Zoom மீட்டிங் ஒழுங்காக புதன் கிழமைகளில் நடந்தன. செல்லராஜ், அலெக்சான்டர், லீலா அத்தை, எலிசபெத் அம்மா, ஆன்ட்ரூ, சான்ட்ரா, இன்னும் சில உறவினர்கள் என்று அவ்வப்போது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக்கொள்ளவும் உதவியாக இருந்தது. செல்லராஜும் அலெக்சான்டரும் தான் ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்று வேதத்தில் இருந்து பாடங்கள் எடுத்தார்கள். வேதபாடம் எடுக்காதவர் ஜெபத்தை நடத்தினார். சில நேரங்களில் சந்தேகம் கேட்பதற்காக யாராவது நேரம் எடுத்தால் அதற்கும் பதில்கள் கொடுக்கப்பட்டன. எல்லோருமே செல்லராஜும் அலெக்சான்டரும் இவ்வளவு வேத அறிவுடன் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்.
சான்ட்ரா வேண்டா வெறுப்புடன் உட்கார்ந்திருப்பாள். ஆன்ட்ரூ இப்படியாவது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஏதாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்தான். மீட்டிங்கில் இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் லீலா அத்தை, எலிசபெத் அம்மா, செல்லராஜ் குடும்பம் மற்றும் அலெக்சான்டர் குடும்பம் சான்ட்ராவுக்காக மிகவும் உருக்கமாக ஜெபம் செய்து கொண்டனர். சாப்பிடாமல் உபவாசம் இருந்து ஜெபிப்பதாகச் சொன்ன லீலா அத்தையை அவர் மகன் அலெக்சான்டர் தடுத்துவிட்டார், “ஷுகர் இருக்கறவங்க ஃபாஸ்ட்டிங் இருந்து ஜெபம் பண்ணிட்டு அப்புறமா நாங்க உங்களுக்காக ஃபாஸ்ட்டிங் இருந்து ஜெபம் பண்ற மாதிரி ஆயிரப் போகுது.”
***
“எழுநூத்து இருபத்து எட்டு நாள் அவ பின்னால சுத்தி இந்த லெவலுக்கு வந்திருக்கு. சும்மா விடுவேனா? பாரு. என்ன நடக்குதுன்னு. இன்னும் கரெக்டா ஒருவருஷம், அப்புறமா அவ மேஜர் ஆயிருவா. எந்த காலேஜ்ல சேந்தாலும் அவ வெளில வருவா, நான் கூட்டிட்டுப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவேன்.”
“மச்சான் தப்பா நினைச்சுக்காத. ஒரு வருஷமா பிரிஞ்சி இருந்தான்னா, சக்தின்னா யாரு? மசலாப் பொடி கம்பெனியான்னு கேப்பா.”
“நாங்க அதுக்கெல்லாம் வழி வச்சிருக்கோம்லா. மொபைலப் புடுங்கிட்டா? ஆன்லைன் க்ளாஸ்ல மறிச்சிட்டா? எங்களுக்கு வழியே இல்லியா? தினசரி நல்லாவே கடல வருத்துட்டுத் தான் இருக்கோம்.”
“என்ன வழிடா?” சுந்தர் அப்பாவி போலக் கேட்டான்.
“இப்போதைக்கு ஒரு வருஷத்துக்கு அது சஸ்பென்சாவே இருக்கட்டும். ”
***
“அத்தான் நான் ஒண்ணு சொல்லுவேன், நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.”
“சொல்லு, ஆன்ட்ரூ”
“சான்ட்ராவுக்கும் சக்திக்கும் இன்னும் பேச்சு வார்த்த நடந்துட்டுத் தான் இருக்குதாம். அதுவும் டெய்லி. பாத்துக்கோங்க.”
அலெக்சான்டருக்கு பெரிய குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
“வர்றேன். நிச்சயமா கண்டு பிடிச்சிருவேன்.”
சுவரில் இருந்த ஒரு சிறிய வெள்ளை போர்டில் அவர்கள் வீட்டுப் படத்தை வரைந்து, வாசல்கள் மற்றும் பல வாய்ப்புக்களை சில சில குறியீடுகள் மற்றும் எழுத்துக்களை குறித்து வைத்தார்.