முனிசிபல் ஊழியர்கள் ஆன்ட்ரூவின் வீட்டைச் சுற்றி வெள்ளைப் பவுடர் தூவி, வீட்டு வெளி வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிப் போய்விட்டார்கள். தெருவிலுள்ளவர்கள் எல்லாரும் வேடிக்கை பார்க்கவே ஆன்ட்ரூவின் அம்மா பெருங்குரலில் அழவே துவங்கிவிட்டார். அப்பா அதட்டினார், “மிஞ்சிப்போனா ரெண்டு வாரம். திரும்பி வரப்போறான். போய் நல்லா ஜெபம் பண்ணு. அப்பப்போ அவங்கூட செல்ஃபோன்ல பேசலாம். செல்லராஜ் தினமும் பகல்ல அவன் கூட இருக்கேன்னு சொல்றான். அப்புறம் என்ன அழுகை?”

செல்லராஜ் தானே காரில் கூட்டிச் சென்று அட்மிஷன் போடுவதாகவும், ஆன்ட்ரூவின் அப்பா வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அது உண்மையிலேயே குடும்பத்துக்கு ஆறுதலாக இருந்தது. அம்மா கொடுத்து விட்ட பைகள் எல்லாம் பின் சீட்டில் வைத்திருக்க, ஆன்ட்ரூ முன்பாக அமர்ந்து கொண்டான். “வயசானவங்க தான் திரும்பி வரும் போது டெட்பாடியா நேரா கல்லறைக்குப் போவாங்க. நீ திரும்ப வருவ, நமக்கு பார்ட்டி வைக்கிற” என்று சில மச்சிகளும், மச்சான்களும் அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தனர். யாருமே எந்த ஆஸ்பத்திரி, எந்த வார்ட் என்று கேட்கவே இல்லை.

டெஸ்ட்டுகள், சிகிச்சைகள் எல்லாமே நர்ஸ்கள் தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆன்ட்ரூ தான் அந்த மேல் வார்ட்-இல் வயது குறைந்தவன். பல வயதானவர்கள் இருமிக்கொண்டும், மூச்சிரைத்துக் கொண்டும், செத்துக் கொண்டும் இருந்தார்கள். இரவில் தனியாக இருப்பது தான் ஆன்ட்ரூவுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. பாத்ரூம் போவதும் அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. இதற்கெல்லாம் செல்லராஜ் அண்ணன் நல்ல ஐடியாக்களைக் கொடுத்திருந்தார். அவன் செல் போனுக்கு ரீசார்ஜ் செய்து, பேட்டரி பிரச்சனை இல்லாமல் இருக்க சார்ஜருடன் பவர் பேங்க்கும் கொடுத்துப் போயிருந்தார். நல்ல நல்ல பாடல்கள், கதைகள் உள்ள சேனல்களை புக்மார்க் செய்து கொடுத்திருந்தார். நல்ல ஒரு ஹெட்ஃபோனும் கொடுத்திருந்தார். அலாரம் வைத்து அதிகாலையில் சுத்தம் செய்யப்பட்ட உடனேயே பாத்ரூமுக்குப் போகச் சொன்னார். சாப்பாடும் நொறுக்குத் தீனிகளும் வேண்டிய அளவுக்கு இருந்தன. இரண்டு ஃப்ளாஸ்க்-களில் டீயும், ஜூஸும் இருந்தன. காலை சாப்பாட்டுடன் மதிய சாப்பாட்டையும் எடுத்து வருவார் செல்லராஜ். இரவு சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் போவார். இடையில் டீ, ஜூஸ்களும் செழிப்பாகக் கிடைத்தன. சில நேரங்களில் இப்படியே வாழ்க்கை இருந்துவிடாதா என்று நினைத்து, உடனே, ச்சீ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான் ஆன்ட்ரூ.

அவ்வப்போது லீலா அத்தைக்கும் ஃபோன் செய்து சான்ட்ராவின் நிலைமையையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆபிரகாம் சார் அங்கே போகவே இல்லையாம். இனி ஒன்று இரண்டு மாதம் அவர் நம் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் என்று நினைதுக் கொண்டான் ஆன்ட்ரூ. அவனுக்கு இருந்த நம்பிக்கைகளில் ஒன்று உடைந்து போய்விட்டது. ஜெபம் செய்து பேய் ஓட்டுவது இப்போதைக்கு நடக்காது. சான்ட்ரா குண்டானாலும் பரவாயில்லை என்ற தியாக உணர்வு அவனுக்குள் உருவாகத் துவங்கியது.

ஆனால், செல்லராஜ் அண்ணன் அவனுக்கே இது வரை வந்திருக்காத, வாய்ப்பே இல்லாத பல கேள்விகளை எழுப்பி அவனை சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தார். சில யூட்யுப் செய்திகளை அவனைக் கேட்க வைத்துக் கொண்டே அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களையும் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது அங்கே உள்ள மற்ற படுக்கைகளில் இருந்த மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லியும், யாரும் இல்லாமல் இருந்தவர்களுக்கு சாப்பாடு, டீ போன்றவற்றைக் கொடுப்பதிலும், விரும்பிக் கேட்டவகளுக்கு ஜெபம் செய்வதிலும் பிசியாக இருந்தார். அவருடைய முன் ஜாக்கிரதையைக் கண்டு ஆன்ட்ரூ ஆச்சரியப்பட்டுப் போனான். இரண்டு முகக்கவசங்கள் போட்டிருந்தும் மக்களுக்குத் தெளிவாகக் கேட்கும்படி பேசுவது, யாரையாவது, எதையாவது தொட்டுவிட்டால் மற்றவர்களுக்கு பளிச் என்று தெரியாத வகையில் தன் பேன்ட் பாக்கட்டில் இருந்த சானிட்டைசரை எடுத்துக் கையைத் துடைப்பதும், மற்றவர்களுக்கு முகக்கவசங்களைத் தாராளமாக எடுத்துக் கொடுப்பதுமாக இருந்தார்.

நாட்கள் வேகமாக ஓடினதா அல்லது மெதுவாக நகர்ந்ததுவா என்று ஆன்ட்ரூவால் சொல்ல முடியவில்லை. செல்லராஜ் அண்ணன் அவனது பல கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, காதல், கல்யாணம், பேய், பைபிள் என்று போர் அடிக்காமல் அவனுக்கு அப்போதைக்குத் தேவையாக இருந்த சந்தேகங்களை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருந்தார். அவனுக்குப் புரிந்தது மாதிரியும் இருந்தது, புரியாதது மாதிரியும் இருந்தது. காரணம் திரும்பத் திரும்ப அவனுக்குள் ஒன்றிரண்டு சிந்தனைகள் தான் ஓடிக் கொண்ருந்தன. “சான்ட்ராவுக்கு என்ன ஆகும்? அவள் எனக்குக் கிடைப்பாளா?” இதற்கு நேரடியாக செல்லராஜ் அண்ணன் பதில் கொடுக்கவில்லை. “ஜெபம் பண்ணு. எதுவாயிருந்தாலும் கர்த்தருக்கு பிரியமா இருக்குமான்னு கேட்டுப் பாரு” என்றார். அவன் ஜெபம் செய்ய முயற்சி செய்தால் தான் எல்லா காட்சிகளும், சான்ட்ராவின் முகமும் அவன் கண்களுக்குள் விடியோ போல ஓடிக் கொண்டிருக்கும். மொத்தத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சும்மா அந்த ஆஸ்பத்திரி படுக்கையில் தன் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன் இன்னும் ஒரு பெரிய கேள்வியும் நின்று கொண்டிருந்தது. இன்னும் எப்படியும் மூன்று வாரங்களாவது ஆனால் தான் அவன் வெளியே போக முடியும். அதற்குள் சான்ட்ராவுக்கு என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

***

அப்போது தான் அருமை நாயகம் சான்ட்ராவைப் பார்க்கக் கிளம்பினார், பிரம்மநாயகமும் மந்திரவாதியும் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இவர்கள் வீட்டில் வேலை செய்யும் அனைவரும் முதலாளியின் தம்பி என்பதால் எந்த மறுப்பும் சொல்லவில்லை. மந்திரவாதி ஒரு பையுடன் வீட்டைச் சுற்றி நடந்து வந்தார். ஒரு செப்புத் தகடு, தலையில் ஊசியால் குத்தப்பட்டு இருந்த, துணியால் செய்யப்பட்ட ஒரு பெண் பொம்மை, முட்டை போன்ற சில சாமான்களைக் கொண்டு வந்து பிரம்ம நாயகத்திடம் காட்டிக் கொண்டிருந்தார்.

“அந்தப் பாப்பாவோட ரூமுக்குள்ளயும் போய்ப் பாக்கணும்” என்றார் மந்திரவாதி. பிரம்மநாயகம் உள்ளே அழைத்துச் சென்றார்.
மேசை, அலமாரிகளை அவர்கள் திறக்கவும் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த பிரம்மநாயகத்துக்கு அதிர்ச்சி.

பெங்களூரில் ஐ டி துறையில் வேலை செய்யும் சான்ட்ராவின் அண்ணன் அலெக்சான்டர், இ பாஸ் கிடைத்து தன் குடும்பத்துடன் இங்கே வந்து இறங்குகிறான். இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம், அதுவும் அடிக்கடி வா வா என்று அழைக்கும் குடும்பத்துடன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் இருக்கலாம். தன் மகனையும் மகளையும் கொண்டு வந்து வரவேற்பறையில் வைத்துவிட்டு அலெக்சாண்டரும் அவர் மனைவியும் எல்லா சூட்கேஸ்களையும் காரில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.

“வெளில நிக்கிற கார் சித்தப்பாவோடது மாதிரி இருக்குது? அப்பா, அம்மா சான்ட்ரா எல்லாம் எங்கே?” அலெக்சானடரின் கேள்விகளுக்கு சமையல்கார அக்கா செல்வி தனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். கோபமாக உள்ளே போன அலெக்சான்டர், அவனை நோக்கி வந்து கொண்டிருந்த சித்தப்பாவை கோபத்துடன் முறைத்தவாரே கத்தினான், “கெட் அவுட்.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *