“சக்தி நாடி ஜோதிடம்”

கம்ப்யூட்டர் ஜாதகம், தோஷம், பரிகாரம், பூசைகள், மாந்திரீகம், பில்லி சூனியம் / ஏவல், வசியம் விலக்க.
ஜோதிட நிபுணர். மணப்புரம் கைலேஷ் குமார்.
இந்த போர்டுடன் ரோட்டை விட்டு சிறிது உள்ளே இருந்தது சக்தியின் வீடு மற்றும் ஜோதிட நிலையமும் இருந்தது. மரங்கள் சூழ்ந்த அந்தக் கட்டிடங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த ஜோதிட நிபுணரின் மூத்த மகன் தான் சக்தி. ப்ளஸ் டூ படித்து பரீட்சை எழுதியிருக்கிறான். லாக்டவுனுக்கு முந்தின நாள் தான் கடைசி பரீட்சை எழுதிவிட்டு வந்திருந்தான். கொரோனாவை சிறிது திட்டிக் கொண்டு தான் இருந்தார்கள் அவனும் அவன் நண்பர்களும். கொஞ்ச முந்தி வந்து பரீட்சையை இல்லாமல் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பது தான் அவர்கள் வயிற்றெரிச்சல். ரிசல்ட்டும் வந்து கல்லூரிக்கான அப்ளிக்கேஷனும் போட்டு ஆன்லைன் வகுப்புகளும் துவங்கிவிட்டன. அந்த வயிற்றெரிச்சலைத் தணித்துக் கொள்ளவும் அவர்கள் காலேஜ் சேர்ந்ததைக் கொண்டாடவும் தான், தண்ணீர் நிறைந்த அந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் காட்டாற்றுக்குத் தண்ணி சகிதமாக போலீஸ் கண்களில் படாதபடி குறுக்குவழி, கிராமங்கள், காடுகள் என்று தங்கள் பைக்குகளில் போய் ஒரு நாள் முழுவதும் ‘ச்சில் அவுட்’ செய்து கொண்டிருக்கும் போது தான் சான்ட்ராவைப் பற்றி அவர்கள் பேச்சு திரும்பியது.

“மச்சான் எப்படிறா உன்னால அந்த அல்லேலூயா குட்டிய கரெக்ட் பண்ண முடிஞ்சுது?” அவர்கள் பள்ளியில் படிக்காத சுந்தர் கேட்டான்.

“முதல்ல மேஜிக், கண்கட்டி வித்தைன்னு அவங்க அப்பாட்ட இருந்து சுட்டுக்கிட்டு வந்த டெக்னிக்ஸ் தான். அப்புறமா நம்ம தமிழ் சினிமால கத்துக்கிட்ட கொஞ்சம் சென்டிமென்ட்ஸ். அப்புறம் பரிதாபம் வர்ற மாதிரி பின்னாலேயே போய்… எத்தன வருஷம்? எட்டாங்கிளாஸ்ல இருந்து, ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு வருஷமா விடா முயற்சியில பிடிச்சது மச்சி.”

“எங்களுக்கும் கொஞ்சம் அந்த வசியம் டெக்னிக்க சொல்லிக் குடுறா? உங்க அப்பாவுக்கு மக்கள் குடுக்குற லெவல் எல்லாம் முடியாது, நீ ஜூனியர் தானே உனக்கு ஒரு ஃபுல் வாங்கித் தர்றேன். போதுமா?”

“டே அது அவ்ளோ ஈஸி இல்ல. கால் மண், தலை முடின்னு கலெக்ட் பண்ணி என்னலாமோ பண்ணி, அப்புறமா, கேன்டீன்ல ஜீஸ் குடிக்கப் போற லெவல் வந்ததும் அதுக்குள்ள மருந்து மிக்ஸ் பண்ணி தான் தலைவர் செட் பண்ணிருக்காரு. செத்தாலும் அந்தப் பொண்ணு இன்னொரு ஆளத் திரும்பிக் கூடப் பாக்க மாட்டா.”

“அது இருக்கட்டும் சான்ட்ராவோட அத்த பையன் ஒருத்தன் யாரு, ஆன்ட்ரூவா. பாவம்டா, அவங்க வீட்டுலயே உனக்கு இவ தான்னு சொல்லி வளத்தாங்களாமே? பேரு கூட அதான் ரைமிங்கா வைச்சிருந்தாங்களாம். அவன் எப்படி விட்டான்?”

“அதான் சொன்னேம்லா, அவ செத்தாலும் யாரையும் திரும்பிக் கூடப் பாக்க மாட்டா. இவ அவன துரத்தி விட்டுட்டா.”

“ரெண்டு பேர் வீட்டுலயும் தெரியுமா ப்ரோ?”

“ம் ஹூம் இது வரைக்கும் பெரியவங்க யாருக்கும் தெரியாது. இனிமே தான் தெரிய வைக்கணும்.”

“பொண்ணுக்கு பதினெட்டு வயசு ஆகட்டும்னு தான் வெய்ட்டிங்.”

நடுவில் தண்ணீருக்குள் இறங்குவதும், தண்ணியால் ஏறுவதுமாக அவர்கள் நேரம் தள்ளாடிக் கொண்டிருந்தது.

“அப்படின்னா இன்னும் ரெண்டு வருஷம் இருக்குன்னு சொல்லு.”

“ஆனா இப்போதைக்கு, கல்யாணத்தப் பத்தியே கவல இல்ல. நம்ம ஹீரோ வாங்கிக் குடுத்த செல்ஃபோன்ல தான் தினமும் ஆன்லைன் க்ளாஸ் நடக்குது. ஒரே வாத்தியார் ஒரே ஸ்டூடன்ட். நிதானமா கடலை போட்டுட்டு, கொரோனாவுக்கு இதமா ரசம் வச்சு குடிச்சுட்டு மெதுவா பாத்துக்கலாம். ஆத்து வெள்ளத்த நாயா கொண்டு போகப் போவுது?”

“சக்தி என்னடா நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிற?”

“மிஸ்டர் சக்தி, சான்ட்ரோவப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“அது வந்து ஃபைவ் சீட்டர் ஹாட்ச் பேக். கொரியா, இண்டியா கொலாபரேஷன்ல வந்த கார். நல்ல பெர்ஃபார்மென்ஸ். எனக்கு ரொம்ப ஓகே” சக்தி சிறிது குளறியபடி தான் பதில் சொன்னான்.

சுந்தர் இப்போது தலையை துவட்டி விட்டு தன் செல்ஃபோனை எடுத்து மிஸ்ட் கால்களைப் பார்த்தால் ஆன்ட்ரூவின் பெயர் மூன்று தடவைகள் இருந்தன. அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, “மச்சான் எங்க இருக்கிற?” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *