“ஹலோ, நான் பென்னி க்ரஹாம் பேசறேன். பெரும் வல்லமை ஊழியங்கள்ல இருந்து.”
லீலா அம்மாவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. டிவியில் பெரும் வல்லமை ஊழியம் நிகழ்ச்சியில், சினிமா ஹீரோ மாதிரி ஸ்டைலாக பிசாசு ஓட்டுவதும், ஸ்லோமோஷனில் அவர் அசைவுகளும் பல மதங்களில் உள்ள பலருக்கு ஒரு பாக்கியம் போலத் தெரியும். அவரது பாடல்கள் கூட வேற ‘லெவல்’ என்று இந்தக் காலத்து இளைஞர்களால் பாராட்டப்படுகின்றவை. பீட்டிலும் இல்ல நோட்டிலும் இல்ல. இது என்ன பாட்டு என்று பல பெரிய கிறிஸ்தவ பாடகர்கள் குறை சொன்னாலும் அவர் யுட்யூபில் இருந்து கோடிக்கணக்கில் (வருடத்துக்கு) சம்பாதிப்பதாக பலர் சொல்லி சொல்லியே இவர் இன்னும் பிரபலமாகிவிட்டார். முப்பது வயதுக்குள் தான் இருக்கும் அவரது கூட்டங்களுக்கு முப்பது வயதுக்கு மேலானவர்கள் போவது மிகவும் குறைவு. ஆனால் அவர் டி வி நிகழ்ச்சிகள் எல்லா வயதினருக்கும் பிடித்தமான வகையில் தயாரிக்கப்படுவதால் அவர் தமிழ் கிறிஸ்தவ உலகில் முடிசூடா மன்னனாக இருப்பதாக அவரே பரப்பி விட்ட ஒரு வைரல் விடியோ சொல்கிறது. லாக்டவுன் காலத்தில் கூட்டங்கள், கான்சர்ட்டுகள் நடத்த முடியாததால் அவர் zoom மீட்டிங்களில் நுழைவுக்கட்டணம் வசூலித்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
பென்னி க்ரஹாம் என் கிட்ட ஃபோன்ல பேசினார். இதை அதற்குள் லீலாம்மா தன் நண்பிகள், உறவினர்கள் எல்லோரிடமும் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.
“ஹலோ”
“மன்னிச்சுக்கோங்க பாஸ்டர். சாரி, ஊழியக்காரர், சாரி ப்ரதர். என்னால நம்பவே முடியல.”
“நம்பாததக் கூட நடத்திக் காட்டுவார் நம்ம நாதர் இயேசு. இப்போ உங்களுக்கு நான் ஃபோன் பண்ணுனதுக்கு காரணம், உங்க பொண்ணு வாழ்க்கையில ரெண்டு பயங்கரமான கட்டுகள் இருக்குதுன்னு எனக்கு ஒரு வெளிப்பாடு கிடைச்சது. அத எடுக்கணும்னா, என்னல்லாம் செய்யணும்னு, என்னோட அட்மின் சொல்லுவாங்க. அதையெல்லாம் செய்யலாம்னு நீங்க ஒத்துக்கிட்டா, நான் எப்பவும் வர ரெடியா இருக்கேன். நான் எவ்வளவு பிசியா இருக்கறவன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா கர்த்தர் என்ன நெருக்குறார், உங்களுக்கு உதவி செய்யணும்னு.”
“ஐய்யா என்ன செய்யணும்னு சொல்லுங்க. நான் செய்யிறேன். நீங்க எங்கிட்ட பேசுனதே உண்மையிலயே ஒரு தேவ தூதன் வந்து பேசின மாதிரி இருந்தது.”
அதற்குள் இன்னொருவரின் கரகரப்பான குரல் தொடர்ந்தது, “ப்ரதர் இந்த லாக்டவுன் காலத்துல பத்திரமா உங்க இடத்துக்கு வரணும், போக்குவரத்து, ரெண்டு மூணு தங்குறது, அவர் ஃபாஸ்ட்டிங் முடிச்சப்புறம் சாப்பாடு செலவு, எல்லாம் சேத்து ஒரு 5 லட்சம் வரும். உங்களுக்காகத் தான் இந்த தள்ளுபடி. பொதுவா அவர் கலந்துக்கிற மீட்டிங்னா, 25 லட்சம் கணக்குல ஏறாம அவர் போஸ்ட்டருக்குக் கூட போஸ் குடுக்க மாட்டார். அது போக காணிக்கை, விளம்பரம், தங்குறது எல்லாமே தனி. இப்போ அவர் உங்களுக்காக ரொம்பவே அக்கறை காட்டுறாரு. அப்படியே உங்க ஊர்ல இருக்கற உங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு கேஸ்களப் பாத்துட்டு, ப்ரதர் ‘ஓரல் ரிச்சர்ட்ஸ்’ஐயும் பாத்துட்டு வர்ற வழியிலே ஒரு பாட்டு ஷூட்டிங்கும் முடிச்சிறலாம்னு ப்ளான் போட்டுருக்காங்க.”
“ஐய்யா இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணத்த அனுப்பிருதோம். உங்க பாங்க் கணக்கு விபரத்த எல்லாம் இதே நம்பருக்கு அனுப்பிருங்க. ரொம்ப நன்றிங்க.”
“என்னம்மா இவ்ளோ பதட்டமா இருக்கீங்க? ஃபோன்ல யாரு? என்ன விஷயம்?” படபடத்தாலும், மகிழ்ச்சியாக இருந்த அம்மாவைப் பார்த்து அலெக்சான்டர் கேட்டார்.
“டேய் ப்ரதர் பென்னி க்ரஹாம் எனக்கு என் நம்பருக்கு ஃபோன் போட்டு பேசுனார்டா? ரெண்டே கால் நிமிஷம் முழுசா எங்கூடப் பேசிருக்காரு”
“ஓ இதுதான் விஷயமா? மைக்கல் ஜாக்சனப் பாத்த வயசுப்புள்ளைங்க மயங்கி உழுற மாதிரி படபடப்பா இருக்கீங்க.”
“டேய் ஆண்டவரோட ஊழியக்காரங்களப் பத்தி குறை சொல்லாத. அது நமக்கு நல்லா இருக்காது.”
“அம்மா நான் உங்களப் பத்தி தான் சொன்னேன். சரி என்ன விஷயமாம்? நன்கொடையா?”
“டேய் அவர்ட்ட இல்லாத பணமாடா? இருந்தும் இருந்தும் அஞ்சு லட்சம் குடுக்கறவங்க கிட்ட அவர் நேரில பேசணும்னு அவசியமே இல்ல. டேய் எனக்கு ஒரு அஞ்சு லட்சம் ரூபா சாயங்காலத்துக்குள்ள அரேஞ்ச் பண்ணிக்குடு. நான் ஒரு மாசத்துல திரும்பத் தந்துடுறேன்.”
“எதுக்கு அஞ்சு லட்சம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“ப்ரதர் நம்ம சான்ட்ராவுக்கு இருக்கற பிசாசின் கட்டுகள எடுக்கப் போறார். நம்ம ஊருக்கு வர்றார்.”
“அம்மா உங்க விசுவாசத்த நான் கொற சொல்லல. ஆனா இது தேவையா? கர்த்தர் எல்லார் ஜெபத்தையும் கேக்கத்தான் செய்யறார். நாம ஜெபம் பண்ணுவோம் அம்மா.”
“அதிகம் பேசாத. நம்மால முடியலல்லா. அதான் வல்லமையான, வரம் பெற்ற ஊழியரக் கூப்புடுறோம். அது கூட நான் கூப்புடல. வெளிப்பாடு கிடைச்சு அவரே என் நம்பருக்கு கூப்புட்டுருக்காரு. இப்பவே அற்புதம் ஆரம்பமாயிருச்சு. கண்டிப்பா சான்ட்ரா முன்னால இருந்ததவிட நல்லா ஆயிருவா.”
“அப்பாக்கிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்கம்மா. நமக்கு 5 லட்சம் சின்ன அமவுன்ட் இல்ல.”
“எங்க அப்பா எனக்குப் போட்ட நகையில ஒண்ண வித்துக் குடுப்பேன். அல்லது என் பங்கு இருக்கற நிலத்த அடமானம் வச்சிக் குடுப்பேன். அவர் கிட்ட இப்போ சொல்ல வேண்டாம். எல்லாம் சரியானதுக்கு அப்புறமா சொல்லுவோம். அவர் கிட்ட இப்ப சொன்னாலும் அவிசுவாசி மாதிரி பேசுவாரு. அப்புறம் விசுவாசம் இல்லாத இடத்துல எப்படி அற்புதம் நடக்கும்?”
“ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுங்கம்மா. நான் மாடில போய் சில விபரங்கள எல்லாம் செக் பண்ணிட்டு சொல்றேன்.”