ஜெபப் பூங்கா கூட்டம் குறைந்து தான் இருந்தது. கொரோனா பயத்தால் பலர் வரவில்லை. வந்தவர்களும் சிலர் தனியாகவும் ஒன்றிரண்டு பேராகவும் முகக்கவசமும், திறந்த வேதபுத்தகத்தின் முன் உட்கார்ந்தும் முழங்காலிட்டும் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் பாடியது முகக்கவசத்தின் வழியாக ஏதோ முனகுவது போலக் கேட்டது.

லீலா அம்மாவும் எலிசபெத் அம்மாவும் ஒரு மூலையில் ஒரு செம்பருத்திப் பூச் செடிக்குப் பின் வசதியாகவும் மறைவாகவும் உட்கார்ந்து தங்கள் கவலைகளையும் ஜெபிக்க வேண்டிய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். தங்கள் பெண் ஒருத்தியே சுகவீனமாக இருப்பதால் அவர்கள் இன்று மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசவில்லை.

“நாம நம்ம குடும்பத்துக்காக ஒழுங்கா ஜெபம் பண்ணல அதுனால தான் இப்படிப் பிரச்சனையாவே இருக்குது.”

“நம்ம குடும்பத்துல எத்தனையோ நல்ல காரியங்கள் நடந்துருக்கு அது எல்லாம் நாம ஜெபம் பண்ணியா நடந்தது?”

“அது தான் இவ்வளவு நல்லது செஞ்சும் நன்றியோட இல்லன்னு தான் கர்த்தர் நமக்கு சின்னச் சின்ன அடி குடுத்து இப்படி அவரைப் பாத்து ஜெபம் பண்ண வைக்கிறார்னு நினைக்கிறேன்.”

“இங்க பாருங்க அண்ணி, நாம ஜெபம் பண்றது, நல்லது நடக்கணும்னோ, கெட்டது நடக்கக் கூடாதுன்னோ இருந்துச்சுன்னா, நாம கிறிஸ்தவங்களா இருக்கறதுல அர்த்தமே இல்ல. இப்போ நமக்கு இருக்கற பிரச்சனைக்காக கர்த்தர் கிட்ட ஜெபம் செய்வோம். இனிமேலும் நல்லதோ கெட்டதோ எப்படி சூழ்நிலை இருந்தாலும் ஜெபம் பண்ணணும். பாருங்க என் புருஷன் கோயில், கொளம், கடவுள் எதுவும் இல்லன்னுட்டு சுத்திட்டு இருக்காரு. நானும் தினமும் ஜெபம் பண்ணிட்டுத் தான் இருக்கேன். அவரு மாறுன மாரி தெரியல. அதுக்காக உட்டுற முடியுமா? கர்த்தர் இரக்கம் காட்டுற வரைக்கும் ஜெபிக்க வேண்டியது தான்.”

“அது சரி தான். நானும் என் மகனுக்காக தினமும் ராவும் பகலும் ஜெபம் பண்ணப்பண்ண, அவனும் மேல மேல அக்கிரமம் பண்ணிட்டு இருந்தான். வெறுத்துப் போய் ஜெபம் பண்றத விட்டுட்டேன். நீ சொல்றதும் சரிதான். இனிமே என்ன நடந்தாலும் தினமும் ஜெபிக்க வேண்டியது தான்.”

குறிப்பிட்ட நேரத்தில் அலெக்சான்டர் திரும்ப வந்து அம்மாவுக்கு ரிங் கொடுத்து ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தார்கள். இருவருமே கண்கள் கலங்கி, மூக்கை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு தான் காரில் ஏறினார்கள்.

இந்த நேரம் அவர்களை இன்னும் வருத்தப்படுத்த விரும்பாமல் அலெக்சான்டர் எதுவும் பேசாமல் ஆறுதலான சில கிறிஸ்தவப் பாடல்களை அவனது அலைபேசியிலிருந்து ப்ளூ டூத் வழியாக ஒலிக்க வைத்துக் கொண்டு வந்தான்.

“அம்மா, அத்த இந்த லாக் டவுன் காலத்துல நாம குடும்பமா இன்டர்நெட் வழியா சின்ன பைபிள் ஸ்டடியும் செஞ்சுட்டு அப்படியே ஜெபம் பண்ணுவோமா?” அலெக்சான்டரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதன் கிழமை மாலை 7 மணி முதல் 8 மணி வரை என்று அறிவிக்கப்பட்டது. மற்ற ஏற்பாடுகளை எல்லாம் அலெக்ஸ் செய்வதாக முடிவானது. அரை மணி நேரம் முன்பாக நினைவுறுத்தவும் தான் அலைபேசியில் அழைப்பதாகவும் அலெக்சான்டர் வாக்குக் கொடுத்தார்.

***

சட்டென்று சான்ட்ராவின் அறைக்குள் திவ்யா சென்று பார்த்த போது அவள் வேகவேகமாக கம்ப்யூட்டரின் மானிட்டரை ஆஃப் செய்யவே, ஒன்றும் தெரியாதது போல பாத்ரூம் போய் வருவது போல சென்றுவிட்டார் திவ்யா.

“என்னங்க ஆன்லைன் க்ளாஸ்லயுமா பிரச்சன இருக்கும்?”

“கொஞ்சம் இரு. நாம இதுல தலையிட முடியாது. ஸ்கூல்ல நமக்கு யாரையும் தெரியாது. பெருமாள் அங்கிள் கிட்ட பேசிப் பாக்கலாம்.”

பெருமாள் ஐபிஎஸ்-க்கு பணிக்காலம் இன்னும் சில வருடங்கள் தான் இருக்கின்றன. நேர்மையான காவல் அதிகாரி என்று பெயர் எடுத்தவர். அடுத்த மாவட்டத்தில் தான் டி எஸ் பியாக இருக்கிறார். அலெக்சான்டருக்கு கல்லூரி காலத்தில் இருந்தே அவரைத் தெரியும். அவர்கள் ஒரே பைபிள் ஸ்டடி, ஜெபக்கூட்டத்துக்கு இரண்டு ஆண்டுகளாக வாரம் தோறும் ஒன்றாகப் போயிருக்கிறார்கள். பைபிள் பற்றி தனியாகவும் நேரம் கிடைக்கும் போது மணிக்கணக்கில் உரையாடல் நடக்கும். நாட்டு நடப்பு, குற்றங்கள் பற்றி மனம் வருந்தி இருவரும் ஜெபத்த நேரங்கள் மறக்க முடியாதவைகள்.

இப்போதும் கூட அவர்கள் ஒரே வாட்சப் குழுவில் பல ஆன்மீக செய்திகளையும், ஜெபங்களையும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

***
பெருமாள் ஐ பி எஸ் இந்தப் பிரச்சனையைக் காரணமாக வைத்து, அவருக்கு இருந்த அலுவலக வேலையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஒரு சனிக்கிழமை ஊருக்கு வந்தார். ஆன்ட்ரூ கொடுத்த தகவல்களின் மூலம் நேராகவே சக்தி வீட்டுக்குப் போய், ஒரு மிரட்டல் கொடுத்துவிட்டு வந்தார். அலெக்சான்டரும், செல்லராஜும் உடன் போயிருந்தார்கள்.

“இனிமே பிரச்சனை வந்தா எனக்கு ஒரு ஃபோன் மட்டும் பண்ணுங்க” என்று சக்தியின் அப்பாவை வைத்துக் கொண்டே இவர்கள் இருவரிடமும் சொன்னார் பெருமாள்.

வெலவெலத்துப் போய் நின்று கொண்டிருந்த சக்தியின் அப்பாவும் அம்மாவும் வெளியே சாலை வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

“ஐயா இது வரைக்கும் ஒரு கெட்ட பேரு இல்லாம தொழில் செஞ்சுட்டு இருக்கேன். மக்களுக்கு நல்லது தான் செஞ்சிருக்கேன். எனக்கு நீங்க சொல்றது எதுவுமே தெரியாது. என் மகன் வந்ததும் அவனக் கண்டிச்சு வைக்கிறேன். இனிமே அப்படி நடக்காது. நான் உறுதி குடுக்குறேன்.”

ஜீப்பில் ஏறியதும் பெருமாள் சொன்னார், “பையன் வீட்டுக்குள்ளே தான் இருக்கான். சரி போட்டும்னு விட்டுட்டேன். இந்த மிரட்டலே போதும். இனி நம்ம வீட்டுப் பிள்ளையத் தான் நீங்க பத்திரமா பாத்துக்கணும். நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன். பாப்பாவுக்கு வயசு என்ன?”

“ப்ளஸ் ஒன்ல இருந்து ப்ளஸ் டூ போறா. பதினேழு வயசு.”

“இனிமே தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். எதையுமே கடுமையா செய்யாதீங்க. அன்போட அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்லுங்க. அன்பா பாத்துக்கோங்க. எல்லாத்துக்கும் மேல தினமும் கர்த்தர் கையில தான் நம்ம பிள்ளைங்கள ஒப்புக் குடுத்து ஜெபம் பண்ணணும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *