“நீ ஜெபம் பண்ணு, உபவாசம் பண்ணு எதுனாலும் எனக்கு ஆட்சேபனை இல்ல. ஆனா மருந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும்.”

“அப்பா, நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேட்டுட்டு சொல்லுங்க. நாம டாக்டரப் பாப்போம். அவருட்டயே கேப்போம். ஒரு நாள் மருந்து இல்லாம இருந்து பாக்குறேன். பிரச்சனை இல்லன்னா ரெண்டாவது நாளும் பாக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு, கர்த்தர் பேய், பிசாசு, வியாதி எல்லாத்தையும் சரி செய்வார். அவர் எல்லாத்துக்கும் மேலானவர். நீங்க சொல்ற மாதிரி எனக்கு பிரச்சன வந்ததுன்னா நான் மாத்திரைய கன்டினியு பண்றேன்.”

அலெக்சான்டரின் சிபாரிசு, அம்மாவின் கண்ணீர் எல்லாவுமாக சேர்ந்து அப்பா ஓக்கே சொல்லிவிட்டார்.

அம்மா இரண்டு நாட்கள் சான்ட்ராவின் அருகில் இரவு முழுவதும் விழித்தே இருந்தார்கள். பகல் முழுவதும் சான்ட்ரா தன்னை பரபரப்பாக, பிள்ளைகளோடு விளையாடுவதில், தன்னை மாலை நேரம் களைப்படைய வைத்திருந்தாள். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் என்று. குடும்பத்தில் பலர் சான்ட்ராவுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஆன்ட்ரூ ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சாப்பிடாமல் இருந்து, கல்லூரி சேப்பலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வாரம் ஓடிவிட்டது. எந்த பிரச்சனையும் இல்லை. மீண்டும் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் மருந்து இல்லாமல் தொடரலாம் என்று சொல்லிவிட்டார்.

***

அடுத்த வாரம் கல்லூரியில் சந்தித்த ஆன்ட்ரூ தயங்கியபடியே சான்ட்ராவிடம் சொன்னான், “உனக்காக நான் ஜெபம் பண்ணிக்கிட்டேன். கர்த்தர் நல்லவர். உனக்கு எல்லாமே சரியாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”

“தாங்க்ஸ் ஃபார் யுர் ப்ரேயர்ஸ்”

“இஃப் யு டோன்ட் மைன்ட் எங்கூட சேப்பலுக்கு வர்றியா? ஒரே ஒரு ஜெபம் கர்த்தருக்கு நன்றி சொல்லி செஞ்சுட்டு வந்துரலாம். எப்பவுமே தேவைக்கு ஜெபம் பண்ணுறோம். முடிஞ்சதும் பொதுவா கண்டுக்காம போயிடுறோம்.”

சேப்பலை விட்டு வரும் போது சான்ட்ரா கேட்டாள், “உங்கிட்ட ரெண்டு விஷயம் கேக்கணும் ஆன்ட்ரூ.”

“ம் கேளு.”

“ஒண்ணு அன்னிக்கு நான் மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன். நீ பதிலே அனுப்பல. நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? என்னப்பத்தி என்ன நினைச்சே? கேவலமான பொண்ணு அப்படின்னு தானே?”

“அதெல்லாம் இல்ல. நான் உனக்கு டீட்டெய்ல்ஸ் சொல்றேன்னு மெசேஜ் போட்டுருந்தேன் பாக்கலியா? அப்புறமா நீ சிக் ஆனதால நாம பேசிக்க முடியல. மெசேஜ் எதுவும் போடல.”

“அதப்பத்தி அப்புறமா கேட்டுக்கிறேன். ஊர்ல இருக்கும் போது எனக்கு பேய் பிடிச்சிருந்ததுன்னு சொன்னாங்களே அது உண்மையா? எனக்கு எதுவுமே தெரியல. அப்பப்போ கொஞ்ச டயர்டா இருக்கும். தலைவலியா இருக்கும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரில இருந்தேன். அப்புறமா தினமும் ராத்திரி ஒரு மாத்திரைய ஒரு நாள் விடாம விழுங்கச் சொல்வாங்க. கேட்டா ஏதோ ஸ்ட்ரெஸ்க்கு மாத்திரன்னு சொல்வாங்க. டாக்டரும் பெரிசா விளக்கமா எதுவும் சொல்லல, நானும் கேட்டுக்கல.”

“அதெல்லாம் பழைய கத சான்ட்ரா. கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்னா சொல்லு நான் சொல்றேன்.”

***
அடுத்த தடவை பீச்சுக்குப் போன போது ஆன்ட்ரூ விளக்கமாகத் தன் பக்கத்து வாதங்களைச் சொன்னான். கல்யாணத்துக்கு முன் அதிக பேச்சு வார்த்தை, ஃபோனில், சோஷியல் மீடியாவில் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று பொருத்தனை செய்து கொண்டது எல்லாவற்றையும் விளக்கினான். சான்ட்ராவுக்கு நடந்த எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி முடித்தான்.

“கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு உறுதியானதுக்கு அப்புறமா இந்த மாதிரி எல்லாம் பொருத்தன எதுக்கு? கண்ண வித்து ஓவியம் வாங்கின மாதிரி இருக்குதே உன் பொருத்தனை?”

“சான்ட்ரா, சாமுவேலோட தாய் எப்படி பொருத்தன பண்ணிக்கிட்டா தெரியுமா? எனக்கு பையன் பிறந்தா அவன கோயில்ல விட்டுருவேன்னு பொருத்தன பண்ணினா. பிள்ளைக்காக ஜெபம் பண்ணுனவ, பிள்ளையையே திரும்பத் தர்றேன்னு வாக்கு குடுத்தா. அதே மாதிரி தான். நீ எனக்குக் கிடைச்சா, கல்யாணம் வரைக்கும் மத்தவங்க மாதிரி சுத்தாம, கல்யாணத்துக்கு அப்புறம் பூ மாதிரி உன்னப் பாத்துக்குவேன்.”

சான்ட்ராவின் கண்களில் கண்ணீர் தளுதளுத்தது. அவள் குரலும் கம்மியது. “தாங்க்ஸ் ஆன்ட்ரூ. சாரி நான் உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன்.”

“ச்சீ அதெல்லாம் ஒண்ணும் இல்ல சான்ட்ரா. இப்ப என்ன, எல்லாம் நல்லபடியாத்தான நடந்துட்டு இருக்கு?”

சான்ட்ரா மூக்கைத் தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டு, கண்ணீரைத் தன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள். சிரிப்பும் சிறிது தளுதளுப்புமாகச் சொன்னாள், “நீ மட்டும் பொருத்தன பண்ணலன்னா கண்டிப்பா நான் உனக்கு ஒரு கிஸ் குடுத்திருப்பேன்.”

“கொஞ்சம் பொறுத்துக்கோ, எல்லாத்தையும் சேத்து கல்யாணத்துக்கு அப்புறமா வாங்கிக்கிறேன்.”

சிரித்தபடியே அவர்கள் பீச்சில் இருந்து திரும்பினார்கள்.

“பைக்கில ட்ராப் பண்றியா?” என்றாள் சான்ட்ரா.

“கண்டிப்பா” என்றான் ஆன்ட்ரூ, “அப்புறமா கார்ல. அடுத்த மாசம் எனக்கு கோர்ஸ் முடியுது. உடனே வேலைக்காக நான் பெங்களூர் போறேன். மே பி இது தான் நாம பைக்ல போற ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் ட்ரிப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.” அது உண்மையாகப் போவது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *