“ப்ரதர் பைபிள விட்டுட்டுப் போயிட்டாரு.”

“இப்படிக் குடு. ஏதாச்சும் ஆவிக்குரிய பாடம் படிச்சுக்கலாமான்னு பாக்கலாம்.”

“அடுத்தவங்களோட விஷயங்களப் படிக்கறது நல்ல மேனர்ஸ் இல்லியே?”

“அடுத்தவங்க பைபிளப் படிக்கலாம். அதுவும் ஃபேமசானவங்களோடத வாசிக்கறது தப்பே இல்ல. இதுல அவங்க குறிச்சிருக்கறது தான் அப்புறமா பிரசங்கமா வரும், அல்லது புத்தகமா வரும். அம்மா 5 லட்சம் குடுத்திருக்காங்க. ப்ரீமியம் ஊழியம். நமக்கு பாக்கறதுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு.”

ஆன்லைன் வகுப்புகள் போக தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் சான்ட்ரா தன் அண்ணன் பிள்ளைகளுடன் அதிக ஈடுபாட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திவ்யாவுக்கு அவளைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்றே தெரியவில்லை. தன்னிடம் சத்தியம் செய்து தரும்படி கேட்டபோது, அவள் தன்னைப் பற்றி சொன்னவைகள் தான் நினைவில் வந்து போயின. அவள் சுகமானது போல ஏமாற்றுகிறாளா? இதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாளோ? அலெக்சிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவளுக்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டிருந்தது. சொன்னால் இன்னும் கடுமையாக நடந்து கொண்டு அவளை இன்னும் டார்ச்சர் செய்வது போல இருக்குமோ? எச்சரிக்கையாக இல்லாமல் இன்னும் மோசமானவைகள் ஏதாவது நடந்தால்? பொறுப்பு தன் மேல் இருப்பதாக நினைத்தாள்.

ஒரு வாரம் நன்றாக ஜெபிக்க வேண்டும். அதன் பின் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவாரே வாஷிங் மெஷினில் இருந்து துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பின் இருந்த கொடிகளில் காயப்போடச் சென்றாள்.

ப்ரதர் பென்னி க்ரஹாமின் பைபிளை அலெக்சான்டர் உருட்டிப் புரட்டி, அதற்குள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்த குறிப்புகளையும், துண்டுத் தாள்களையும், போஸ்ட் இட் நோட்களையும் வாசித்துக் கொண்டிருந்தான். அலைபேசி அலறியது, அப்பாவிடம் இருந்து அழைப்பு.

“அலெக்ஸ், நாம ஊருக்குப் போகணும். சித்தப்பாக் கிட்ட பஞ்சாயத்து இருக்கு. பெருமாள் பக்கத்துல தான ஏதோ ஒரு ஊர்ல இருக்காராம். உனக்குத் தெரிஞ்சவர் தானே, அவர்ட்ட ஃபோன் போட்டு அவர நாமப் போய் பாக்க முடியுமான்னு கேக்கணும். முடிஞ்சா அவரையும் அங்க கூட்டிட்டுப் போகணும்.”

“அப்பா நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன். குறுக்குவழி, இல்லீகல் விஷயங்கள் ஏதாச்சும்னா அவரு மூஞ்சில அடிச மாரி பேசிருவாரு. அப்புறம் வருத்தப்படக் கூடாது.”

“டேய், என்னடா பேசுற? நான் என்ன குறுக்குவழியில, கடத்தல் தொழில் பண்ணி தானே உங்கள எல்லாம் வளத்திருக்கேன். அளவே தெரியாத மாரி சொத்து சேத்து வச்சிருக்கேன். எல்லாம் என் தலை எழுத்து, சின்னதுங்க எல்லாம் இப்படி வாய்ல வந்த மாரி பேசுதுங்க.”

“அப்பா, நான் என்ன சொல்ல வந்தேன்னா. நேர் வழிலன்னா நாமளே எதையும் செய்துக்கலாம். எதுக்கு பெரிய ஆட்கள் சிபாரிசு எல்லாம்? அவரக் கூப்புடணும்னு சொன்னதுனாலத் தான் ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் எதுக்காவது ஹெல்ப் கேக்கிறீங்களோன்னு நினைச்சேன். மன்னிச்சுக்கோங்கப்பா.”

“இது ஒரு சிக்கலான விஷயம், அத விவரமா செய்யலன்னா, நிறைய பேரப் பகைச்சுக்க வேண்டியிருக்கும். நாம் சமாதானமாப் போகணும்னு நினைச்சேன். அவரு வந்தார்னா சுலபமா, சுருக்கா வேல முடிஞ்சிரும்.”

“சரிப்பா. நான் அவர்ட்ட ஃபோன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்.”

“என்னங்க பைபிள் படிச்சு என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க.”

“நிறைய. ப்ரதரோட சைக்காலஜி, ஹிஸ்ட்ரி, டெக்னிக், தியாலஜி, ஜியாக்ரஃபி, சையன்ஸ் எல்லாமே ஓரளவுக்கு இதுல இருந்து கத்துக்கிட்டேன். நான் எனக்குன்னு சில பாடங்களும் கத்துக்கிட்டேன். அப்புறமா நிதானமா உனக்கு சொல்றேன்.”

“எனக்குத் தலையே வெடிச்சிரும் போல இருக்கே. இப்படி சஸ்பென்ஸ் வச்சு சொல்றீங்க?”

“சஸ்பென்ஸ்னாலேயே இன்ட்ரஸ்ட்ட தூண்டறதுக்குத் தானே? க்ளைமாக்ஸ் எப்பவுமே லேட்டாத் தான் வரும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *