சரியாக ஒரு மாதம் பெரிய சம்பவங்கள் இல்லாமல் கடந்து போயின. ஆன்ட்ரூவுக்கு நெகடிவ் என்று ரிப்போர்ட் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதிகம் அவனே வெளியே போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறான். செல்லராஜ் தான் அவ்வப்போது அவனை வந்து பார்த்து, புரோட்டின் அதிகம் உள்ள பல உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துச் சென்றார். இப்போது ஆன்ட்ரூ அவரிடம் சிறிது நெருக்கமாக பழகுவதாகத் தெரிகிறது.

சுந்தருடன் தினமும் ஆன்ட்ரூ அலைபேசிக் கொண்டு தான் இருக்கிறான். அத்துடன் ஆன்ட்ரூ ஜெபம் செய்கிறான். சுந்தர் பிடிபட்டுவிடக் கூடாது என்றும், சான்ட்ரா பழையவைகளை மறந்து, பேய் தொந்தரவு இல்லாமல், மனநிலை மருந்துகளால் குண்டாகிவிடாமல், அவள் சக்தியை மறந்து, தன்னை ஏற்றுக் கொள்ள, எப்படியாவது ஒரு நல்ல வேலை கிடைத்து, மாமா சம்மதத்துடன் சான்ட்ராவுக்கும் தனக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்பது தான் அவன் திரும்பத் திரும்ப செய்யும் ஜெபமாக இருக்கிறது. அதற்காக அவன் சில பொருத்தனைகள் செய்திருக்கிறான். அவற்றைப் பற்றி செல்லராஜ் இடம் இன்னும் கொஞ்சக் காலத்துக்கு அப்புறம் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.

செல்லராஜ் அண்ணன் சொல்வது போல நல்லா பக்தியா மாறிட்டா, கர்த்தர் மனம் இரங்கி தன்னுடைய ஜெபங்களைக் கேட்பார் என்று அவன் உறுதியாக நம்புகிறான். புதன் கிழமைகளில் குடும்ப zoom மீட்டிங்-கள் எதுவும் அவன் இல்லாமல் இருப்பதில்லை. திரையில் சான்ட்ராவின் விடியோவை மட்டுமே பின் செய்து வைத்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் அவன் ஜெபத்துக்குப் பதில் கிடைத்ததாகவே உணர்ந்தான். சக்தி தோற்றது போன்றே அவன் நம்பிவிட்டான். சக்தி கூட வேறு ஏதாவது பெண்ணைப் பின் தொடரட்டும் என்று கூட அவன் ஜெபித்திருக்கிறான்.

***

இப்போது சான்ட்ரா தன் அண்ணனிடம் அன்பாகப் பேசத் துவங்கியிருக்கிறாள். திவ்யாவிடம் புன்னகைக்க முயற்சிக்கிறாள். குடும்ப ஜெபம், வேத ஆராய்ச்சி நடக்கும் Zoom மீட்டிங் அவளுக்கு சிறிது பழகிப் போய்விட்டது. ஆனாலும் அடிக்கடி அவள் பித்துப் பிடித்தது போல உட்கார்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு ஏதோ நினைவில் மூழ்கியிருப்பது போல் இருப்பாள், பள்ளிக்கூடத்தின் ஆன் லைன் பாடங்கள் நடக்கும் போது கூட. அண்ணனும் அண்ணியும் மிகவும் பொறுமையாக, அன்புடன் அவளை நடத்துவது அவளுக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

“இப்படியே இவளுக்கு வைரஸ் அட்டாக் வராம பாத்துக்கிட்டா, கர்த்தர் கிருபையில இவ பழைய சான்ட்ராவ விட நல்லா வந்திருவா.”

“நீங்க எந்த வைரஸ்-ச சொல்றீங்க?”

“சி இல்ல எல் வைரஸ்.”

“பாவம் அவளுக்கு எந்த வைரஸ் அட்டாக்கும் வேண்டாம்.”

***

சக்திக்கு கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும், சான்ட்ராவுடன் தொடர்பு கொள்வது எப்படி என்பது தான் அவனுடைய முழு நேர சிந்தனையாக இருந்து கொண்டிருக்கிறது. சி சி டிவி கேமராக்கள் சான்ட்ராவின் வீட்டில்
பொருத்தியதும், வடிவு செல்லராஜின் தோட்டத்தில் வேலைக்கு அனுப்பப்பட்டதும் அவனுக்கு பெரிய தோல்வி தான். செல்லராஜையும், அலெக்சான்டரையும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவனுக்கு வெறியாக இருந்தது. ஆனாலும் பெருமாள் ஐபிஎஸ்-இன் மிரட்டல், அப்பா அம்மா தன்னிடம் வாங்கிய சத்தியம் எல்லாமே அவனுக்கு முன்பாப் பெரிய மலைகளாக இருந்து கொண்டிருந்தன.

அவனுக்கும் அவன் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கும் தொடர்பு நன்றாகத் தான் நேரப் போக்குகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் ஒன்றாகச் சேரும் எல்லா நேரங்களிலும் சக்தி தனியாக ஒதுங்கியே இருந்தான். அவனது துன்பத்தில் பங்கேற்பதற்காக சில ஐடியாக்களும் அவ்வப்போது கொடுக்கப்படும். சக்தி எதிலும் ஆர்வம் இல்லாமல் தான் இருந்து கொண்டிருந்தான். ஒரு நாள் கூட்டத்தில் இருந்து நவநீ என்று அழைக்கப்படும் நவநீதகிருஷ்ண மூர்த்தி தான் ஒரு பிரமாதமான ஐடியா கொடுத்தான்.

“சக்தி நான் சொல்றது உனக்கு ஒரு மாதிரியா இருக்கலாம். ஆனா நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன். உங்க அப்பா ஒத்துக்க மாட்டார். ஆனா நீ ஏன் இன்னொரு மந்திரவாதியப் பாக்கக் கூடாது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *