“அண்ணி, செஞ்ச ப்ராமிஸ்க்கு உண்மையா இருக்கறது தப்பா?”

“செஞ்ச ப்ராமிஸ் சரியானது தானாங்கறதப் பொறுத்தது அது.”

“அவரவருக்கு அவரவர் செய்யறது சரின்னு இருக்கும்.”

“சரியானது, தப்பானது ரெண்டு பக்கத்தையும் கொஞ்சக் காலமாவது அனுபவிச்சுப் பாக்காம, சரின்னு எப்படி சொல்ல முடியும் சான்ட்ரா?”

“இனிப்பு நல்லாருக்கு. அது சரியானது தானே?”

“சில பேருக்கு இனிப்பே விஷம் மாதிரி தான் தெரியுமா?”

“அது வயசான சக்கர வியாதி இருக்கறவங்களுக்கு.”

“இப்பல்லாம் சின்ன வயசுலயே ஷுகர் ப்ராப்ளம் இருக்கற பிள்ளைங்க இருக்காங்க தெரியுமா?”

“அண்ணி, ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் ஒரு உண்மையான கடவுளோட பிள்ளை அதுல உறுதியா இருக்கணும்னு சங்கீதத்துல ஒரு வசனம் வரும் இல்ல? நான் அத அன்டர்லைன் கூட பண்ணி வச்சிருக்கேன்.”

“மனுஷங்களுக்கு குடுத்த ப்ராமிஸ், கடவுளுக்கு குடுக்கற ப்ராமிஸ்ஸ விட பெரிசா இருக்க முடியாது இல்லியா?”

“கரெக்ட்.”

“எது சரி, எது தப்புன்னு கர்த்தர் ஆதாம் ஏவாளுக்கு சொல்லிக் குடுத்திருந்தார். ஆனா அவங்க சரி, தப்பு ரெண்டையும் தாங்களே கண்டுபிடிக்கணும், கடவுளா மாறணும்னு நினைச்சாங்க. அதனால தான் உலகம் இன்னும் பிரச்சனையில இருக்கு.”

“அண்ணி எனக்கு நேராவே சொல்லுங்க. நான் இப்ப என்ன செய்யணும்? நாம் செய்யற பைபிள் ஸ்டடி எனக்குப் புரியுது, பிடிச்சிருக்கு. நானும் உங்கள மாதிரி மாறணும்னு உண்மையிலேயே ஆசை இருக்கு.”

“சிம்பிளா ஸ்பிரிச்சுவல் லைஃப் பத்தி உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன். உன்னோட வாழ்க்கையில, உனக்கு இருக்கற நாலு மாநிலங்களும் சேந்து ஒரு நாடுன்னு வச்சிக்கோ. அதுல ஆட்சி செய்யறது நீயே தான். அல்லது உனக்கு இஷ்ட்டமான யாராவது, ஏதாவது இருக்கலாம். நம்ம கடவுள் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா அப்படின்னு நாம வேதத்துல படிக்கிறோம். அத நம்புனா, நம்ம வாழ்க்கையில அவர் ராஜாவா, அவர் ஆட்சி செய்யறவரா, சட்டம் போடுறவரா இருக்கணும். உடல், சிந்தனை, உறவுகள், ஆன்மா இந்த நாலு பகுதிகள்லயும் அவர் தான் உனக்கு கர்த்தரா இருக்கணும். ஆண்டவர் அப்படிங்கறதுக்கு ஆட்சி செய்யறவர்னு அர்த்தம். அவரோட விருப்பம் தான் உன்னோட விருப்பமா இருக்கணும். அவர் நம்மளோட பரம தகப்பனா இருக்கறதனால, அவர் தான் எல்லாம்னு நாம சரண்டர் ஆனதுக்கு அப்புறம் அவர் நம்மள அடிமையா நடத்த மாட்டார். நமக்கு நல்லதுக்குத் தான் எல்லாம் செய்வார். நம்மளக் கட்டுப்படுத்துவார். அந்த அளவுக்கு அவர நம்ம வாழ்க்கையில ஆட்சி செய்ய அனுமதிக்கும் போது நமக்கு எல்லாமே நிறையக் கிடைக்கும்.”

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் கூடக் கொடுக்கப்படும்னு பைபிள்ல போட்டுறுக்கே அது இது தானா?”

“ஆமா. சான்ட்ரா, நீ எப்போவாவது கர்த்தருக்கு இந்த மாதிரி உன் வாழ்க்கைய சரண்டர் பண்ணிருக்கியா?”

“நாங்க கிறிஸ்டியனா தான இருக்கோம், பிறந்ததுல இருந்து? இயேசு தானே நமக்கு எல்லாம் ராஜா?”

“மொத்தத்துல கிறிஸ்டியன்னு சொல்றது கூட்டத்துல கோவிந்தா போடற மாதிரி. நீ தனிப்பட்ட முறையில இத செஞ்சிருக்கியா? உன்னோட வாழ்க்கையில எல்லா பகுதியிலயும் அவர் ராஜான்னு சொல்ல முடியுமா? உன்னோட ராஜ்யத்து சிங்காசனத்துல அவர உக்கார வைக்க நீ ரெடியா? அப்படின்னா இந்த குட்டி புத்தகத்த வாசிச்சுப் பாத்துட்டு அதுல இருக்கற ஜெபத்த நீயே செய். அப்புறமா நான் உனக்கு விளக்கமா சொல்லித் தர்றேன். ஹெல்ப் பண்றேன்.”

“சரி அண்ணி” என்றபடியே திவ்யா கொடுத்த அந்த சிறு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றாள் சான்ட்ரா.

***

அனைவரின் எதிர்ப்பையும் மீறி சான்ட்ராவுக்கு ஒரு மொபைல் ஃபோனை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார் அலெக்ஸ்.

“திருடன் பெருசா, போலீஸ் பெருசா? நாம சின்னவங்கள நம்பணும். அவ இப்ப ஸ்பிரிச்சுவல் லைஃப்ல நல்லா வளந்துட்டு வர்ற மாதிரி இருக்குது. என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.”

“சான்ட்ரா நீ இனியும் சின்னப்பிள்ள இல்ல. பொறுப்பா நடந்துக்குவன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ப்ராமிஸ் மட்டும் நீ செய்யணும். இந்த ஃபோன்ல இருந்து சக்திக்கு கால் பண்ணி பேசவோ, மெசேஜ் பண்ணவோ கூடாது.”

சான்ட்ரா, “ப்ராமிஸ்” என்று சொல்லியபடியே அண்ணன் கையைத் தொட்டு, அந்த ஃபோனை வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

“எட்டு மணி நேரமாவது சார்ஜ் போடணும்.”

“சரிண்ணா. தேங்க் யூ சோ மச்.”

அந்த கிஃப் பேக்குக்குள் சிம் கார்ட் போடப்பட்ட அந்த ஸ்மார்ட் ஃபோன் இருந்தது.

ஸ்மார்ட் ஃபோன் சார்ஜ் ஆகும் போது சான்ட்ராவின் மனமும் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது.

கால் பண்ணி பேசக்கூடாது, மெசேஜ் போடக் கூடாது.

மிஸ்ட் கால் பண்ணலாம்.

கால் வந்தா அட்டண்ட் பண்ணலாம்.

தன் மனதில் பதிந்திருந்த சக்தியின் ஃபோன் நம்பரை நினைத்துப் பார்த்துக் கொண்டாள்.

படுப்பதற்கு முன், அந்த மிஸ்ட் காலையும் கொடுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *