சான்ட்ரா உறுமினாள். வயதான ஊழியர் அவள் நெற்றியில் பைபிளை வைத்துத் தொட்டு ஜெபம் செய்ய அவள் படுக்கையில் விழுந்து அமைதியானாள். அதே நேரம் பென்னி க்ரஹாம் முகம் சீறியது. ஏதோ கரகரப்பான குரலில் பேசினார். பெரியவரை நோக்கி தாக்குவது போல வேகமாகப் போனார். பெரியவர் சான்ட்ராவுக்கு செய்தது போலவே பென்னி க்ரஹாம் நெற்றியில் பைபிளால் தொட்டார். பென்னி கீழே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தார். ஆனால் சான்ட்ராவைப் போல அமைதியாகத் தூங்கவில்லை. முகம் கோணி, வாயில் நுரை தள்ளி ஏதோ முனகிக் கொண்டே இருந்தார். அவ்வப்போது சிறிது சத்தமாக ஏதாவது உளறிக் கொண்டிருந்தார்.

கேமரா வைத்திருந்தவன் இப்போது தன் கேமராவை பைக்குள் வைத்துத் தரையில் வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். பெரியவரும் கேமராக்காரனும் இப்போது மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

கேமராக்காரன் வெளியே சென்று அங்கே டீ குடித்து முடித்திருந்த மற்ற இருவரிடமும் காதுக்குள் இரகசியமாக ஏதோ முணுமுணுக்க, லீலா அம்மா அருகில் சென்று, செய்தியை அறிய முயற்சித்தார். “சிஸ்டர், உங்க மகளுக்கு சரியாயிரும். ஆனா இங்க என்ன நடந்ததுன்னு ஆர்வத்துல வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு அந்த ரூம்ல இருக்காங்களே ஒரு சிஸ்டர் அவங்க கிட்ட சொல்லிருங்க. முன்னிலமையைக் காட்டிலும் பின்னிலமை நல்லாவே இருக்கணும் புரிஞ்சுதா?” புரியாமலேயே தலையை ஆட்டினார் லீலாம்மா.

சிறிது நேரத்தில் சான்ட்ராவின் அறையில் இருந்து, பென்னி க்ரஹாம் இரு பக்கங்களிலும் இரு உதவியாளர்கள் தோளோடு தோள் கொடுத்து தாங்கலாக அழைத்து வர அவர் நடந்தார் என்பதைவிட அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.

‘ச்சே, நம்ம பிள்ளைக்காக இவ்வளவு பலவீனமாகி, கஷ்ட்டப்படுறாரே. அடுத்த மாசம் ஒரு லட்சம் அனுப்பி வைக்கணும்’ என்று லீலாம்மா மனதுக்குள் பொருத்தனை செய்து கொண்டார்.

‘எப்படா அலெக்ஸ் கிட்ட போய் இதச் சொல்லி, இதுக்கு என்ன விளக்கம்னு கேக்கலாம்’ என்றிருந்தது திவ்யாவுக்கு.

***

“நான் ஒருத்தன் குத்துக்கல் மாரி உக்காந்திருக்கேன். எந்த மரியாதையும் மதிப்பும் எனக்கு இல்ல. பிள்ளை சுகமில்லாம இருக்கு. ஆளாளுக்கு மந்திரவாதி, பேய் ஓட்டுறவன், நாட்டு மருத்துவன்னு வந்து போய்ட்டு இருக்கானுங்க. எல்லாத்தையும் சேத்து குழப்படி பண்ணி என் பிள்ளைக்கு எதாச்சும் ஆச்சுன்னா. நான் நானா இருக்க மாட்டேன் பாத்துக்கோங்க” யாருக்கோ பேசுவது போல அப்பா கத்த, அவர் யாருக்கோ சொல்கிறார் என்பது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள்.

சான்ட்ரா மெதுவாகக் கதவைத் திறந்து நடந்து வந்து சோஃபாவில் உட்கார்ந்தாள். “அம்மா பசிக்குது ஏதாச்சும் தாங்க” அவள் குரலும் முகமும் மிகவும் அமைதியாக இருந்தன.

அம்மாவும் திவ்யாவும் சமையலறையை நோக்கி ஓட, அம்மாவுக்கு ஃபோன் வந்தது.

“லீலாம்மா, நான் ப்ரதர் கூட வந்திருந்தேனே, வயசான ஊழியன். நல்லா கேட்டுக்கோங்க. என்ன செய்வீங்களோ, உங்கப் பொண்ணு தினசரி பைபிள வாசிக்கணும். உங்க கூட சேந்து ஜெபம் பண்ணணும். ஆடியோ பைபிள் இருந்தாக்கூட நாள் பூராவும் ஓட விடுங்க. அப்புறமா உங்க பொண்ணுக்கிட்ட ஏதாச்சு கெட்ட பழக்கம் இருந்துச்சுன்னா, அத அறிக்கை செஞ்சு விட்டுறச் சொல்லுங்க. இனிமே தான் நீங்க கவனமா இருக்கணும். அதிகமா ஜெபத்துல இருக்கணும். சுத்தமாகி ஜோடிக்கப்பட வீட்டுல இருந்து வெளில போன பேய் என்ன செஞ்சுதுன்னு வாசிச்சிருக்கீங்க இல்லியா?”

“ஐயா என் பொண்ணுக்காக நல்லா ஜெபிச்சுக்கோங்க.”

“கண்டிப்பா நாங்க, நான் ஜெபம் பண்ணுவோம். ஆனா நீங்க ஜெபம் பண்ணணும். உங்க பொண்ணும் ஜெபம் பண்ணணும். அது முக்கியம்.”

சான்ட்ரா தனக்கு இது வரை என்ன நடந்ததே என்று தெரியாதது போல அலெக்சான்டரின் பிள்ளைகளுடன் முதல் முறையாக பார்ப்பது போல மாடிக்குப் போய் விளையாடிக் கொண்டிருந்தாள்.

எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

லீலாம்மா சத்தமாகச் சொன்னார், “எல்லாரும் இங்கேயே முழங்கால் போடுங்க. கர்த்தருக்கு நன்றி சொல்லி ஜெபிக்கணும்.” அப்பா கூட மறு பேச்சு பேசாமல் முழங்கால் போட்டு, எப்போது ஆமென் போடலாம் என்று காத்திருந்தார்.

லீலாம்மா, அலெக்சான்டர், திவ்யா மூவரும் ஜெபித்து முடிக்க முப்பத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. “அப்பா நீங்க?” என்று அலெக்சான்டர் கேட்கும் போது அப்பா, நின்று கொண்டிருந்தார். குனிந்த முழங்காலைத் தடவி விட்டுவிட்டு வராந்தாவிலிருந்த ஈஸி சேரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். லீலாம்மா சில ஸ்தோத்திரப் பாடல்களைக் கண்ணீருடன் பாடிக் கொண்டே சமையலறை பக்கமாகப் போனார்கள்.

“எனக்கு நெறைய சந்தேகம் இருக்கு” திவ்யா கேட்டாள்.

“வா மேல ரூமுக்குப் போகலாம்” திவ்யாவின் தோளில் தன் கையைப் போட்டபடியே அவளை நடத்திச் சென்றான் அலெக்சான்டர்.

அங்கே, பாதி திறந்து கிடந்த சான்ட்ராவின் அறையைப் பார்த்த திவ்யா, “ஒரு நிமிஷம்” என்றபடியே அலெக்சின் அணைப்பிலிருந்து விலகி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *