ஆபிரகாம் சாரின் பைக்கில் வேகமாக சாதுவின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ஆன்ட்ரூ. ஏசபேல், அவனைத் துரத்த, பைக்கைத் திருப்பி குணா மனநல மையத்தை நோக்கி ஓட்டினான். அங்கே வாசலில் பிரம்மநாயகமும் மந்திரவாதியும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை வேறு வழியில் திருப்ப முயற்சிக்கும் போது சிவப்பு சேலையில் இசக்கி அவனுக்கு எதிரில் வர, பைக்குடன் கீழே விழுந்தான் ஆன்ட்ரூ. இப்போது எழுந்து ஓடி மருத்துவமனையின் பின்புறமாக பதுங்கிப் பதுங்கி சான்ட்ரா இருந்த அறைக்குள் நுழையவும் லீலா அத்தை “ஆன்ட்ரூ உங்க மாமா வந்துட்டு இருக்கார். இந்த நேரம் பாத்து மந்திரவாதியும் உங்க சின்ன மாமாவும் வந்திருக்காங்களாம். என்ன நடக்கப் போவுதோ?” என்று பதறிக் கொண்டிருந்தார்கள். சான்ட்ராவுக்கு ஒரு நர்ஸ் ஊசி போட்டுக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் “அவங்க வந்துட்டாங்க” என்று லீலா அத்தை பல்லைக் கடித்துக் கொண்டு சத்தம் அதிகம் வராமல் சொல்லவும், ஆன்ட்ரூ பாத்ரூமுக்குள் போய் ஒளிந்து கொண்டான். ஏதோ கதவை உள் பக்கமாக தாழ் போடவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. எல்லாம் அமைதியாக இருக்க, மாமா ஏதோ சத்தமாக சண்டை போடுவது கேட்டது. ஆன்ட்ரூவின் இதயத்துடிப்பு ட்ரம் செட்டின் பேஸ் ட்ரம் போல அவன் உடல் முழுவதும் கேட்டது. லீலா அத்தையின் விசும்பல் மட்டும் தெளிவாகக் கேட்க, ஆன்ட்ரூவின் ஃபோன் ரிங் அதே நேரத்தில் தெளிவாகக் கேட்கும் போது மாமா கத்தினார், “பாத்ரூமுக்குள்ள யாரு?”

கதவு திறக்க நடுங்கிக் கொண்டே ஆன்ட்ரூ காத்திருக்கும் போது தான், கதவும் திறந்தது, “ஆ” என்று அலறினான். அவன் கழுத்தில் கை வைத்த அம்மா, “இன்னும் காய்ச்சல் விடலியே? இந்த நேரத்துல தான் எல்லாரும் இவனக் கூப்புடுவாங்க. இந்த ஃபோனக் கொஞ்சம் ஆஃப் பண்ணி வச்சா என்ன?” என்று சொல்லவும்.

“அம்மா அந்த ஃபோனக்குடு” என்று பிடுங்கிப் பார்த்தால் ஆபிரகாம் சார்.

“தம்பி, சாது ஐய்யா வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. ஆனாலும் கர்த்தர் கிருபையில நம்ம கிருபை இன்டர் நேஷனல் ஊழியக்காரர் பென்னி கிரஹாம் வர்றேன்னு சொல்லிருக்காரு. எந்த டைம்ல வரணும்னு சொல்லு. நான் அவரக் கூட்டிட்டு வந்துடுறேன். நீ எப்படி வருவ? யாரயாச்சும் அனுப்பட்டுமா?”

“சார் நீங்க என்ன விட்டுட்டுப் போனதுல இருந்து காய்ச்சல் சார். ஒழுங்கா சாப்பிட முடியல. இருமல் வேற…”

“ஐய்யையோ கொரோனாவா இருக்கப் போவுது. கவனமா இரு தம்பி. நான் அப்புறமா பேசுறேன்.” சட்டென பேச்சை நிறுத்திவிட்டு இணைப்பையும் துண்டித்துவிட்டார் ஆபிரகாம் சார்.

திரும்பத் திரும்ப அவன் முயற்சி செய்தும் ஆபிரகாம் சார் ஃபோனை எடுக்கவே இல்லை.

இப்போது ஆன்ட்ரூவுக்கு மூளையெல்லாம் சிந்தனை. என்ன செய்வது, யாருக்கு ஃபோன் செய்யலாம்? சான்ட்ராவுக்கு அதே சிகிச்சை தான் தொடருகிறதாம். சான்ட்ரா பீப்பாய் மாதிரி ஆகிவிடுவாளோ என்று அவனுக்குக் கவலை. மந்திரவாதி திரும்பவும் வந்துவிடுவாரோ என்றும் பயம். எவ்வளவு சீக்கிரமாக அவளுக்கு ஜெபம் செய்து சரியாக்க முடியுமோ அவ்வளவு நல்லது. சாது வேற முடியாதுன்னுட்டாராம். என்ன செய்யலாம்?

அவனுக்கு இப்போது நினைவில் வந்தது எல்லாமே செல்லராஜ் அண்ணன் தான். ஃபோனை எடுக்கும் போது அம்மா கஷாயம் கொண்டுவந்து கொடுத்தார். கசப்பு தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அப்பா வந்து, “வா டாக்டரப் பாத்துட்டு வந்துருவோம்” என்றார். தட்ட முடியவில்லை. அவனுக்கும் காய்ச்சலும் இருமலும் தானாக சரியாகுமா என்ற சந்தேகமும் இருந்தது. போதாதற்கு மூச்சு விடுவதிலும் கொஞ்சம் சிரமம் இருந்தது. காலர் டோனில் அந்த பெண்மணி சொல்வது போல எனக்கு கொரோனாவா இருக்குமோ? ச்சே ச்சே அதுல்லாம் வயசானவங்களுக்குத் தான் வருமாம். எனக்கு வராது. தைரியமாகக் கிளம்பினான் ஆன்ட்ரூ.

அவர்கள் காலனிக்கு என்றே இருந்தார் கைராசி டாக்டர். சுந்தர பாண்டியன். கூட்டம் குறையும் நேரம் தான். இரண்டு பேருக்குப் பின்னர் தான் இவர்கள் முறை வரும். அதற்குள் ஒரு நர்ஸ் வந்து அவர்கள் கைகளில் சானிட்டைசரை பீய்ச்சியடித்தார், “மாஸ்க் நல்லாப் போட்டுக்கோங்க” என்று சொல்லிச் சென்றார். டாக்டர் ஒரு கண்ணாடி அறைக்குள் இருந்தார். ஒரு மைக் அவர் முன் இருந்தது. இந்தப்பக்கம் ஸ்பீக்கரில் சிறிது கம்மிய குரலில் அவர் பேசுவது கேட்டது. நிமிடத்துக்கு ஒரு தடவை சானிட்டைசரைத் தன் கைகளில் தேய்த்துக் கொண்டிருந்தார். இரட்டை மாஸ்க் போட்டு முகம் முழுவதும் மூடிய வைசர் அணிந்திருந்தார். நர்ஸ் இப்போது அவனது காய்ச்சலை அளந்து கொண்டே, ஆக்ஸி மீட்டரை அவன் விரலில் மாட்டினார். 94 என்றது மீட்டர். இந்தப்பக்கம் இருந்த மைக்கில் ஆன்ட்ரூவின் அளவுகளைச் சொல்லவும், “மிஸ்ட்டர் வேதமாணிக்கம் இப்போ நைட் லேட்டாயிருச்சு, நான் தர்ற மாத்திரைகள மட்டும் குடுங்க. போற வழியில் அப்பல்லோ ஃபார்மசி இருக்கும் அங்க ஒரு ஆக்சி மீட்டர் வாங்கிக்கோங்க. நைட் ஃபுல்லா அப்பப்போ கவனியுங்க. 92க்கு கீழ போச்சுன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் ஜி எச்சுக்கு இன்ஃபார்ம் பண்ணிருவேன். காலைல அவங்க வருவாங்க. அங்க தான் எல்லா எக்விப்மென்ட்டும் இருக்குது. நல்லா கவனிப்பாங்க. சின்னப் பையன் தானே சரியாயிரும். பயப்படாம இரு தம்பி” பேசிக் கொண்டே டாக்டர் எழுந்தார். ஃப்ளாஸ்க்கில் இருந்து ஒரு கப்பில் டீயை ஊற்றி மெதுவாக உறிஞ்சிக் கொண்டிருந்தார். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல அவரது சுழலும் நாற்காலியில் அடுத்த பக்கம் திரும்பினார்.

ஆன்ட்ரூ அரண்டு போயிருக்க, அவன் அப்பா, “வா போலாம்” என்றார். அவர்கள் பைக் அப்பல்லோவில் நின்றது. சென்டர் ஸ்ட்டாண்ட் போட்டு பைக்கில் அவனை உட்கார வைத்துவிட்டு மாத்திரைகள், மருந்துகளுடன் ஆக்சிமீட்டரும் வாங்கி வந்தார் அப்பா.

வீட்டுக்குப் போகவும் வாசலிலேயே அம்மா, ‘என்னாச்சு?’ என்று கண்களாலேயே கேள்வி கேட்டுக் கொண்டு நின்றார்.

“காலைல ஜெ எச்சுக்குப் போகணும். அவனுக்கு ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வை. அந்த ஸ்டீல் ஃப்ளாஸ்க்க நல்லா வென்னி விட்டு கழுவி எடுத்து வை” என்றபடியே அப்பா வாசலில் இருந்த சானிட்டைசர் பாட்டிலின் குழாயில் இருந்து கைகளில் வழிந்த திரவத்தை கைகளில் நன்றாகத் தடவிக் கொண்டே உள்ளே போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *