#cshec19
நம்ம நாயகன், கேப்டன் என்று அழைக்கப்படும் செல்லராஜ், பெரிய ஐ டி கம்பெனியில் நல்ல உயரமான பதவியில் இருந்தவர். மனிதர்கள் மேல் அதிகப் பிரியம் உள்ளவர். இயந்திரங்கள் அதிலும் கம்ப்யூட்டர்களையே பார்த்துப் பார்த்து இனி பைத்தியம் பிடிக்க வேண்டியது தான் பாக்கி என்ற நிலையில் வேலையை உதறிவிட்டு தன் அப்பாவுடன் இயற்கை விவசாயம் செய்ய தன் சொந்த ஊருக்கு வந்துவிட்டவர். அவருக்கு இந்த லாக்டவுன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர் விவசாயத்துடன் அவருக்கு உயிரான இசைத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். ஆன்லைனில் கான்சர்ட் நடத்துகிறார். பாடல்களை வீட்டிலிருந்தே பதிவு செய்கிறார். ஆப்டிக் ஃபைபர் வந்தது அவருக்கு பெரிய வரப்பிரசாதமாகிவிட்டது. எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற வயலுக்கு மோட்டர் பைக். குடும்பத்துடன் சொந்தங்களையும் நட்புகளையும் பார்க்க ஸ்விஃட் டிசையர் கார். தனிக்குடித்தனம் என்றாலும் அடுத்த வீட்டில் அப்பாவும் அம்மாவும் இருப்பதால் அது கூட்டுக் குடும்பம் போலத் தான் இருந்தது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் இருந்த ஒரு வாசல் கூட சாதாரண கேட்களை விட இரண்டு மடங்கு அகலமாக இருந்தது.
அவருக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் அவ்வப்போது இசை சொல்லிக் கொடுத்தவர் இப்போது ஆன் லைனிலும் இன்டர்வியூ வைத்து, உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் இசை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் துறையில் இல்லாத பெண் தான் வேண்டும் என்ற ஒரே கண்டிஷன் தான் பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். அதே போல தூரத்து சொந்தத்தில் இருந்து அருமையான பெண், பட்டதாரி கிடைத்து இப்போது மூன்று வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்.
எதைக் கேட்டாலும் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் அன்புடன் பழக வேண்டும். உடலைக் கடவுளின் ஆலயமாக மெய்ன்டெய்ன் செய்ய வேண்டும். கர்த்தரை முழு ஆள்த்தன்மையுடன் நேசிக்க வேண்டும் இது தான் அவரது வாழ்க்கைத் தத்துவம் என்று சொல்லலாம். மற்ற எல்லாமே இதற்குள் அடங்கிவிடும் என்பார். ஆலயத்திலும் ஊழியங்களிலும் அவர் உரசாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அந்த உரசல் பின்னர் அன்பான உறவில் தான் முடியும். இது தான் செல்லராஜின் பலம்.
தன் மனைவி அருள் தேவியிடம் காலை காஃபி குடிக்கும் போது ஒரு சந்தேகத்தை வெளியிட்டார் செல்லராஜ், “லாக் டவுன் காலத்துல லவ் பண்றவங்கல்லாம் எப்படி இருப்பாங்க. என்ன செஞ்சுட்டு இருப்பாங்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.”
“இப்ப அது தான் ரொம்ப தேவை. தேங்காய் எல்லாம் முடிஞ்சிருச்சு. தோட்டத்துல அண்ணாச்சி தேங்கா பறிச்சி வச்சிருக்காரு. அப்படியே, ராசம்மா அக்காட்ட கீரை பறிச்சி தரச்சொல்லி வாங்கிட்டு வாங்க.” என்று ஒரு துணிப்பையைக் கையில் திணித்தபடியே காலி காஃபிக் கோப்பையை எடுத்துச் சென்றாள்.
இதற்குப் பதிலாக அந்த முதல் அலை கால லாக்டவுன் நாளில் செல்லராஜூக்கு ஒரு ஃபோன்கால் வந்தது.
அந்தப் பக்கத்தில் பதற்றமாக பேசியவன் செல்லராஜின் பெரியப்பா பையன் ஆன்ட்ரு.
“அண்ணே நம்ம லீலா அத்த பொண்ணு சான்ட்ராவுக்கு பேய் பிடிச்சிருச்சாம். உடனேயே வரச் சொல்லி அத்த சொன்னாங்க. உங்க பைக் வேணும்”
ஆன்ட்ரூவின் அப்பா ஒரு கோவக்காரர். அவன் லாக்டவுன் நாட்களிலும் அப்பாவுக்குத் தெரியாமல் அவர் பைக்கில் சுற்றியதால் போலீசில் பிடிபட்டு, லைசன்ஸ் வாங்க இரண்டே மாதம் இருந்த நேரத்தில் இந்தப் பரிதாபம் நடக்க, அவனுக்கு வாங்கித்தருவதாக சொல்லப்பட்ட ஃப்ரேசர் பைக் கேன்சல் ஆகிவிட்டது.
இப்போது அவன் பைக்குக்காகத் தான் தன்னை அழைப்பதைப் புரிந்து கொண்டார் செல்லராஜ், “நான் உன் கூட வந்து கார்ல விட்டுட்டுப் போறேன். அப்புறமா ஃபோன் பண்ணு திரும்ப கூட்டிட்டு வந்து வீட்ல விடுறேன். வேற எதுவும் ஹெல்ப்னாலும் நான் செய்றேன். இப்ப உங்க வீட்டுக்கு வரட்டுமா?”
ஆன்ட்ரூ தயங்கினான். செல்லராஜுக்கும் லீலா அத்தைக்கும் பேச்சு வார்த்தைகள் இல்லாததால் உடனே பைக் கிடைத்துவிடும் என்று நினைத்தான். ஆனால் கார் வருகிறது. நினைத்தது நடக்கவில்லை என்றால் யாருக்குத் தான் பிடிக்கும்.
“சரி” என்று வேண்டா வெறுப்புடன் சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டித்தான்.