“கிறிஸ்தவம் ஒரிஜினலா முதல் நூற்றாண்டுலயே நம்ம நாட்டுக்கு வந்தாலும், அது பல காரணங்களால மங்கி, மறைஞ்சு போயிருந்தது. மேல்நாட்டுக்காரங்க நமக்குக் கொண்டு வந்த கிறிஸ்தவத்துல மேல் நாட்டு கலாச்சாரம் நல்லாவே கலந்து இருந்தது. அந்த மிஷனரிகள் தங்களுக்குத் தெரிஞ்சத, தங்களுக்குத் தெரிஞ்ச முறையில நம்ம நாட்டு மக்களுக்கு சொன்னாங்க. நம்ம நாட்டு மக்கள்லயும் வேற வேற கலாச்சாரத்துல கதம்பமா இருந்த சூழ்நிலையில இதுவும் சேந்துக்க, எல்லாமே குழப்பமாயிருச்சு. வெளிநாட்டுக்காரங்களப் பொருத்தவரைக்கும் பேய் பிசாசு எல்லாம் கிடையாது. பேய் விரட்டுற ஊழியமும் பொய். ஆனா நம்ம நாட்டுல சின்ன வயசுல, ஆசைகள் நிறைவேறாம இறந்து போனவங்க, தற்கொலை, கொலை, பிரசவ காலத்துல மரணம் இப்படின்னும் எதிர்பாராம சாகறவங்க எல்லாமே ஆவியா இந்த உலகத்துல சுத்துவாங்க. அவங்க மத்தவங்க உடம்புக்குள்ள புகுந்துக்குவாங்க அப்படின்னு ஒரு நம்பிக்கை இருக்குது. அது மட்டுமில்ல, இப்படிப்பட்ட ஆவிகளுக்கு பூசை, பரிகாரம் செஞ்சா சரியாயிரும் அப்படின்னும் ஒரு நம்பிகை இருக்குது. குட்டிப் பிசாசுகள வச்சு செய்வினை செய்யறது இன்னொரு பக்கம். இந்த செய்வினைய எடுக்கறதுக்கு சில சிறப்பான மந்திரவாதிகள் இருக்கற மாதிரி ஊழியக்காரங்களும் இருக்கிறாங்க.”
“அப்போ பிசாசு விரட்டுற ஊழியக்காரங்க எல்லாம் போலின்னு சொல்றீங்களா?”
“எல்லாரும் அசல்னு சொல்ல மாட்டேன்.”
“அப்படின்னா?”
“கர்த்தரோட ஆவியானவர் சில வரங்கள நமக்காகக் குடுத்திருக்காரு. என்னோட நம்பிக்கைப்படி சாதாரண விசுவாசிகள் ஜெபம் செஞ்சாக் கூட பிசாசு ஓடும், ஓடணும். வட இந்தியாவுல சாதாரணமா விசுவாசிகள் பிசாசுகள விரட்டுறது நடக்குது. சில ஊழியர்கள இதுக்காகவே கர்த்தர் வைச்சிருக்கிறார்னு நான் நம்புறேன். அவங்க விளம்பரம், காணிக்கைன்னு பறக்க மாட்டாங்க. அப்புறமா இந்த ஆவியானவருடைய வரம் எல்லாம் சில பேருக்கு சில சூழ்நிலைக்காகக் குடுக்கப்படுது, அவங்க அத வற்புறுத்தி பயன்படுத்தும் போது இப்படி ஊழியம் வியாபாரமாப் போகுது. அப்புறமா இயேசுவோட பேரச் சொல்லிட்டு அசுத்த ஆவிய வச்சு அசுத்த ஆவிய விரட்டுன ஊழியர்கள் கதையும் இருக்கு.”
“அது சரி, பிசாசு உண்மையிலேயே செத்துப் போனவங்களோட ஆவி தானா? அல்லது சாத்தானோட தூதர்களா?”
“இதுல தான் எனக்கு சந்தேகம் இருக்கு. சாத்தான் எப்பவுமே பொய்க்குப் பிதா. அவன் சொல்றத எல்லாம் நாம நம்பக்கூடாது. செத்துப் போனவங்க குரல்ல அவனே பேசி, இவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச இரகசியத்த சொல்லிட்டா நாம நம்பிருவோம் இல்லியா? செத்தவங்க எல்லாருமே நம்மள மாதிரி மனுஷங்க தான். அதோட மனுஷனோட ஆவி, படைச்சவர் கிட்டத் தான் போகும்னு பைபிள் சொல்லுது. ஆத்துமா தான் நியாயத்தீர்ப்புக்கு அப்புறமா, பரலோகத்துக்கோ பாதாளத்துக்கோ போவுது.”
“சரி, அப்படின்னா சாத்தானோட தூதர்கள் தான் இப்படி ஆவி வேலைல்லாம் காட்டுறாங்களா? அப்படின்னா நம்ம நாட்டுல மக்கல் சாமின்னு சொல்றது, தெய்வங்கள்லாம் என்ன?”
“அப்படித்தான் இருக்கணும். நம்மளோட முன்னோர்கள் எல்லாரும் செத்தவங்கள, வீரர்கள, தியாகிகள, ராஜாக்கள சாமியா வணங்கற பழக்கம் உள்ளவங்க. அப்படித்தான் பல தெய்வங்கள் நம்ம நாட்டுல இருக்குது. இவங்களோட பேருல கூட நம்ம வில்லன் வந்து மக்களக் குழப்பிட்டு இருக்கிறான். என்னோட நண்பர் ஒரு ஊழியக்காரர் சொன்ன கதை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது. ஒரு ஆதிவாசி கிராமத்துல பேய் விரட்டுற ஒருத்தர், குட்டிப் பிசாசுகள வச்சு பிழைச்சுட்டு இருந்தவர் சொன்ன கதை இது. அவரு வெளில நடந்து போய்ட்டு இருக்கறப்போ ஒரு குட்டிப் பிசாசு சின்ன பிள்ளை ஒன்னு ஆய் பண்ணிட்டு இருந்தப்போ, அத எடுத்து சாப்பிட்டுதாம். அதப் பாத்த இந்த நபர், நீ செஞ்சதச் சொல்லிருவேன்னு சொல்லி மிரட்டியே அந்த குட்டிப் பிசாச வேல வாங்கிட்டு இருந்தாராம்.”
“நீங்க இத நம்புறீங்களா?”
“இதச் சொன்ன ஊழியக்காரர நான் நம்புறேன். இன்னொரு முக்கியமான விஷயம், பயப்படுறவங்க, பலவீனமானவங்களத் தான் பிசாசு அட்டாக் பண்ணும். ஒரு வகையில மனநிலையில பலவீனமானவங்க, பேய் பிசாசுகள அதிகமா நம்புறவங்க தான் பாதிக்கப்படுவாங்கன்னு சொல்லலாம். தேவையில்லாம இந்த மாதிரி விஷயங்களுக்குள்ள தலைய விட்டுட்டு கஷ்ட்டப்படுறவங்களும் இருக்கிறாங்க.”
“எனக்குத் தெரிஞ்ச சிலர் கண்களுக்கு மட்டும் தெரிஞ்ச சில ஆவிகளப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இதுவரைக்கும் கண்ணுல எந்த ஆவியும் பட்டதில்ல. ஆனா அதுங்க செஞ்ச சில குறும்புகள நான் பாத்திருக்கேன். அனுபவிச்சிருக்கேன்.”
“சொல்லவே இல்ல? ப்ளீஸ் சொல்லுங்க.”