சான்ட்ராவுக்கு மீண்டும் அசுத்த ஆவியின் தாக்குதல் ஏற்பட்டது. அவள் அப்பாவின் கூற்றுப்படி அவளுக்கு மீண்டும் மனநிலையில் ஏதோ பிரச்சனை. குணா மனநல மையத்தில் தான் இப்போது அலெக்சான்டர் தன் லேப் டாப்புடன் உட்கார்ந்திருக்கிறார். அம்மாவும் கூடவே இருக்கிறார்கள். அப்பா இந்த தடவை சான்ட்ரா மருத்துவமனையில் இருப்பதை மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். யாருமே பார்க்க வரவில்லை. ஆன்ட்ரூ கூட புதன் கிழமை zoom கூட்டத்தில் ஏதோ வித்தியாசமாக பின்னணி இருக்கிறதே என்று தான் நினைத்தான். அன்று சான்ட்ரா கூட்டத்தில் முகம் காட்டவில்லை. அலெக்சான்டரும் லீலா அத்தையும் இருந்த இடம் வேறு ஏதோ ஒரு இடம் போலத் தெரிந்தது. அவனால் சான்ட்ராவை எங்கே என்று கேட்கவும் முடியவில்லை. அம்மாவைக் கேட்கச் சொன்னான். அம்மா நாளை ஃபோன் பண்ணும் போது கேட்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள்.

அலெக்சான்டருக்கு ஃபோன் பண்ண அவனுக்கு சிறிது தயக்கமாகத் தான் இருந்தது. சிறு வயதில் இருந்தே, அலெக்சான்டருடன் அவனுக்கு அதிகம் ஒத்துப் போகாது. சான்ட்ரா விஷயத்தில் அண்ணன்காரன் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று தான் நல்லது கெட்டது எதிலும் அலெக்சான்டரிடம் சிறிது தூரம் விட்டுத் தான் பழகினான். அதனால் செல்லராஜிடம் கேட்க நினைத்தான். என்னவென்று தெரியாமல் அவனுக்கு தூக்கமும் வராது, தலையும் வெடித்துவிடும் போல இருந்தது.

***

“ஏன் அண்ணே இப்படி? Zoom மீட்டிங்ல வார வாரம் ஜெபம், வேதம்னு இருந்தப்புறமும் அவளுக்கு திரும்பவும் அப்படி ஆயிருச்சு?”

“நான் கூட எவ்வளவு திருந்தி இருந்தேன், உங்களுக்கே தெரியும் இல்லியா? ஆண்டவர் ஏன் இப்படி சோதிக்கிறாரு?”

“ஆன்ட்ரூ, நாம போன மாசமே பைபிள் ஸ்டடில பாத்தோம். கர்த்தர் எந்த சூழ்நிலையிலேயும் நமக்கு நல்லவராத் தான் இருக்காரு. நமக்கு நல்லது நடக்கும் போது எப்பவாவது, என்ன விட நல்லவங்களுக்கே இப்படி நடக்கல எனக்கு கர்த்தர் இவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு. ஏன் இப்படி செய்யிறாருன்னு யாராவது கேட்டிருக்கோமா?”

“அப்படின்னா நல்லவரா இருக்கற கர்த்தர் நமக்கு கஷ்ட்டமா குடுத்துட்டு இருப்பாரு. அவரு நல்லவர்னு நம்ம அழுதுக்கிட்டே சொல்லணுமா?”

“நாம் அழுவுறதும், சிரிக்கிறதும் நம்மளோட உணர்ச்சிகள். நம்ம உணர்ச்சிகள் அப்பப்போ வந்து போயிட்டு இருக்கும். ஆனா, உண்மை அப்படிங்கறது ஒண்ணே ஒண்ணு தான். அது மாறவே மாறாதது. கடவுள் நல்லவர், அவர் அன்புள்ளவர் அப்படிங்கற உண்மை ஒரு நாளும் மாறாது. நாம சோகமாக இருந்தாலும், மகிழ்ச்சியா இருந்தாலும் கர்த்தர் நல்லவர் தான்.”

“அப்போ கடவுள் ஒரு சாடிஸ்ட்டா? நாம கஷ்ட்டப்படணும், அவரு நல்லவர்னு பேரு வாங்கிக்கணும்.”

“ஆன்ட்ரூ, சின்ன வயசுல உனக்கு சுகமில்லாமப் போகறப்போ, உங்க அப்பா உனக்கு வலிக்கணும் அப்படின்னு டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் ஊசி போட வச்சிருப்பாரா?”

“அப்பாவையும் கடவுளையும் எப்படி நீங்க கம்பேர் பண்ணலாம் அண்ணே?”

“சபாஷ் நல்லாவே கேள்வி கேக்கிற. நல்லா யோசிக்கிற, இப்போ உனக்குப் புரியற மாதிரி சொல்லுறேன்.”

“கர்த்தர் நல்லதாத்தான் எல்லாத்தையும் படைச்சாரு. ஆனா மனுஷன் அவருக்கு எதிரா, கீழ்ப்படியாமப் போனதுனாலத் தான் உலகத்துல தீமை வந்துச்சு. அந்தத் தீமை இந்த உலகத்துக்குள்ள சாபங்களக் கொண்டு வந்திருச்சு. எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுப்போம். இது விவசாயத்துக்கு மட்டுமில்ல ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.”

“அப்படின்னா சான்ட்ரா செஞ்ச தப்புக்குத் தான் அவளுக்கு இந்தத் தண்டனையா?”

“ஆன்ட்ரூ அப்படிப்பாத்தா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க முடியாது. சில நேரங்கள்ல நாம செஞ்ச தப்புக்காக நாம கஷ்ட்டப்படுவோம். சில நேரங்கள்ல மத்தவங்களோட தப்புனால நாம கஷ்ட்டப்படலாம். ஆனா எதுவா இருந்தாலும், கர்த்தர் இந்த உலகத்துல வச்சிருக்கிற பொதுவான விதிகள் மாறவே மாறாது. வரலாற்றுல எப்பவாவது ஒண்ணு ரெண்டு தடவைகள் அற்புதமா அது மாறியிருக்கலாம். உதாரணமா, ஒருத்தர் எவ்வளவு தான் கர்த்தர் மேல விசுவாசமா, பக்தியா இருந்தாலும் கூட அவர் மாடியில இருந்து குதிச்சார்னா, புவி ஈர்ப்பு விசை அவர கீழே விழாம தாங்காது. கர்த்தரே என்னக் காப்பாத்தும்னு ஜெபம் பண்ணிட்டு குதிச்சா, அவரால காப்பாத்த முடியும் ஆனா, காப்பாத்த மாட்டார். ஏன்னா, அவர நம்புறவங்க, தேவையில்லாம குதிக்க மாட்டாங்க. அவர சோதிச்சுப் பாக்கவும் மாட்டாங்க.”

“கர்த்தருக்கும் பிசாசுக்கும் சண்ட நடந்தா அவங்களே ஒத்திக்கு ஒத்தி போட்டுப் பாத்துக்க வேண்டியது தானே, நம்மள வச்சு அவங்க மோதிக்கிறாங்க.”

“ஆன்ட்ரூ, சாத்தானும் ஆண்டவரும் சமமானவங்களே இல்ல. அத நீ புரிஞ்சுக்கணும். சாத்தான் கர்த்தரால படைக்கப்பட்ட ஒரு தூதன். நாம அவரால படைக்கப்பட்ட மனுஷங்க, சாத்தான் ஒரு விழுந்து போன தூதன். ஆனா அவன் கர்த்தருக்கும் மனுஷங்களுக்கும் எதிரியா மாறிட்டதால இப்படி சீறிட்டு இருக்கான். ஆனா அவன் பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரி. நாம தான் சீறலைப் பாத்து பயப்படுறோம். அவனுக்கும் சில வல்லமை இருக்கலாம். ஆனா கர்த்தர் சர்வ வல்லவர்.”

“இப்போ என்ன செஞ்சா அசுத்த ஆவி ஓடிப் போகும்? அதச் சொல்லுங்க. சும்மா கர்த்தர், பைபிள்னு கேட்டுக் கேட்டு எனக்கு இப்ப வெறுத்துப் போச்சு.”

“கொரோனா வைரஸ் மாதிரி தான் இந்த அசுத்த ஆவியும். பயப்படுறவங்களுக்கு இதுல பாதிப்பு இருக்கு. அதே மாதிரி ஏற்கனவே ஏதாவது வியாதி, பலகீனம், பாதிப்பு உள்ளவங்களுக்கு இது அதிகமா வந்திருது. சில விஷயங்கள் நமக்கு மர்மமாவே இருக்குது. அது மாதிரி தான் அசுத்த ஆவியும். நாம பாதுகாப்பா இருந்துக்கணும். அதுக்கு மேல கர்த்தர் விட்ட வழி.”

“எனக்கு குழப்பமா இருக்குது அண்ணே. கண்டிப்பா உங்க கிட்ட நேரில இதயெல்லாம் பத்தி நிறைய பேசணும்.”

“கண்டிப்பா, நீ இந்த வார்த்தைய சொல்லத் தான் நான் காத்துக்கிட்டே இருந்தேன். எப்ப வேணும்னாலும் சொல்லு, நாம தனியா நம்ம தோட்டத்துக்குப் போயிரலாம். பைபிள எப்படி கத்துக்கணும், கேள்விகளுக்கு எப்படி வேதத்தோட அடிப்படையில பதில்கள் கண்டுபிடிக்கணும்னு எல்லாம் நான் உனக்கு கத்துத்தாரேன்.”

“சரி அண்ணா. நான் உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.”

“ஒரு நாள் முந்தியே சொல்லு. நான் சில விஷயங்கள் அரேஞ்ச் பண்ணணும். நானே வந்து உன்ன வீட்டுல பிக் அப் பண்ணிட்டு, ட்ராப் பண்ணிடுறேன்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *