வழக்கம் போல ஆன்லைனில் செல்லராஜும் அலெக்ஸும் நடத்தும் வேதபாடம், ஜெபம் எல்லாம் தொடந்தன. அவ்வப்போது சான்ட்ராவின் கருத்துகளுக்கு ஆன்ட்ரூ லைக் போடுவான். ஒரு தடவை கஷ்ட்டப்பட்டு ஆன்ட்ரூ செய்திருந்த கமென்ட்டுக்கு சான்ட்ரா லைக் போட்டு, ‘ஆமென்’ என்று பதில் கமென்ட் போட்டது ஆன்ட்ரூவுக்கு
நம்பிக்கையைக் கொடுத்திருந்தது.

சான்ட்ரா இரண்டாம் வருடம் முடித்து மூன்றாம் வருடம் நுழையும் போது ஆன்ட்ரூ சென்னையில் தான் பி.ஜி படிப்பேன் என்று அடம் பிடித்து தாம்பரம் எம் சி சியில் ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டான். எப்படியாவது சான்ட்ராவுடன் மீண்டும் ஆதி காலத்து நெருக்கத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பது தான் அவன் ஆசை, கனவு, திட்டம், ஜெபம் எல்லாம்.

ஏதோ தற்செயலாக போனது போல சான்ட்ரா வீட்டுக்கு அவள் வீட்டில் இருக்கும் போது சரியாகப் போய்க் கொண்டிருந்தான். அவள் வைஃபையை மட்டும் தான் தனது ஸ்மார்ட் ஃபோனில் பயன்படுத்துவதால், ஆன்லைன் என்று தெரிந்தால் வகுப்பு, ஹாஸ்டலில் சாப்பாடு நேரம் எதுவாக இருந்தாலும் கவலைப்படாமல் சான்ட்ரா வீட்டுக்குப் போய்விடுவான். ஆனாலும் மாதம் இரண்டு தடவைகள் தான் என்று தனக்கு ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தான்.
“ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்குமோ, வீட்ல சாப்ட்டுட்டு போப்பா” என்று லீலா அத்தை சொல்லும் போது எந்த மறுப்பும் இல்லாமல், சமையல் முடியும் வரை காத்திருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போவான்.

சான்ட்ரா அவனிடம் அதிகம் பேசவில்லை என்றாலும் அவனை அலட்சியம் செய்யவில்லை என்பது தெரிந்தது. ஆன்ட்ரூவின் ஜெபமும் இப்போது அதிகரித்திருந்தது. அவனுக்குத் தெரிந்த ஊழியர்கள் நடத்தும் ஒன்றிரண்டு ரிட்ரீட்டுகளுக்கு அவளை வரும்படி வாட்ஸப்பில் போஸ்டர் அனுப்பி வைத்திருந்தான். அவளும் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஞாயிறு தோறும் அவர்கள் போகும் ஆலயத்துக்குத் தான் போவான். அத்தை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்படி சொல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே வேறு வேலை இருக்கிறது என்று சொல்லி அவாய்ட் செய்து கொண்டான். கொஞ்சம் மதிப்பு, மரியாதையோட இருக்கணும் என்று நினைத்துக் கொண்டான்.

அலெக்சான்டரிடமும் திவ்யாவிடமும் அவர்கள் பிள்ளைகளிடமும் ஒரு வழியாக சின்ன உறவை வளர்த்துக் கொண்டான். சில நாட்கள் இரவில் சாப்பிட்ட பின் நேரம் ஆனால், அலெக்சான்டர் காரில் அவனைக் கொண்டு ஹாஸ்டலில் விடும் போது கார் பயண நேரத்தில் தான் வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறேன் என்பதை எப்படியாவது பேச்சில் கொண்டு வந்து ‘இம்ப்ரஸ்’ பண்ணுவது வெளியே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருந்தான்.

மாமாவுக்கு என்று ஒரு புத்தகத்தை வாங்கி வந்து, “அத்த மாமாக்கு ஒரு புக் வாங்கிட்டு வந்தேன். புக்‌ஷாப்ல டிஸ்க்கவுண்ட்ல கிடைச்சுது” என்று அத்தை மூலமாகக் கொடுக்க வைத்தான். “நீயே குடுக்க வேண்டியது தான?”என்று கேட்டுக் கொண்டே கொண்டு கொடுக்க, அவரும் வாங்கிக் கொண்டு“ம்ம்ம்” என்று மட்டும் சத்தம் கொடுத்துவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தார்.

சான்ட்ராவுக்கு எதையும் கொடுக்கும் துணிவு அவனுக்கு இல்லை. “இப்போதைக்கு எந்த ஒரு சின்ன சொதப்பலும் இல்லாம பொறுமையா நடந்துக்கணும்” என்பது தான் அவனுடைய இப்போதைய திட்டம்.

இந்த சூழ்நிலையில் தான் அத்தை ஒரு நாள் அவனிடம் சொன்னார்கள், “ஆன்ட்ரூ, உங்க காலேஜ்ல சான்ட்ரா படிப்புக்கு ஏத்த மாதிரி எம் ஏ சீட் கிடைக்குமா? பி ஜி முடிச்சப்புறம் தான் கல்யாணத்தப் பத்தியே பேசணும்னு சொல்லிட்டா.”

ஆன்ட்ரூ தனது எம் ஃபில் பற்றி அப்போதே தீர்மானித்துவிட்டான். அவன் காலேஜில், இல்லை சான்ட்ரா காலேஜில், இல்லை, அவர்கள் காலேஜில்.

“கேட்டு சொல்றேன் அத்த.”

அன்று இரவு அவன் பைபிள் வாசிக்கத் திறந்த போது வரிசைப்படி அவனுக்கு வந்தது உன்னதப்பாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *