கேட்டு கொஞ்சம் கழன்று போய் நான் மனதுக்குள் கத்தினதை இங்கே எழுத விரும்பவில்லை. ஆனால் “அந்த @ஊழியருக்கு மைல்ட் ஆக கொரோனா அட்டாக் வரணும். அதுக்கு அப்புறம் அவர் எப்படி (எந்த மாதிரி) பிரசங்கம் பண்ணுறார்னு. பாக்கணும்” என்று சிந்தித்துவிட்டு அப்புறம், “கர்த்தாவே வேணாம், என்னோட எதிரிக்கு கூட இந்த கொரோனா வரக்கூடாது” என்று சொல்லிவிட்டேன்.
இதில் தான் என் மனதில் ஏற்பட்ட ஒரு சங்கடத்தை சொல்லி இன்றைய கதையை முடிக்கப் போகிறேன்.
எதிரிக்குக் கூட வரக்கூடாது என்றால், கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள், மரிக்கிறவர்கள் என் எதிரிக்கும் மேலானவர்களா? இல்லை இல்லை. ஒரு கோபுரம் இடிந்து விழுந்ததால் சமாதியான மக்களும், ரோம கவர்னர் வழிபாட்டு ஸ்தலத்தில் கொலை வெறித்தாக்குதல் நடத்திய போது வெட்டப்பட்டு செத்தவர்களும் மற்றவர்களை விட மோசமானவர்களா? சாகாதவர்கள் நல்லவர்களா? என்ற கேள்வியைக் கேட்டு, “இல்லை” என்று உரக்க பதில் சொன்னார் இயேசு. நீங்களும் மனம் திரும்பாமல் போனால் இப்படித்தான் கெட்டுப் போவீர்கள் என்றார். இதில் இரண்டு நடைமுறைக் கருத்துக்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
1. நீங்களும் மாஸ்க் போடாமல், கைகளை சோப் கொண்டு கழுவாமல், சமூக இடைவெளி இல்லாமல் இருந்தால் இப்படித்தான் மடிவீர்கள்.
2. நீங்களும் மனம் திரும்பாமல் இருந்தால், திடீரென்று வரும் அழிவில், இரண்டாம் வருகையில் மடிந்து போவீர்கள்.
புரிந்தால் சரி.
ஃபோன் பேசினால் கொரோனா பரவாது, பூஞ்சை தொற்றாது. உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கு ஒரு கால் போட்டு கொஞ்ச நேரமாவது ஆறுதலாக, நகைச்சுவையாக, கண்டிப்பாக கதையுங்கள். யார் யாரிடம் எப்படி கதைப்பது என்பது உங்களுக்குத் தெரியும் தானே!