சுந்தருக்கு ஆன்ட்ரூ சுகமில்லாமல் இருந்தது பரிதாபமாக இருந்தது. அவன் தன் சொந்த அத்தை மகளை, சிறுவயதில் இருந்து மனதில் வைத்து ஆசையுடன் காத்திருந்தவளை நேற்று வந்த சக்தி, அதுவும் வேறு மதம், வேறு ஜாதியிலுள்ளவன் கொத்திச் செல்வது சரியாகத் தெரியவில்லை. எனவே ஆன்ட்ரூவுக்கு உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் தான் இந்தக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறான்.
“நான் உன்ன வந்து பாக்கிறேன் மக்கா” என்று சொல்லி மிஸ்ட் கால், டயல்ட் நம்பர் எல்லாவற்றையும் அழித்துவிட்டுத் தான் திரும்பிப் பார்த்தான்.
“யாருடா இந்த நேரத்துல? டவர் இல்லாத இடத்துல இவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கற?”
“ஒண்ணும் இல்லடா எனக்கு ஏதோ கூரியர் வந்திருக்காம். வீட்ல இருந்து கூப்புட்டுப் பாத்திருக்காங்க. இப்ப தான் ஏதோ டவர் கிடைச்சிருக்கு. சரியாக் கேக்கல. வீட்ல வந்து பேசிக்கிறேன்னு சொல்லிட்டேன்” நம்புகிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் சுந்தர்.
அந்தக் கூட்டம் மெதுவாக அருகில் இருந்த டீக்கடையில் சூடாக வடை, முறுக்கு, டீ என்று தங்கள் அன்றைய ஆட்டத்தை முடித்து இருட்டுவதற்குள் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தது. யாரும் எதுவும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
அவரவர் ஏரியாவில் அவரவர் ‘பை’ சொல்லிப் பிரிந்தார்கள்.
சுந்தர் ஜாக்கிரதையாக அவன் வீட்டுக்குப் போகும் இடத்தில் பிரிந்து திரும்பவும் வேறு வழியாக அரசு மருத்துவமனைக்குத் தன் வண்டியை விட்டான்.
அவன் உள்ளே நுழையவும் செல்லராஜ் வெளியே டீயும் இரவு உணவும் வாங்க வெளியே வரவும் சரியாக இருந்தது.
சுந்தரும் ஆன்ட்ரூவும் 20 நிமிட நேரம் நன்றாகத் திட்டம் தீட்டினார்கள். அதன் பின் ஆன்ட்ரூவுக்கு ஒரு உற்சாகமான உணர்வு வந்தது.
மறுநாள் ஆன்ட்ரூ அட்மிட் ஆகி ஐந்தாவது நாள், ஸ்வாப் டெஸ்ட் எடுத்து, ஆறாவது நாள் சொல்லிவிட்டார்கள், “உனக்கு நெகட்டிவ், வீட்டுக்குப் போகலாம்.”
ஆன்ட்ரூவுக்கு நேராக சான்ட்ராவைப் பார்க்கப் போகவேண்டும் என்று தான் இருந்தது. ஆனால் செல்லராஜ் தான், உனக்கு பாசிட்டிவ்னு அவங்களுக்குத் தெரியுமா இல்லையான்னு தெரியல. அவங்க ஏதாவது சொல்றமாதிரி நடந்துக்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் கொண்டு விட்டார்.
***
சான்ட்ரா டிஸ்சார்ஜ் ஆகி வரும் போது அலெக்சான்டரும் அவர் மனைவி திவ்யாவும் வரவேற்பறையில் தான் சோஃபாவில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மகனும் மகளும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் அவரவர் ஐ பேட்-இல் மூழ்கி இருந்தனர். இது தான் அவர்களுக்கான ஒரு மணி நேர ஐ பேட் நேரம்.
“எப்படி இருக்கீங்க?”
“இப்ப எப்படி இருக்குது?”
“டாக்டர் என்ன சொன்னார்?”
“ஏய் ஸ்டீவி குட்டி என்னமா வளந்துட்டான்?”
“க்ளோரிம்மா எப்படி இருக்க?”
“காலைல சாப்புட்டுட்டீங்களா?”
என்று விசாரிப்புகளும் வரவேற்புகளும் முடியும் போது திவ்யா தான், “சான்ட்ரா உன்னோட ஃபோன்” என்று தன் அருகில் இருந்த அன்று சித்தப்பா கொடுத்த ஃபோனை கையில் எடுத்தாள்.
“என் ஃபோன் அம்மா பையில தான் இருக்கு” என்று சான்ட்ரா சொல்லவும், அலெக்சான்டர் திவ்யாவிடம் கண்ணைக் காட்டி அதை அப்படியே வைத்துக் கொள் என்று கண்ஜாடை காட்ட, திவ்யாவும் எதுவும் நடக்காதது போல தன் கையை மடக்கி அந்த ஃபோனை தன் ஃபோன் என்பது போல சிறிது நோண்டிவிட்டு கீழே வைத்துவிட்டாள்.
வீட்டில் உதவி செய்யும் அக்கா டீ கொண்டு வரும் போது சான்ட்ரா தன் அறையை உருட்டுவதும் சத்தம் போடுவதும் கேட்டது.
“யாரோ என் ரூமத் திறந்து உருட்டியிருக்காங்க. என்னோட சில திங்க்ஸக் காணல” என்று உருண்டு கொண்டிருந்தாள்.
அலெக்சான்டர், “நீ தேடுறது இது தான்னா, அண்ணி கிட்டப் போய் விபரம் எல்லாம் சொல்லி வாங்கிக்கோ” என்று மற்றவர்களுக்குக் கேட்காதபடி தன் கையிலிருந்த அந்த சக்தி வாங்கிக் கொடுத்திருந்த எம் ஐ ஃபோனைக் காட்டிவிட்டு, அதை திவ்யாவின் கையில் கொடுத்தார்.
திவ்யாவும், “சான்ட்ரா நீ எப்ப வேணாலும் மேல எங்க ரூமுக்கு வரலாம். நாம ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசலாம்” என்றபடி சான்ட்ராவின் அறைக்கதவை சார்த்திவிட்டுப் போனார்.