ஆன்லைன் வகுப்புகள் முடிந்து பரீட்சையும் முடிந்தது. சான்ட்ரா இப்போது கல்லூரிக்குப் போக வேண்டும். நீட் எழுதி டாக்டராகும் அளவுக்கு அவள் படிக்கிறவள் இல்லை. அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. அவளுக்கு சக்தியுடன் ஏற்பட்ட அனுபவங்களும், அது காதலா இல்லையா என்று அவளுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்த பட்டிமன்றங்களும், அவளுக்கு மனநிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளும், வீட்டுச் சிறையில் இருந்தது போன்ற அந்த நாட்களும், லாக்டவுன், அண்ணன், அண்ணி, அவர்கள் பிள்ளைகள் வந்து உடன் தங்கியிருந்தது எல்லாவுமே சேர்ந்து அவள் சுமாராகப் பரீட்சை எழுத வைத்திருந்தன.

எப்போதுமே விடுமுறை போல இருந்த அந்த லாக்டவுன் நாட்களில் பரீட்சைக்குப் பின் சான்ட்ராவுக்கு சில பொழுது போக்குகளும், விருப்ப வேலைகளும் கிடைத்தன. தோட்டம் போட்டாள், சமையல் கற்றுக் கொண்டாள். கேக் செய்வது எப்படி என்ற ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தாள்.

“சான்ட்ரா, நான் சஜஸ்ட் பண்ற யுட்யூப் சேனல் எல்லாம் சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோ. நீ கூட உனக்குன்னு ஒரு சேனல் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்.”

“சொல்லுங்க அண்ணி. நான் இப்போதைக்கு எதும் ஸ்டார்ட் பண்ற மாதிரி ஐடியா இல்ல.”

“Vihan Damaris, Jamie Grace ரெண்டு பேரும் டீன் ஏஜ்ல இருந்தே சேனல் வச்சிருக்காங்க. கண்டிப்பா உனக்கு இவங்களப் பிடிக்கும். அவங்க அனுபவங்கள், திறமைகள் எல்லாத்தையும் உங்க லாங்வேஜ்ல, உங்களுக்கு பிடிச்ச மாதிரி, உங்களுக்கு இருக்கற ப்ராப்ளம்ஸ், இஷ்யூஸ் எல்லாத்தையும் ஓப்பனா பேசுவாங்க. ஒருத்தி பெங்களூர்க்காரி, அடுத்தவா அமெரிக்காக்காரி. உனக்கு நிச்சயமா ஒத்து வரும். உன்னோட க்றிஸ்டியன் லைஃப்-ம் கூட நல்லா வளரும். அப்புறமா Switch Youth-னு இன்னொரு சேனல் இருக்குது, அதுல நிறைய யூத் ஊழியக்காரங்க
இன்ட்ரஸ்டிங்கா மெசேஜ் குடுக்கறாங்க.”

அந்த சேனல்களை எல்லாம் சப்ஸ்க்ரைப் பண்ணியதுடன், தொடர்ச்சியாகப் பார்க்கவும் செய்தாள்.

“தாங்ஸ் அண்ணி, நீங்க சொன்ன சேனல்ஸ் எல்லாம் சூப்பர்.”

இங்க்லீஷ் லிட்டரேச்சர் தான் அவளது தேர்வாக இருந்தது. மற்றவர்களின் சிபாரிசாகவும் இருந்தது. பல ஊர்களுக்கு மாற்றுதலாகிப் பழகிப் போனதால் அவளது இங்க்லீஷ் மீடியம் படிப்பு, அதிக நட்புக்கள் இல்லாததால் இங்க்லீஷ் புத்தகங்களில் மூழ்கியிருந்ததாலும் அவளுக்கு இது தான் பொருத்தமானது என்று அவளும், வீட்டில் உள்ளவர்களும் நினைத்ததில் ஆச்சரியம் இல்லை.

சென்னையில் ஒரு கல்லூரியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்தது. ஆனால் ஆன்லைனில் தான் தொடர வேண்டியதாக இருந்தது. அவளுக்கும் வாசிப்பது அதிகம் பிடித்திருந்ததால் நன்றாகவே வாசித்தாள், படித்தாள், ஆன்லைன் வகுப்புகளில் நன்றாகக் கலந்து கொண்டாள். முதல் செமஸ்டரும் நன்றாக முடிந்தது.

***
ஆன்ட்ரூவுக்கு பி.ஏ வரலாறு முதல் வருடம் முடிந்தது. செமஸ்டர் ஹாலிடேஸ் எல்லாம் லாக்டவுனில் மூழ்கியே போய்விட்டன. செல்லராஜ் அண்ணனுடன் அவன் விவசாயத்தைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் அதிகமாகவே கற்றுக் கொண்டான். சும்மா இருக்க அவனுக்கு நேரம் இல்லை. இப்போது தான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மருந்து குடிப்பது போல துவங்கியிருக்கிறான். கதைகள், வாழ்க்கை வரலாறுகள் வரைக்கும் அவன் வாசிப்பு வந்திருக்கிறது. ஒன்று இரண்டு இங்க்லீஷ் புத்தகங்களையும் நாளுக்கு ஒரு பக்கமாக முக்கி முனகி, டிக்‌ஷனரியின் உதவியுடன் படித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்பாட்டிஃபையில் Toby Mac பாடல்களைக் கேட்டு, பாடலின் வரிகளை டிக்‌ஷனரியின் உதவியுடன் புரிந்து இப்போது டோபி மேக்-இன் ரசிகனாகிவிட்டான். நார்னியா, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போன்ற ஃபான்டசி படங்களுக்கும், கார்ட்டூன் படங்களையும் செல்லராஜ் வீட்டில் மீண்டும் மீண்டும் பார்த்து வேறு ஒரு ரசனைக்குள் போயிருந்தான்.

***
அதிகபட்ச அரியர்களுடன் என்ஜினியரிங் முடிந்திருந்த சக்திக்கு, எல்லாப் பாடங்களிலும் பாஸ் என்ற அரசு அறிவிப்பு மேகங்களுக்குள் தலை மூழ்கும் அளவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தது. ஆனால் அடுத்தபடியாக அது செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது கெட்ட வார்த்தைகளால் அரசாங்கத்தை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு ஆன்லைனில் வீட்டில் இருந்தே அரியர் பரீட்சைகள் எழுதலாம் என்று வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, எழுதி ஸ்கேன் செய்து அனுப்பிவிட்டு, ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்ப வேண்டும் என்று சொன்ன போது, பக்கத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, வாட்சப்பில் நண்பர்களின் உதவியுடன் எந்தப் பக்கத்தில் எந்தக் கேள்விக்கான பதில் இருக்கிறது என்று கண்டுபிடித்து எழுதிக் கொண்டிருந்தான்.

பாஸ் பண்ணிட்டு ஏதாவது ஒரு வேலை பாக்கணும். மெட்ராசுக்கு வேணாப் போயிறலாம். இன்னும் 300 நாள் தான். அப்புறமா ரிஜிஸ்ட்டர்ட் மேரேஜ். கனவுகளுக்குப் பஞ்சம் இல்லை. எஃப் எம்மில் அவன் ரசித்துக் கொண்டிருந்த டூயட்டுகள் அவன் கற்பனைக்குத் தீனிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

அப்பா, அம்மாவுடன் அதிகப் பேச்சு வார்த்தை கிடையாது. அவனது அத்தை தான் அவனுக்கு கல்யாணத்துக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்தார். கிடைத்த சின்னச் சின்ன வேலைகள், பக்கத்து டவுனில் பைக் வாங்கி விற்றல், லாக் டவுன் காலத்தில் சில மாதங்கள் ஹோட்டலில் இருந்து சாப்பாடு டோர் டெலிவரி என்று சிறிது சிறிதாக பணம் சேர்த்துக் கொண்டிருந்தான். பிறந்த நாளுக்கு என்று சான் ட் ராவுக்கு அவன் வாங்கி வைத்திருந்த ஒரு வாட்ச் அப்படியே புதிதாக, கிஃப் ராப்பருடன் அவன் அலமாரியின் அடித்தட்டில் துணிகளுக்கு அடியில் ஓடாமல் இருந்து கொண்டிருந்தது. அவன் இன்னும் அதற்கு பேட்டரி போடவில்லை. ஆனாலும் இன்னும் 300 நாட்கள் தானே என்று மனதை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *