“அய்யய்யோ லேட் ஆயிருச்சே!” சான்ட்ரா தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்தாள்.

“உங்க வீட்டுல என்ன அந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்குதா என்ன?”

“இல்ல, அதனாலத்தான் அந்த மரியாதையக் காப்பாத்திக்கணும்னு பதட்டமா இருக்கு.”

“நான் வேணா உன்ன பைக்ல கொண்டு விட்டுறட்டுமா?”

“எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா அம்மா பாத்தாங்கன்னா, தெரிஞ்சுதுன்னா அவங்களுக்குப் பிடிக்காது.”

“சரி, நம்ம இன்னிக்கு மீட் பண்ணி என்ன முடிவு செஞ்சிருக்கோம்.”

“என்ன முடிவு செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வரணும்னு புரிஞ்சிருக்கு.”

“என்ன புரிஞ்சதுன்னு சொல்லேன்.”

“இதுக்கு மேல நான் என்ன சொல்றதுன்னு தெரியல.”

அமைதியாகவே பஸ் ஸ்டாப் வரை நடந்தார்கள். சான்ட்ராவுக்கு நிம்மதி தருவது போல உடனேயே ஒரு பஸ் வந்தது.

***

ஆன்ட்ரூ சூட்டோடு சூடாக அன்றே ஒரு நீண்ட கடிதத்தை சான் ட் ராவுக்கு எழுதி முடித்தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவிலில் சான்ட்ராவின் குடும்பத்துடனேயே ஒட்டிக் கொண்டு மதிய சாப்பாடு முடிந்ததும் கிளம்புவதாக சொல்லிக் கொண்டான். அவன் பைபிளுக்குள் அந்தக் கடிதம் இருந்தது. அது Zip வைத்த பைபிளாக இருந்தாலும், சாப்பிடும் போது கூட அதைத் தன் பக்கமாகவே வைத்துக் கொண்டான் ஆன்ட்ரூ. கிளம்புவதற்குள் சான்ட்ராவுக்கு அந்தக் கடிதத்தைக் கொடுக்க ஒரு தனியான சூழல் அமையுமா என்று காத்துக் கொண்டிருந்தான். ஆனால் எல்லோருமே ஒரே முன் அறையிலேயே இருந்தார்கள். அவன் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அவன் திணறுவதைப் பார்த்த சான்ட்ரா ஓரளவு புரிந்து கொண்டாள். ஏதோ வேலையாகப் போவது போல காலில் செருப்பையும் மாட்டிக் கொண்டு வாசலில் ஆன்ட்ரூவின் பைக் நின்ற இடத்துக்குப் போனாள்.

“ஐயையோ மாஸ்க்க எங்கேயே வச்சுட்டேனே” என்றான் ஆன்ட்ரூ, வாசலில் இருந்து காம்பவுண்ட் போகும் பாதி வழியில் சொன்னான். எல்லாருமே வீட்டுக்குள் போய் தேடப் போனார்கள். நல்ல வேளையாக சிறுபிள்ளைகள் உள்ளே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடைவெளியில் ஆன்ட்ரூ கடிதத்தை சான்ட்ராவின் கையில் திணித்துத் திரும்பவும், லீலாம்மா வெளியே வரவும் சரியாக இருந்தது. அவர்கள் பார்த்துவிட்டார்களா என்பது இருவருக்கும் தெரியவில்லை. ஆனாலும் ஒன்றும் நடக்காதது மாதிரி, “இங்க என் பேன்ட் பாக்கட்ல இருக்குது” என்று சத்தமாகச் சொல்லியபடியே மாஸ்க்கை உயர்த்திக்காட்டினான் ஆன்ட்ரூ.

மீண்டும் ஒரு முறை எல்லாருக்கும் போய்ட்டு வர்றேன் என்று சொல்லியபடியே பைக்கை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான் ஆன்ட்ரூ.

டிங் டிங் என்றது வாட்ஸப். ஆன் ட்ரூவுக்கு என்னவோ அது சான்ட்ராவாகத்தான் இருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது. சட்டென்று பேன்ட் பாக்கட்டில் இருந்து ஃபோனை எடுத்துப் பார்த்தான்.

“நல்ல நடிகன் நீ” என்று மெசேஜ் இருந்தது.

பதிலுக்கு, “:-/“ என்று பதில் அனுப்பினான்.

“சாரி, டிரைவ் பண்றப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இப்போ வண்டி ஓட்டிட்டே தான இதப் பாத்து பதிலும் அனுப்பிருக்க?”

“எப்படித் தெரியும்?”

“மெசேஜ் அனுப்புன மறு செகன்ட் பதில் வந்திருச்சே!”

“இப்ப நான் ஓரமா வண்டிய நிறுத்திட்டேன்.”

“வேணாம் நீ போ. நான் உன் லெட்டரப் படிச்சுட்டு பதில் சொல்றேன்.”

“ஓ கே. நேத்து தப்பிச்சுட்டே. இன்னிக்கு நீ ஒரு முடிவுக்கு வந்து தான் ஆகணும்.”

***
‘இன்னைக்கு எதுவானாலும் முடிவா சொல்லிட்டு, படிப்பு, வேலைன்னுன் பொழைப்பப் பாக்கணும். அவளும் டூ மச்சாத் தான் போயிட்டு இருக்கா’ என்று மனதில் நினைத்தாலும், வாய்விட்டு ஜெபம் செய்து கொண்டு தான் இருந்தான். இரவு சாப்பிடாமல், ஹாஸ்ட்டல் வராண்டாவில் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் ஆன்ட்ரூ. ஓரளவுக்கு அவன் சான்ட்ராவை மறக்கவும் புதிய வாழ்வைத் துவங்கவும் ரெடியாகிவிட்டான். இனியும் இப்படியே ஒரு வித சஸ்பென்ஸிலேயே தொடர்ந்து கொண்டிருக்க அவனுக்கு மனம் இல்லை. ‘ஒரு வேளை கர்த்தரின் சித்தம் இல்லாமல் நானே வற்புறுத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டு, வாழ்க்கை மோசமாகப் போய்விடக் கூடாது’ என்றும் நினைத்திருந்தான்.

‘எம் ஃபில் படிக்கிறேன், இத்தனை வயது ஆகியிருக்கிறது. பதில் எதுவாக இருந்தாலும் ஓக்கே சொல்லும் பக்குவம், முதிர்ச்சி வர. செல்ல ராஜ் அண்ணன் சொன்னது சரிதான்.’ ஒரு வேளை வேலைக்கு வந்த பின் இன்னும் முதிர்ச்சி கிடைக்குமோ என்று நினைத்துக் கொண்டான்.

டிங்டிங் என்றது வாட்ஸப் நோட்டிஃபிக்கேஷன்.

“கர்த்தருக்கு சித்தமானால்…” என்று இரண்டே சொற்களும், கண்ணடிக்கும் ஒரு பூனையின் ஜிஃப் இமேஜும் சான்ட்ராவிடம் இருந்து வந்தது.

“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று மட்டும் பதிலளித்துவிட்டு சட்டென்று ஒரு கூப்பிய கை இமேஜை மட்டும் அனுப்பிவிட்டு அங்கிருந்த மைதானத்தை ஒரு சுற்று நடந்து வந்தான். அவன் உதடுகள் “ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்…” என்றே முனகிக் கொண்டிருந்தன.

அறைக்கு வந்ததும் முழங்காலிட்டு ஒரு மணி நேரம் ஜெபித்த பின்பு தான் தூங்கினான்.

வாட்ஸப் நோட்டிஃபிக்கேஷன் அதற்குள் 50 தடவைகளாவது இசைத்திருக்கும். எல்லாமே சான்ட்ராவாகத் தான் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். வேறு யாரும் அவனுக்கு இத்தனை மெசேஜ்கள், இந்த நேரத்தில் அனுப்ப மாட்டார்கள். அவனுக்குத் தெரிந்து, அவனுக்கு மெசேஜ் அனுப்பும் அனைவரும் அனுப்பினாலும் கூட, அவன் பிறந்த நாளுக்குக் கூட இத்தனை மெசேஜ்கள் ஒரு மணி நேர இடைவெளியில் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் சோதனையை சகிப்பது பற்றி நன்றாகவே கற்றிருந்தான். இப்போது சான்ட்ராவின் மனதில் தன்னைப் பற்றி, ‘அலையிறவன்’ என்ற பெயர் வரக்கூடாது என்பது மட்டுமல்ல. அவன் ஒரு பொருத்தனையும் செய்திருந்தான்.

“கர்த்தாவே நீங்க மட்டும் சான்ட்ரா கூட என்ன சேத்துட்டீங்கன்னா. கல்யாணம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவ தான் பேசுவேன். மெசேஜ் கூட ஒண்ணு ரெண்டு தான் போடுவேன்.”

“அவளுக்கு புரியற மாதிரி நாளைக்கு ஒரு மெசேஜ் போடணும் அல்லது, கால் பண்ணி பேசணும்.”

கடைசியாக வந்திருந்த மெசேஜ் சின்னதாக, திறக்காமலேயே இருந்தது. அதில் ஒரு ஸ்மைலி கண்ணீர் வடிப்பது போல இருந்தது. இரண்டே வார்த்தைகள் தான், “என்னப் பிடிக்கலியா?” என்று இருந்தன.

“காலைல பேசறேன். குட் நைட்” என்று முடித்துக் கொண்டான் ஆன்ட்ரூ. “ஆண்டவரே நாளைல இருந்து பொருத்தனைய நிறைவேற்றிக்கிறேன். இன்னிக்கு நாலு அஞ்சு மெசேஜ் அனுப்பிட்டேன். மன்னிச்சுக்கோங்க” என்ற ஜெபத்துடன் சிறு பிள்ளையைப் போல தூங்கிப்போனான்.

சான்ட்ராவுக்கு மனதுக்குள் ஒரு சிந்தனை சட்டென்று வந்து போனது, “நான் தப்பு செய்றேனோ? இது எங்கப் போய் முடியப் போகுதோ? சும்மா இருந்த ஆன்ட்ரூ மனசுல வீணா ஆசையத் தூண்டி விட்டுட்டேனோ?”

தன் மெசேஜ்களை மீண்டும் வாசித்துப் பார்த்தாள். எதிலும் ப்ளூ டிக் விழவில்லை.

ஆன்ட்ரூ நேற்றே ஒன்றிரண்டு தடவைகள் கோபப்பட்டது போல இருந்தது.

சான்ட்ராவுக்கு பெரிய குழப்பமாக இருந்தது.

“ஒரு பொண்ணு இப்படியா நான் ஸ்டாப்பா மெசேஜ் பண்ணுவா?” என்று தனக்குத் தானே திட்டிக் கொண்டாள். இந்த பரபரப்பில் அன்று விழுங்க வேண்டிய மாத்திரைகளை விழுங்காமல் படுக்கப் போனாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை.

கெட்ட கெட்ட கனவுகளாக வந்து கொண்டிருந்தன. அதிகாலையில் களைப்பினால் அவளுக்குத் தூக்கம் வந்தாலும் அவளால் தூங்க முடியவே இல்லை. சேவல் கூவும் சத்தம், பால்க்காரனின் சத்தம், வண்டிகளின் சத்தம், சமையலறையிலிருந்து சத்தம். எல்லாமே அவளது கனவின் பின்னணி சத்தங்களாகவும், தூரத்தில் கேட்ட சுப்ரபாதம், ஆலய கோபுரத்தில் இருந்து சொல்லப்பட்ட வசனங்கள் எல்லாவும் பின்னணி இசையாகவும் கேட்க, சக்தியும் ஆன்ட்ரூவும் இரண்டு பக்கங்களில் நின்று கொண்டு அவளுக்கு ரோஜாப்பூவை நீட்டிக் கொண்டிருப்பது போல காட்சிகள் தெரிந்தன.

அப்போது தான் அவளுக்கு இத்தனை மாதங்களாக இல்லாமல் இருந்த அந்த நிலை மீண்டும் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *