காலையில் இரவு முழுவதும் தூங்காத சான்ட்ரா பைத்தியம் பிடித்தது போல இருந்தாள். சிறு பிள்ளைகளிடம் கோபப்பட்டாள். கதவை மூடிக் கொண்டு அறைக்குள் கத்திக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அம்மா ஒப்பாரி வைக்கத் துவங்கிவிட்டார். காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவே அதிக நேரம் ஆனது.

“திரும்பவும் பேய் பிடிச்சிருச்சு.”

“ஏதோ ஸ்ட்ரெஸ் தான்.”

“அந்தப் பய ஆன்ட்ரூ எதுவும் சொல்லிருப்பானோ?”

இறுதியில் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி அதட்டிய அலெக்ஸ் பழைய மருத்துவருக்கு ஃபோன் செய்த பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

சான்ட்ரா சில நாட்களாகவே அவளுக்குரிய மாத்திரையை சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும். தூங்காமல் இருந்தது அவளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அம்மாவுக்கோ இது நிச்சயமாகப் பேய் தான் என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது. அப்பா ஊழியரை அழைத்து ஜெபிக்கும் ஐடியாவுக்கு முழுமையான தடை போட்டார். “வேணும்னா, நீங்க பட்டினி கிட்டினி கிடந்து ஜெபம் பண்ணுங்க.”

ஜெபிக்கவும் செய்தார்கள். மாத்திரையும் கொடுத்தார்கள். டாக்டர் சொன்ன ஒரே ஒரு மாத்திரையை மட்டும் எப்போதும் அவள் எடுக்கும் மாத்திரையுடன் சேர்த்து எடுக்கச் சொன்னார்.

சான்ட்ரா அமைதியாகத் தூங்கினாள்.

அடுத்த நாள் விடிந்ததும் சிறு பிள்ளைகள் வஞ்சகம் இல்லாமல் சான்ட்ராவிடம் போய் பாட்டிம்மா சொன்னவற்றை சொன்னார்கள். “அத்த உங்களுக்கு பேய் பிடிச்சிருந்துதே அது உங்களுக்குத் தெரியுமா? நேத்து கண்ண உருட்டுனீங்களே அது மாரி உருட்டிக் காட்டுங்க பாப்போம்.”

“அம்மா” கீச்சுக்குரலில் வீடே அதிரும்படி கத்தினாள் சான்ட்ரா. எல்லோரும் அவள் அறைக்கு ஓடி வந்த போது, சான்ட்ரா அழுது கொண்டிருந்தாள்.

திவ்யா தான் அவளைத் தேற்றி நடந்தவைகளை அவளுக்குப் புரியும்படியாகவும் பக்குவமாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
***

அதன் பின் சான்ட்ராவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக மாறிவிட்டது. தன்னைத் தானே நொந்து கொண்டவளாக, மற்றவர்களைப் பார்க்கவே வெட்கத்துடன் இருந்தாள்.

“நீயும் எங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல?” என்று ஒரு மெசேஜ் மட்டும் ஆன்ட்ரூவுக்கு அனுப்பியிருந்தாள்.

“நான் கண்டிப்பா உனக்குத் தெளிவா விளக்கமா சொல்றேன்” என்று மட்டும் பதிலளித்துவிட்டு, “ஜெபிக்கிறேன்” என்ற வார்த்தையுடன் ஒரு கூப்பின கையை பட்மாக அனுப்பி வைத்தான்.

சான்ட்ரா அதிகமாக பைபிளையும், ஆவிகள், ஆவியின் வரங்கள் பற்றிய புத்தகங்களையும் வாசிக்கத் துவங்கினாள். அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டாள். இதைப் பற்றி ஆன்ட்ரூவுடன் அதிகம் பேசவும் மெசேஜ் அனுப்பவும் உரையாடவும் தொடர்ந்தாள்.

முடிவில் ஒரு முக்கியமான அறிவிப்பை வீட்டில் எல்லாரும் இருக்கும் போது செய்தாள்.

கேட்ட அனைவரும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா மட்டும் ஒரு உறுதியான முடிவைச் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *