ஆன்ட்ரூவுக்கு முக்கிய செய்திகளைக் கொண்டு வந்தது நண்பன் செல்வம் தான். ஏற்கனவே கொரோனாவுக்காக லாக்டவுன் இருந்தாலும் கூட, ஊர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.

சான்ட்ராவின் 18 ஆம் பிறந்த நாளில் அவளை பதிவுத் திருமணம் செய்வதாக சபதம் செய்திருந்த சக்திக்கு ஏற்பட்ட கோபம் வெறியாகத் திரும்பியது. இந்த வருடம் அவளது பிறந்த நாள் வார நாளில் வருவதால் லீவு எடுக்காமல் ஹாஸ்டலில் இருப்பாள் ஈசியாக அவளைக் கூட்டிக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்திருந்தான். அவள் சொன்ன வாக்கு தவறவே மாட்டாள் என்று நூற்று ஐம்பது சதவீதம் நம்பிக்கையுடன் இருந்தான்.

காலையில் அவள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறான். பின்னர் தூரத்து சொந்தக்காரர்களில் கிறிஸ்தவராக இருந்த ஒருவரையும் பைபிளைக் கையில் வைத்தபடி இன்னும் சில சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைந்து பெண் கேட்க வேண்டும் என்று போயிருக்கிறான். வீட்டில் காவலுக்கு இருந்த உதவியாளர் வீட்டில் யாரும் இல்லை என்று சொல்லி துரத்தி விட்டிருக்கிறார்.

சக்தி பல பெரியவர்களை சந்தித்து, சாதி, மதம், மனித உரிமை அடிப்படையில் அவனுக்கு நீதி வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். பிரச்சனையைப் பெரிதாக்கி, மேஜரான ஒரு பெண்ணை அவர்கள் அடிமை போல வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி வைத்திருந்தான்.

சக்தியின் அப்பாவுக்கு எதுவும் தெரியவில்லை.

மாலை நேரம் சுடுகாட்டுப் பக்கம் அதிகம் சுற்றிவிட்டு, நேராக சான்ட்ராவின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதிக்கும் போது அதை ஒட்டியே போய்க் கொண்டிருந்த மின்சார வயரைத் தொட்டுவிட்டதால் அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளேயே விழுந்து, பின்னர் 108 ஆம்புலன்ஸ் வந்து உயிர் போய்விட்டது என்று சொல்லி திரும்ப, இன்னொரு ஆம்புலன்ஸ் தான்எடுத்துக் கொண்டு போனது. இந்த கால இடைவெளியில் பலவிதமான கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து குழுமிவிட பெரிய கலவரம் வருவது போலவே இருந்தது.

அலெக்சான்டர் வரும் போது எல்லோரும் ஆம்புலன்ஸுடன் பக்கத்து டவுனில் இருந்த அரசு மருத்துவமனைக்குப் போய்விட்டதால் அவன் தப்பினான். நல்ல வேளையாக பெருமாள் ஐ.பி.எஸ் உடனே வந்ததால் பல பிரச்சனைகள் சுமுகமாக முடிந்தன.

போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட பின்னர், நியாயம் கிடைக்காமல், கலெக்டர், டி எஸ் பி இல்லாமல் உடலை வாங்க மாட்டோம் என்று மத, சாதி, மனித உரிமை அமைப்புக்காரர்கள் பெரிய பிரச்சனையை செய்துவிட்டனர். அதற்குள் சக்தியின் நண்பர்களும், பலவித அமைப்புகளும் அச்சடித்த அஞ்சலி போஸ்ட்டர்களும், நீதி வேண்டும் என்ற போஸ்ட்டர்களும் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் பெருமாளும் அலெக்சான்டரும் சக்தியின் வீட்டுக்குப் போனார்கள்.

“ஐயா நீங்க போன தடவ வந்துட்டுப் போனதுக்கு அப்புறமா நான் அவனக் கண்டிச்சேன். எங்க கூட அவன் பேசறதே இல்ல. நல்லாத்தான் அரியர் எல்லாம் எழுதிட்டு இருந்தான். சின்னச் சின்ன வேலை எல்லா செஞ்சுட்டு இருந்தாங்கய்யா. ஆனா இப்போ ரெண்டு மூணு நாளாத்தான் அவன் போக்கு சரியில்ல. சுடுகாட்டுல ரொம்ப நேரம் இருந்திருக்கான். நேத்து நான் தான் அவன சுடுகாட்டுல இருந்து இழுத்துட்டு வந்தேன். ஐய்யா உங்க மேல எந்த தப்பும் இல்ல. எந்த கோர்ட்டுல வேணும்னாலும் நான் வந்து சொல்றேன். என்ன வேணும்னாலும் எழுதித்தாரேன்.” அவரது உறுதியான ரிப்போர்ட் தான் பிரச்சனை பெரிதாகாமல் காப்பாற்றியது.

***

இரண்டே வாரங்களில் சான்ட்ராவின் குடும்பம் எல்லா வகைகளிலும் தலைகீழாக மாறிவிட்டது. இனியும் அந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று தீர்மானம் செய்யப்பட்டது. அவர்கள் இருந்த வீடும், கிராமாத்தில் இருந்த நிலங்களும் விற்கப்பட்டு தாம்பரம் அருகில் ஒரு வீடு வாங்கி அங்கேயே அவர்கள் செட்டில் ஆகிவிட்டார்கள்.

சான்ட்ரா எந்த அளவுக்கு தன் வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பாளோ அதைப் போலவே மற்றவர்களும் அவளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பவள். தனது 18 ஆவது பிறந்த நாளில் சக்தி வரவில்லை. ஒரு செய்தியும் இல்லை. இது அவளுக்கு ஒரு காரணமாகவும் போய்விட்டது, சக்தியை விட்டு விலக. இன்னும் அதிகம் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினாள். ஆன்லைனில் காலேஜ் பாடம் போக, பல கோர்ஸ்களை எடுத்து தன்னை அதிக பிசியாக வைத்துக் கொண்டாள்.

அவள் வீட்டாரும் அவளை செய்தித்தாள்களையும், டிவியில் செய்தி சானல்களையும் தப்பித்தவறிப் பார்த்துவிடாதபடி பார்த்துக் கொண்டனர். தனியாக அவளை ஸ்மார்ட் ஃபோனுடன் இல்லாமல் கவனமாக வைத்துக் கொண்டார்கள். அதற்கு வசதியாக அவர்களது புது வீட்டிலும் அதிக அறைகள் இல்லை. அவள் சிறுபிள்ளைகளுடனும் அம்மாவுடனும் தான் ஒரே படுக்கை அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. அப்பா வரவேற்பறையின் சோஃபாவில் தான் தூங்கிக் கொண்டிருந்தார்.

***

பிரம்மநாயகமும் மந்திரவாதியும் ஆளுக்கு ஒரு குவார்ட்டர் பாட்டிலுடன் வறுத்த நாட்டுக் கோழியை தங்கள் முன் வைத்துக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“யோவ் என்னய்யா மந்திரம் போட்டீரு? எங்க அண்ணன் தவிட்டு விலைக்கு நிலத்த எல்லாம் வித்துட்டு மெட்ராசுக்கே ஓடிப் போயிட்டான்.”

“ஐய்யா, நம்ம செய்வினை எல்லாமே லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கும்னு சொன்னேன் இல்லியா? அதான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *