ப்ரதர் பென்னி க்ரஹாமின் உதவியாளர் என்று ஒருவர் வந்து அவர் விட்டுச் சென்ற பைபிளை வாங்கிப் போனார். “ப்ரதர் எப்படி இருக்காங்க?” கேட்டாள் திவ்யா.
“நல்லா இருக்காங்க. அடுத்த ஊழியம், ஷீட்டிங் எல்லாம் புக் ஆயிருச்சு. அதனாலத் தான் பைபிளத் தேடினோம். அம்மாவுக்கு ஃபோன் பண்ணினோம். இங்கதான் இருக்குதுன்னு சொன்னாங்க.”
“சரிங்க போய்ட்டு வாங்க.”
“என்னங்க நம்ம ப்ரதர் பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு மறந்துட்டீங்களே?”
“பெரிசா ஒண்ணும் இல்ல. அவருக்கு சொந்த சரக்கு இருக்கற மாதிரி இல்ல. ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி தான் அவர் தன்னோட ஊழியத்த நடத்திட்டு வர்றார்னு அவரோட வெப் சைட்ட பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த வயசான மனுஷர் தான் இவரோட சோர்ஸ், பவர், பேக் அப், கைட் எல்லாமே.”
“எப்டி கண்டுபிடிச்சீங்க?”
“சின்னச் சின்ன நோட்ஸ் – புல்லட் பாய்ன்ட்-ஆ. பிரசங்கம், பைபிள் ஸ்டடி, செமினார், ஒர்க்ஷாப்னு இவர் நடத்துற எல்லாத்துக்கும், வேதவசனம், விளக்கம் எல்லாம் அந்தப் பெரியவர் கையெழுத்துல இருக்கு. நம்ம ஆளு இன்டர்நெட்ல இருந்து எடுத்த சில கதைகள், பழைய கால ஊழியர்களோட வாழ்க்கைல நடந்த நிகழ்ச்சிகள எல்லாம் சேத்து, இந்தக் காலத்து இளசுங்களுக்கு ஏத்த மாதிரி ப்ரசன்ட் பண்றாரு. இந்தக் காலத்துப் பசங்க யூஸ் பண்ற ஸ்லாங் எல்லாம் இவருக்கு அத்துப்படியா இருக்கு. அப்புறமா இந்தத் தலைமுறைக்கு என்ன பிடிக்கும், எப்படி கவர் பண்ணலாம்னு அவர் தெரிஞ்சு வச்சிருக்கார். பழசும் புதுசும் கலந்த ஒரு கதம்பம் மாதிரி, இல்ல மிக்ஸ் மாதிரி இருக்குது. அவரு பைபிள்ல இருந்த பெரியவரோட நோட்ஸ், ப்ரதரோட நோட்ஸ், யூ ட்யூப்ல அவர் குடுத்துருக்கற மெசேஜ் எல்லாம் பாத்து ரிசர்ச் பண்ணி தான் இத எல்லாம் கண்டு பிடிச்சிருக்கேன்.”
“அப்போ, பேய் விரட்டுறது, நோய் விரட்டுறதுல்லாம்?”
“அதுவும் சில டெக்னிக்ஸ் தான். அப்புறமா அந்த வயசானவர் தான் இதுலயும் பேக்ரவுன்ட்ல இருக்கார். அவருக்கு உண்மையிலேயே வரம் இருக்குது. அவரப் பாத்தா, அவரோட நோட்ஸப் பாத்தா, அவரு கர்த்தரோட ஊழியத்த நல்லா செய்யறவரு. பைபிள நல்லாப் புரிஞ்சு, சரியா அர்த்தம் சொல்றவர் மாதிரி தான் இருக்குது. ப்ரதர் தான் கொஞ்சம் ஒரே பக்கமா சாய்ஞ்சு அவரோட மெசேஜ் எல்லாம் குடுக்கிறாரு.”
“அந்தப்பெரியவரே சொந்தமா ஊழியம் செய்யலாமே? ஏன் இப்படி டுபாக்கூர் கூட சேர்ந்திருக்காரு?”
“எனக்குத் தெரிஞ்சு, இவரு ப்ரதரோட ஊழியம் ஸ்டார்ட் ஆனதுல இருந்து கூட இருக்கற மாதிரி தான் தெரியுது. ப்ரதரோட அப்பா ஒரு பாஸ்ட்டர். அந்த பாஸ்டர் கூட இருந்தவர் தான் பெரியவர். அவர் பேரு கூட பாஸ்டர் பவுல்ராஜ். பெரிய பாஸ்டர் மேல உள்ள விசுவாசமா இருக்கலாம். அல்லது இவருக்கு அவங்க ஆரம்ப காலத்துல உதவிகள் செய்திருக்கலாம். அல்லது பெரியவர் உண்மையிலேயே இந்த கார்ப்பரேட் ஊழியங்கள் எல்லாம் உண்மையா நடக்குதுன்னு நினைச்சிருக்கலாம்.”
“நான் கண்ணால பாத்தேனே, ப்ரதர் பேய் பிடிச்ச மாதிரி அலக்கழிஞ்சுட்டு இருந்தார். பெரியவர் தான் பேய் ஓட்டுனாரு.”
“நாம நெருக்கிக் கேட்டோம்னா, உங்க பொண்ணுக்குள்ள இருந்த பிசாசு தான் ப்ரதரத் தாக்கிருச்சு. ஊழியத்துல இதுல்லாம் சகஜம்னு, அவரத் தியாகியாக்கிருவாங்க. சிறை சென்று வந்த அரசியல்வாதிகள் மாதிரி.”
“நான் சந்தேகத்த தெளிவாக்கறதுக்குத் தான் கேக்குறேன். நீங்க எப்படி இவங்கள எல்லாம் ஃப்ராடுன்னு சொல்றீங்க? அவங்களும் இயேசுவோட பேரச் சொல்லி, பைபிள வச்சு தானே ஊழியம் பண்றாங்க?”
“நல்லா பைபிள வாசிச்சுப் பாத்தா, கள்ளத் தீர்க்கதரிசிகளும், அந்திக் கிறிஸ்துக்களும் வருவாங்கன்னு கர்த்தர் சொல்லிருக்காரு. அவர்கள் கனிகளால் அவர்களை அறிவீர்கள்னு சொல்லிருக்காரு. வரங்கள்னால அல்ல. ஏன்னா வரங்கள் மக்களுக்கு நல்லது நடக்கறதுக்காக கர்த்தர் ஊழியர்களுக்கு குடுக்கற பரிசு. அத வச்சுக்கிட்டு அவங்க பிசினஸ் பண்ணுனாலும், நல்லது நடக்குதேன்னு ஆண்டவர் விட்டுருவார்னு நினைக்கிறேன். அதே மாதிரி கர்த்தர் தான் குடுத்த பரிச அவ்வளவு சீக்கிரமா திரும்பப் புடுங்க மாட்டார்.”
“சரி இவங்கள ஏன் கர்த்தர் தண்டிக்க மாட்டேங்கறார்?”
“தண்டிக்கலன்னு யார் சொன்னா? அவங்களோட புகழ், வசதி, பெருமை எல்லாமே அவங்களுக்கு கிடைக்கிற தண்டனை தான். ஒரு தடவ ஜெயிச்சா, அத தக்க வைக்கறதுக்காக அவங்க படுற பாடு, ஆட்டம், பாட்டம் எல்லாமே அவங்கள கர்த்தரோட உள்ள உறவுல இருந்து விலக வைக்கும். அவங்க மனசு எல்லாமே மத்தவங்களோட தன்ன ஒப்பிட்டு பாக்க வைக்கும். பலரோட எதிர்ப்புகள சமாளிக்கறதுக்காக, தங்களோட புகழ், ஊழியத்த வெற்றிகரமாவே காட்டறதுக்கு பண்ற வேலைகள் எல்லாமே அவங்க அனுபவிக்கற தண்டனைகள் தான்னு சொல்லுவேன். அவங்களால சாதாரண மக்களோட பழக முடியாது / மாட்டாங்க. எப்பவுமே மேக்கப், முகமூடின்னு தான் அலையணும். பெரிய கார், சூழ்ந்து இருக்க ஒரு கூட்டம், ஆஃபீஸ், ஸ்டுடியோ அப்படின்னு செலவுகள். அந்த செலவுகள சமாளிக்க ஊழியங்கள். இப்படியே போய்ட்டு இருக்கும்.”
“அப்போ அவங்க பாவம் தான்னு சொல்லுங்க.”
“எங்க அம்மா மாதிரி பல ரசிகர்கள் இருக்கறதுனால, ஹீரோவுக்கு ஏத்த ஸ்டோரி மாதிரி அவங்கள ப்ரொமோட் பண்றதுக்கு, பிரசங்கம் ரெடி பண்ணிக் குடுக்கறதுக்கு, மீடியாவுல அவங்க வீடியோக்கள கலர் கரெக்ட் பண்ணி குடுக்கறதுக்கு, போஸ்டர்கள் போட்டு விளம்பரம் பண்றதுக்குன்னு பெரிய டீமே இருக்கும். நல்லா பாத்தா, வயசான ஹீரோக்கள் டூயட், ஸ்டன்ட் எல்லாம் பண்ற மாதிரி ஆர்ட்டிஃபிஷியலா இருக்கும் இவங்க பண்ற ஊழியங்கள்.”
“இப்படிப்பட்டவங்க நாலஞ்சு பேர கர்த்தர் போட்டார்னா, மத்தவங்க திருந்துவாங்க இல்லியா?”
“களைகளப் பிடுங்கும் போது, நல்ல பயிரும் சேதமாயிரக்கூடாதுன்னு இயேசு சொன்ன மாதிரி, கடைசி வரைக்கும் இவங்களயும் ஆண்டவர் வளர விடத்தான் செய்வார். ஒண்ணு தெரியுமா? இவங்க இருக்கறதுனால தான் விசுவாசிகள் உண்மையிலேயே கர்த்தர விசுவாசிக்கிறாங்களா, இல்லியாங்கற பரீட்சை நடக்குது. இவங்கல்லாம் கர்த்தர் அனுமதிக்கிற சோதனைகள்னு தான் நான் சொல்லுவேன். பைபிள ஒழுங்கா வாசிச்சு, கர்த்தரோட தினமும் உறவுல இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி ஹீரோக்கள் தேவையே இல்ல. அவங்க பக்கம் இவங்க திரும்பவும் மாட்டாங்க.”
“மக்கள் ஏன் அவங்க பின்னால போறாங்க?”
“சோம்பல். தானாவே பைபிள் வாசிக்கறது, அதன்படி நடக்கறது, கஷ்ட்டப்பட்டு கான்சன்ட்ரேட் பண்ணி ஜெபம் பண்றது. பதில் வராத ஜெபங்களுக்கு காரணம் என்ன? பொறுமைன்னா என்ன அப்படிங்கறத தெரிஞ்சுக்காம, ஈஸியா அவுட் சோர்ஸ் பண்ணுன மாதிரி ஆன்மீகத்த தேடுறாங்க மக்கள். அப்புறமா வயல்ல வேல பாத்து கஷ்ட்டப்பட்டு, அழுக்காகி, களைப்பாகி சாப்புடறது ஈஸியா, நேரா ஹோட்டல்ல போய் சாப்படறது ஈஸியா?”
“ஈஸி மட்டும் இல்ல, ருசியாவும் கவர்ச்சியாவும் இருக்குது.”
“அன்றன்றுள்ள அப்பத்த விட, ஜங்க் ஃபூட் தான் மக்களுக்குப் பிடிச்சிருக்கு. மக்களோட விருப்பத்த நிறைவேத்த தான் பெரும்பாலான ஊழியக்காரங்க இருக்காங்க. இதுல நிறைய இளைய ஊழியக்காரங்களுக்கு மாடலே இந்த மாதிரி ஹீரோக்கள், செலிபிரிட்டிகளா இருக்கற ஊழியர்கள் தான். அதனால அவங்களும் முந்தா நேத்து ரட்சிக்கப்பட்டேன், நேத்து கொஞ்சம் பைபிள் படிச்சேன், நாளைக்கு என்னோட யூட்யூப் சேனல் ரெடியாயிரும். நானும் ஊழியன் தான் அப்படின்னு ஆரம்பிச்சுடுறாங்க.”