சான்ட்ரா தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த வாக்கை மீற விரும்பவில்லை. ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தாள். ஒது தான் ஒரே ஒரு ரிங் போவது போல மிஸ்ட் கால் கொடுப்பது. அவள் கொஞ்ச நேரம் காத்திருந்தால் அந்த எண்ணுக்கு இன்கமிங் கால் வசதி இல்லை என்ற அறிவிப்பைக் கேட்டிருப்பாள். முந்தின நாள் நடு இரவில் ஹாப்பி பர்த் டே என்று ஒரு அழகான ரோஜாப்பூ படத்துடன் வாட்ஸப்பில் வாழ்த்து அனுப்பியிருந்தான். இன்கமிங் கால்கள் நிறுத்தப்பட்டன என்று ஒரு எஸ் எம் எஸ் வந்திருந்தது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டிருந்தான். மறந்தே போய்விட்டான். இரவில் தான் கவனித்தான். “சான்ட்ரா கூப்பிட்டிருப்பாளோ? அண்ணன் குடும்பம் எல்லாம் வந்திருப்பதால் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம்” தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

இன்னும் ஒரே வருடம் தான் சான்ட்ராவுக்கு 18 வயதாக. 365 நாட்கள். வேகமாக ஓடிவிடும். லாக் டவுன் இன்னும் இழுக்கும், அவளுக்கும் ப்ளஸ் டூவுக்கு ஆன்லைன் க்ளாஸ் என்று பிசியாக இருப்பாள். 365 நாட்கள், 52 வாரங்கள், 12 மாதங்கள், ஒரே வருடம்.
***

அவர்கள் குடும்ப வாட்சப் க்ரூப்பில் செல்லராஜ் அண்ணனும், அலெக்சான்டரும் அவ்வப்போது மெசேஜ்களும், லிங்க்-களும், வசனங்களும், பெரிய ஆன்மீகவாதிகளின் கூற்றுகளையும் பதிவிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆன்ட்ரூவுக்கே
ஆச்சரியமாக இருந்தது. அவன் இப்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டிக் கொண்டிருந்தான். சான்ட்ராவை முன்பு போல வெறித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போது மனதுருகி, கண்ணீர் வடித்து ஜெபம் செய்து கொள்வான். ஆண்டவரே சான்ட்ராவை எனக்குத் தாரும். உங்கள் சித்தப்படியே நடக்கட்டும். ஆனாலும் என் ஆசையை நிறைவேற்றும். சில நேரம் தன் ஜெபங்களை நினைத்து சிரித்துக் கொள்வான்.

இன்று அவன் வாட்சப்பைத் திறந்து பார்த்த போது, குடும்ப க்ரூப்பில் சான்ட்ரா என்ற பெயரும் இணைக்கப்பட்டிருந்தது. டி பி படத்தை பெரிதாக்கி பார்த்துக் கொண்டே இருந்தான். “ஹேய் தேர், ஐம் யூசிங் வாட்ஸப்” என்று அவனைப் பார்த்தே அவள் சொன்னது போல இருந்தது.

“ஐம் ஹாப்பி டு பி இன் திஸ் க்ரூப்” என்று போஸ்ட் செய்திருந்தாள் சான்ட்ரா. ஒரு பூனை கார்ட்டூன் கண்ணடித்துக் கொண்டு, நாவால் முன்காலை நக்கிக் கொண்டிருந்தது.

“வெல்கம் சான்ட்ரா” என்று பலர் போஸ்ட் செய்திருந்தார்கள்.

எல்லோருக்கும் “தாங்க் யூ” என்று பதில் கொடுத்திருந்தாள்.

‘ரிப்ளை ப்ரைவேட்லி’யா? வெல்கம்-ஆ?’ என்ன போஸ்ட் செய்யலாம் என்று குழம்பியிருந்தான்.

பல மணி நேர சிந்தனைக்குப் பின் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லது என்று முடிவு செய்திருந்தான்.

***

“ஏன் சக்தி ரெஸ்பான்ட் பண்ணல?” என்ற நினைவு சான்ட்ராவுக்கு சட்டென்று வந்து போனது. அவளுக்குத் தெரிந்த, அண்ணன் அனுமதித்திருந்த சில நண்பிகளின் எண்களை மட்டும் தன் ஸ்மார்ட் ஃபோனில் பதிவு செய்திருந்தாள். அந்த ஃபோனை நோண்டிப் பார்ப்பதிலே அவளுக்கு ஓய்வு நேரம் எல்லாம் செலவானது. ஆன்லைன் பாடங்களும், அண்ணன் பிள்ளைகளுடன் விளையாட்டுமாக அவள் கொஞ்சம் மறந்து தான் போயிருந்தாள்.

ஒரே ஒரு சிந்தனை மட்டும் அவளுக்கு பளிச்சிட்டது. “எனக்கு 18 வயசாக இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு. சரியாக 365 நாட்கள். சக்தி வந்து என்னக் கூட்டிட்டுப் போய், ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, நான் போட்டுருக்கிற சாதா செயினையே தாலியா திரும்பக் கட்டிட்டு. ரெண்டு வீட்டுலயும் சம்மதம் கிடைக்கிற வரைக்கும் என்ன எங்க வீட்டுலயே விட்டுட்டுப் போயிருவான். எப்படியாச்சும் எனக்கு பெர்த் டே விஷ் பண்ணிருவானே? நேத்து எதுவும் விஷ் பண்ணலியே?”

***

பிரம்மநாயகம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். லாக்டவுன் காலத்தில் அவர்கள் பகுதியில் நால்வழிச் சாலை போட மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. புல்டோசர்கள் வேலிக்கருவை முள்களை ஒதுக்கிக் கொண்டிருந்தன. குறுக்குப் பாலமும், சர்வீஸ் ரோடும் அருமையான ரோட்டோரக் கடைக்கான வாய்ப்பைக் கொடுக்கும் அந்த இடத்தில் தான் அருமைநாயகம் தனக்குத் தருவதாக வாக்குக் கொடுத்து, இப்போது தரமாட்டேன் என்று ரிஜிஸ்டர் ஆஃபீசில் தன் பெயருக்கு உறுதிப்படுத்திப் போன அந்த ப்ளாட் இருந்தது.

பிரம்மநாயகம் தனக்கு வந்த அருமையான வாய்ப்பு பறிபோன வருத்தமும் எரிச்சலும் அடிக்கடி மற்றவர்கள் மேல் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன செய்யலாம் என்று அவருக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. தன் அண்ணனை நேரடியாகப் பழிவாங்க வேண்டும். அவர் மகளை எதுவும் செய்யக் கூடாது. “அது சின்னப் பொண்ணு, வாழ வேண்டிய வயசு. இவன் தானும் அனுபவிக்காம மத்தவங்களையும் அனுபவிக்க விடாம இருக்கான்.” நினைத்தபடியே மந்திரவாதி இருக்கும் அந்த வாடகை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *