“லீலா சின்ன வயசுல கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்திருக்கிறா? அதுவும் அவங்க பூட்டன் பூட்டி செஞ்ச தப்புக்காக சாபமா வந்து சேந்துருச்சாம். உங்க தாத்தா தான் எங்கிட்ட கத கதயா சொல்லியிருக்காரு.”

“அம்மா அந்த சாபத்த சரி பண்றதுக்கு பரிகாரம் எதுவும் கிடையாதா?” டீயைக் குடித்தபடியே கேட்டான் ஆன்ட்ரூ.

“அதத் தான் லீலா வீட்டுக்கு நாம போக்கும் வரத்துமா இருக்கறப்போவே உங்க மாமாட்ட நான் சொன்னேன். ஊழியக்காரர்ட்ட கூட்டிட்டுப் போலாம்னு. அவரு தான் பேயும் இல்ல பிசாசும் இல்ல. மோட்சமும் இல்ல நரகமும் இல்ல. எல்லாமே நாம தான் நாம இருக்கற எடம் தான் அப்படின்னு பிடிவாதமா சொல்லிட்டாரு.”

“அவருக்குத் தெரியாம கூட்டிட்டுப் போயிருக்கலாமே?”

“ம்… ம்… வேணா நீ பட்சமா இருக்கற சான்ட்ராவ கூட்டிட்டுப் போயேன். அந்த ஆளு கண் கொத்திப் பாம்பா இருப்பாரு. நடக்கற கதையா?”

“நான் அதத்தான் செய்யப் போறேன். உங்களுக்கு அக்கற இல்லாம இருக்கலாம். ஆனா நான் கண்டிப்பா இத செய்யத்தான் போறேன்.”

“டேய் உங்க அப்பாவ எப்படிறா சமாளிக்கப் போற?”

“அவரு கெடக்காரு.”

என்னதான் சவால் விட்டாலும் பைக் இல்லாமல் ஆன்ட்ரூவுக்கு கால்கள் இரண்டும் ஒடிந்தது போலத் தான் இருந்தது. அப்பா அவர் பைக்கின் சாவியை ஒழித்து வைத்திருக்கிறார். சைக்கிளும் வருடக்கணக்கில் தொடாமல் இப்போது தொட முடியாத நிலையில் இருக்கிறது. வெளியே சுற்றுவதும் இப்போதைக்கு பிரச்சனை தான். போலீஸ் வெளியே சுற்றும் வயசுப் பையன்களை தோப்புக்கரணம் போடச் சொல்லுகிறார்களாம்.

இதுவரை பெயரில் தான் கிறிஸ்தவன். ஆன்ட்ரூ தன் அப்பாவைவிட கொஞ்சம் பக்தி உள்ளவன் தான். சான்ட்ரா போகும் கோவிலுக்கும், கூட்டங்களுக்கும் தவறாமல் போய்விடுவான். லீலா அத்தையின் வற்புறுத்தலால் தான் அவளும் போகிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். அம்மா போகிறது வேறு ஆலயம் என்றாலும் மகன் எங்கேயாவது போய் வருவது நல்லது என்று தான் அம்மா நினைத்திருந்தார்கள்.

ஆன்ட்ரூவை எப்படியாவது ஆன்மீகத்தில் இழுத்துவிட வேண்டும் என்ற செல்லராஜின் முயற்சிகள் தோல்வி மேல் தோல்வியாகத் தான் முடிந்து கொண்டிருந்தன. ஆனாலும் ஆன்ட்ரூ தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் பெயரைச் சொல்லி ஜெபிக்கும் போது ஆன்ட்ரூவுக்காக அதிகம் ஜெபிப்பது மட்டுமல்ல. நல்ல புத்தகங்கள், சிடிக்கள் கொடுப்பார். சான்ட்ராவுக்கும் தான். ஆனால் எல்லாவுமே வேஸ்ட் என்று தெரிந்ததும் நிறுத்திவிட்டார். ஆனால் மற்ற கசின்கள் ஒழுங்காகக்கேட்டு படித்து அவருடன் அவற்றைப் பற்றி நீண்ட உரையாடல்கள் நடத்தியிருக்கிறார்கள். அவ்வப்போது செல்லராஜ் தன் கசின்களுக்காக ஒழுங்கு செய்யும் பிக்னிக்குகள் மற்றும் ட்ரக்கிங் எல்லாவுமே ஜாலியாகவும், ஆன்மீக பேச்சுக்களாகவும் தான் இருக்கும். இந்த இரண்டாவது அம்சத்துக்குப் பயந்தே ஆன்ட்ரூ அந்தப் பக்கமே திரும்புவதில்லை.

இப்போது, பேயை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்று ஆன்ட்ரூவுக்குத் தெரியவில்லை. யாரைப் பார்க்க வேண்டும் என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு ஆளைத் தெரியும். அவர் தான் ஆபிரகாம் சார். ஆபிரகாம் சாரை எந்த மரண வீட்டிலும் பார்க்கலாம். தாத்தா இறந்த போதும் அவர் தான் வந்து குளிப்பாட்டி, பெட்டிக்குள் வைத்து, கல்லறைக்குழிக்குள் இறக்கி, ஒரு கை மண்ணையும் தூவி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஜெபக்கூட்டம் எப்போது என்பதையும் தன் கீச்சுக் குரலில் சத்தத்தை உயர்த்தி அறிவித்தவர் அவர் தான். ஜெபக்கூட்டத்துக்கு ஸ்பீக்கர் செட், சேர், ஷாமியானா, சாப்பாடு எல்லாமே அவர் தான். அவருக்கு அன்டர்டேக்கர் ஆபிரகாம் என்றும் ஒரு பெயர் இருந்தது. அவர் உள்ளூரில் உள்ள அனைத்து சபைகளிலும் தன் சேவையைச் செய்வார். நேரம் இருந்தால் அடுத்த ஊர்களுக்கும் போக அவர் ரெடி தான்.

நேராக ஆலயத்தை நோக்கி நடந்தான் ஆன்ட்ரூ. அங்கே அலுவலகத்தில் தான் ஆபிரகாம் சார் இருப்பார். இல்லையென்றாலும் அவர் மொபைல் நம்பர் வாங்கிக் கொள்ளலாம்.

அவர் மொபைல் எண் தான் கிடைத்தது. அவன் அழைத்ததும் லிஃப்ட்டும் கிடைத்தது. “உண்மையிலேயே கர்த்தர் எனக்கும் கூட நல்லது செய்வார் போல” என்று நினைத்துக் கொண்டான் ஆன்ட்ரூ. ஆபிரகாம் சார் இன்று ஃப்ரீயாக இருந்தார். சாது நேசதாசன் வீட்டுக்கு அழைத்துச் சென்று கன்சல்ட் செய்த பின் வீட்டிலேயும் விட்டுவிடுவதாகச் சொன்னார் ஆபிரகாம் சார்.

சாது மிகவும் பிசியாகத் தான் இருந்தார். அவர் ஒரு பெண்ணுக்கு பேய் விரட்டிக் கொண்டிருக்கும் போது இவர்களும் மெதுவாக உள்ளே நுழைந்து கொண்டனர். ஆபிரகாம் சார் ஆன்ட்ரூவை கொஞ்சம் ரெடி செய்து தான் அழைத்து வந்திருந்தார். “யாருக்காச்சும் ஐயா பேய் விரட்டிட்டு இருந்தார்னா மரியாதையா கண்ண மூடி ஜெபம் பண்ணணும். ஸ்தோத்திரம் சொல்லிட்டே இருக்கணும் தெரிஞ்சுதா?”

ஆன்ட்ரூ பாதி வழியில் திரும்பிவிடலாம் என்று தான் நினைத்தான். பயம் அவனை உளரச் செய்தது. “சார் நான் வீட்டுக்கு உடனே திரும்பப் போகணும்.”

“டேய் முன் வச்ச கால பின் வைக்கக் கூடாது. உங்க வீட்ல உன்னக் கொண்டு விடும் போது உங்க அப்பாட்ட நான் பேசிக்கிறேன்.”

“ஐய்யைய்யோ, வேணாம் சார். அப்பா என் தோல உரிச்சிருவாரு.”

“ஏன் பயப்படுற. உனக்கு உன் அத்த பொண்ணுக்கு சரியாகணும்னு அக்கர இருக்குதா இல்லியா?”

“எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது சார். இது எங்க அப்பாவுக்கு இது தெரியாது.”

“சரி நான் சொன்னத ஞாபகம் வச்சுக்கோ.”

ஒரு பெண் தலைவிரி கோலமாக, அலறிக் கொண்டிருந்தாள். இரண்டு பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த அலறலே ஆன்ட்ரூவுக்கு புல்லரிக்கச் செய்தன.

“உம் பேரு என்ன?”

“எம் பேரு ஏசபேல்.”

“எங்க இருந்து வர்ற?”

“சமாரியாவுல இருந்து வர்றேன்”

சாது இப்போது அந்தப் பெண் ஏதோ ஒரு மொழியில் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஆன்ட்ரூ ஆச்சரியமாக ஒண்ணரைக் கண் போட்டுப் பார்த்தான். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லிக் கொண்டிருந்தது எல்லாம் குறைந்து போனது. ஆபிரகாம் சார் லேசாகத் தன் முழங்கையால் இடிக்க சட் என்று திடுக்கிட்டு பின்னால் உள்ள சுவரில் போய் மோதிக் கொண்டான் ஆன்ட்ரூ.

“எதுக்கு வந்துருக்க?”

“இங்க இருக்கற வாலிபப் பிள்ளைங்களக் கெடுக்கறதுக்கு. கல்யாணம் ஆன பிள்ளைங்களுக்குள்ள புகுந்து அவங்க புருஷங்கள ஆட்டிப் படைக்க. குடும்பங்கள் பிரிஞ்சு போறதுக்கு, டைவர்ஸ் நிறைய நடக்கறதுக்கு.”

“இப்பப் போகப் போறியா இல்லியா?”

“எனக்கு இன்னொரு ஆளு கிடைச்சா நான் அந்த ஆளுக்குள்ள புகுந்துட்டு இவள விட்டுருவேன்.”

பைபிளை வைத்து பலமாக தலையில் ஒரு அடி அடித்தார் சாது. முணு முணு என்று ஜெபிக்க ஆரம்பித்தார். கூட இருந்தவர்களும் தீவிரமாக வாய்விட்டு ஜெபிக்க. ஆபிரகாம் சார் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று முணுமுணுத்தது தெளிவாகத் தெரிந்தது. ஆன்ட்ரு பூனை போல அடி எடுத்து வைத்து வெளியே போய்விட்டான். “அந்த ஏசபேல் இன்னொரு ஆளுக்குள்ள புகுந்துக்கணும்னு
சொல்லிட்டு இருக்கு. இங்க இருக்கவங்கள்லியே நான் தான் பக்தி இல்லாதவன். எனக்குள்ள புகுந்துட்டா?” என்ற பயத்தில் தான் அவன் வெளியே வந்தான். ஊருக்கு வெளியே இருந்த அந்த பெரிய வீட்டுக்கு வெளியே வந்து ரோட்டுக்குப் பக்கம் போய் ஒரு அடர்த்தியான சீமை முள் மரத்துக்குப் பின் நின்று கொண்டான். ஆபிரகாம் சாரும் அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அவனுக்குத் தெரிய, மரியாதையாக அவருக்காகக் காத்திருந்தான்.

“சார் ஒண்ணுக்கு வந்துச்சு, அதான்…”

“நானும் உன் கேஸ் தான்” என்றார் ஆபிரகாம் சார். அவர் இரண்டு அர்த்தத்தில் சொன்னது ஆன்ட்ரூவுக்குத் தெரியவில்லை.

பக்கத்தில் இருந்த டீக்கடையில் மெதுவாக டீ குடித்துவிட்டு, அந்தக் ஏசபேல் கூட்டம் போன பின் தான் உள்ளே போனார்கள்.

“வாங்க சார்” சிரித்தபடியே வாசலுக்கு வந்திருந்தார் சாது.

“ஐயா நம்ம சர்ச் பையன் தான். இவனோட அத்த பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்காம்.”

“என்ன லவ்வா?” என்று சிரித்தார் சாது.

ஆன்ட்ரூ அரண்டு போய்விட்டான். எந்த பதிலும் சொல்லாமல் உறைந்து போய் நின்று கொண்டிருந்தான். “உண்மையிலேயே இவர் வல்லமையானவர் தான் போல இருக்கு. இன்னும் என்ன என்ன உண்மைகளை எல்லாம் புட்டுப் புட்டு வைக்கப் போறாரோ?”

“தம்பி கர்த்தர் அப்படி எல்லாரு ரகசியங்களையும் பொதுவுல போட்டு உடைக்க மாட்டாரு. அவமானப்படுத்த மாட்டாரு. தினமும் பைபிள் வாசி, ஜெபம் பண்ணு சரியா?”

“கண்டிப்பா ஐய்யா.”

“சரி, விபரங்கள எல்லாம் சொல்லு.”

ஆன்ட்ரூ வெளியே காத்திருக்க, ஆபிரகாம் சார் சாதுவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“ஐயா வேற எதுவும் அந்தப் பையனப் பத்தி கர்த்தர் வெளிப்படுத்துனாரா?”

“சார், இதுக்கு வெளிப்படுத்தல் எதுவும் வேணாம். வீட்டுல பெரியவங்க வராம ஒரு பையன் அத்தப் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னுட்டு வந்தா வேற என்னவா இருக்கும்? நாமளும் வாலிபப் பசங்களா இருந்து வந்தவங்க தானே? அப்புறம் எத்தன பசங்கள பாக்குறோம் இங்க.” என்றார் ஊழியர்.

“ஓ இது தான் விஷயமா?” ஆபிரகாம் சாருக்கு வெளிப்படுத்தல் பற்றி இருந்த ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது. ஆனால் அதற்குப் பதிலாக சாது சொன்னார்.

“வெளிப்படுத்தல் எப்பவும் எல்லாருக்கு வராது சார். ஊழியத்துல வெளிப்படுத்தல் மாதிரியே கர்த்தர் குடுத்த மூளையையும் பயன்படுத்தணும்.”

“சரி தான் ஐய்யா.”

“சார், நீங்க பைபிள் படிச்சு, ஜெபம் எல்லாம் டெய்லி பண்றீங்களா?”

சார் கொஞ்சம் தடுமாறிப் போனார். இது மூளைய பயன்படுத்திக் கேட்கப்பட்ட கேள்வியா? வெளிப்படுத்தலா? என்று குழம்பிப் போய்.

“கொஞ்சம் குறைச்சல் தான் ஐய்யா. கூட்டணும்.”

“ஊருக்கெல்லாம் உதவி செய்யுறீங்க. நீங்க கர்த்தர் கூட நெருக்கமான உறவுல இல்லன்னா… எப்பவும் ஒண்ணு போல இருக்காது.”

“ஐய்யா எனக்காக ஜெபம் பண்ணிக்கோங்க.”

“கண்டிப்பா…. ஆனா மொதல்ல நீங்க தான் உங்களுக்காக ஜெபம் பண்ணிக்கணும்.”

இனிமேல் இருந்தால் சாயம் வெளுத்துவிடும், இவர் துவைத்து காயப்போட்டுவிடுவார் என்று நினைத்த ஆபிரகாம் சார் மெதுவாக வெளியே நடந்து கொண்டே கேட்டார், “ஐயா, அப்போ இந்தத் தம்பியோட அத்த பொண்ணுக்கு…”

அவர் முடிப்பதற்குள்ளாகவே ஊழியர் சொன்னார், “நான் ஜெபம் பண்ணிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *