#cshec19

அவர்கள் சான்ட்ராவின் வீட்டுக்குப் போன நேரம் சான்ட்ராவின் அப்பா அருமைநாயகம் வாசலில் நின்று செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் செல்லராஜ் காரை நிறுத்தி உள்ளேயே உட்கார்ந்திருந்தார். ஆன்ட்ரூ உள்ளே ஏதோ அழையாத விருந்தாளி போல நுழைந்தான். சான்ட்ராவின் அம்மா லீலா அத்தையும், செல்லராஜின் அப்பா ஜெபநேசனும், ஆன்ட்ரூவின் அப்பா வேதமாணிக்கமும் உடன் பிறந்தவர்கள். ஜெபம், வேதம் மாதிரி லீலா அத்தைக்கு வேதக்காரப் பெயர் வைக்காததற்கு ஒரு சுவராசியமான காரணம் உண்டு. ஆனால் அது இப்போதைய பரபரப்பான பின்னணியில் வேண்டாம். ஆன்ட்ரூவை கண்டு கொள்ளாமல் மாமா அருமை நாயகம் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது லீலாவின் மகளை ஆன்ட்ரூ தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் பெரியவர்கள் பேசிக் கொண்டார்களாம். ஆனால் அருமைநாயகத்தின் அந்தஸ்துக்கு முன் ஜெபநேசனின் குடும்பம் இல்லை என்று அவர் மறுத்துவிட்டார். ஆனாலும் அவனை அவர் துரத்தவில்லை. “சான்ட்ராவக் கட்டிக் குடுப்பேன்னு கனவு கண்டுக்கிட்டு இருக்காதீங்க” என்று ஒரு குடும்ப நிகழ்ச்சியில் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆன்ட்ரூவை விட அவன் நண்பர்கள் தான் ஆன்ட்ரூவுக்கு சான்ட்ரா வெறியை ஏற்றி விட்டிருந்தனர்.

நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை காரில் வரும் போது கேப்டன் செல்லராஜிடம் ஆன்ட்ரூ சொல்லி வைத்தான். இனியும் மறைப்பது நல்லது அல்ல என்று அவன் நினைத்திருக்க வேண்டும். சான்ட்ரா ஒரு மந்திரவாதி பையனைக் காதலிக்கிறாளாம். நண்பர்கள் மூலம் கசிந்த இரகசியத்தை ஆன்ட்ரூவும் நேரில் பார்த்துவிட்டான். பள்ளிக்கூடத்துக்கு எதிரில் இருந்த கேன்டீனில் சான்ட்ராவும் அந்த முண்டக்கண்ணனும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் சொன்னது போல ஆன்ட்ரூவின் பெர்சனாலிட்டிக்கு கால் தூசி கூட இருக்கமாட்டான் அந்த முண்டக்கண் பையன். ஆன்ட்ரூவும் தன் சைக்கிள் கண்ணாடியில் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

“இது எப்படி?” என்று குழம்பிய ஆன்ட்ரூவுக்கு இது ஏதோ மை, வசியம், பில்லி சூனியம் தான் என்று பதில் கிடைத்தது.

எப்படியும் இந்த நேரத்தில் உதவி செய்து மாமாவின் மனதில் இடம் பிடிக்கத் தான் அவன் முயற்சி செய்கிறான் என்பது செல்லராஜுக்குத் தெரிந்தது. “கர்த்தாவே உங்க சித்தம் மட்டும் நடக்கட்டும்” என்ற சின்ன ஆழமான பெருமூச்சுடனான ஜெபம் செய்துவிட்டு செல்லராஜ் தன் காரின் ஸ்டீரியோவைத் திருகினார்.

கட்டிலில் சான்ட்ரா தலைவிரி கோலமாக உட்கார்ந்திருக்க, அருகில் லீலா அத்தை. “வா” என்று சொல்லிவிட்டு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியைப் பக்கத்தில் இழுத்துப் போட்டார். “சான்ட்ரா எப்படி இருக்க?” என்றான் ஆன்ட்ரூ. அவள் அவன் அங்கே வந்ததைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எதிரே இருந்த ஸ்டீல் பீரோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு நாளா இப்படித்தாம்ப்பா இருக்கிறா. திடீர்னு கத்துறா, கதறுறா. தன்னத் தானே பிராண்டிக்கிறா” என்று அழுகையுடன் லீலா அத்தை சொல்லவுமே, ஆன்ட்ரூவுக்கு ஒரு திட்டம் மனதுக்குள் உருவானது. ‘இந்தப் பேய விரட்டிட்டு சான்ட்ரா மனசுல அந்த முண்டக் கண்ணன் நினைப்பே வராம பாத்துக்கணும். கண்டிப்பா பேய் ஓட்டுற ஊழியக்காரங்களப் பாத்து இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.’ தன் காதலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்தது. ஆனால் சான்ட்ராவுக்கு ஏற்கனவே ஆன்ட்ரூ ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். அது இப்போது தான் நினைவில் வந்தது.

“ஆன்ட்ரூ, நீ எங்க வீட்டுக்கு வந்து போய் இருக்கணும்னா, நான் உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கணும்னா நீ எனக்கு, என்னோட காதலுக்கு உதவியா இருக்கணும். அட் லீஸ்ட் அத வீட்டுல சொல்லாம இருக்கணும். அதுவா தெரியும் போது தெரியட்டும்.”

சுத்தமாக உறவே இல்லாமல் போவதைவிட வீட்டுக்குப் போய் வந்து பேசிக் கொண்டு இருப்பது நல்லது என்பது ஆன்ட்ரூவின் கருத்து. அவன் மானம், சூடு, சுரணை உள்ளவன் தான். ஆனாலும் காதலுக்காக எதையும் இழக்க அவனுக்கு பிரச்சனை இல்லை.

“அத்த நான் உடனே போய், பேய் விரட்டுற வல்லமை உள்ள ஒரு ஊழியக்காரரப் பாத்து கூட்டிட்டு வர்றேன்” எழுந்தான் ஆன்ட்ரூ.

“டேய்” கரகரப்பான பேஸ் குரலில் சான்ட்ரா கத்தினாள்.

ஆன்ட்ரூ தக் என்று அந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டான்.

சான்ட்ராவின் கருவிழிகள் மேலே நோக்கியிருக்க ஆன்ட்ரூவைப் பார்த்து சொன்னாள், “எனக்கு ஊசி போட ஆள் வந்துட்டு இருக்கு. நான் தூங்கி எந்திருச்சி திரும்பவும் வேலையக் காட்டுவேன். நீ எதாச்சும் என்ன சரி பண்றதுக்கு ஓடிட்டு அலைஞ்சே. உன்னயும் சேத்துப் பிடிச்சுக்குவேன். புரிஞ்சுதா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *