ஆன்ட்ரூ சொன்னபடியே படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டான். பெங்களூரில் அவனுக்கு நல்ல ஒரு ஆலயமும் நண்பர்களும் கிடைத்தார்கள். சன்டே ஸ்கூல், யூத் மீட்டிங் என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொண்டான்.

சான்ட்ராவுக்குத் தான் முடியவில்லை. இப்படி ஒரு சாமியாரப் போய் நானே ப்ரொப்போஸ் பண்ணுன மாதிரி பண்ணிட்டேனோ என்று சில நேரங்களில் நினைப்பாள். ஆனால் அவளும் தன் படிப்பை முடிப்பதற்காக சிறிது சிரமப்பட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

எத்தனை தான் மெசேஜ் அனுப்பினாலும், மிஸ்ட் கால் கொடுத்தாலும் ஒரு ஸ்மைலியை மட்டும் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்துவிடுவான் ஆன்ட்ரூ. தினமும் ஒரு மெசேஜ் மட்டும் வரும் அதுவும் ஒரு பைபிள் வசனம். வாரம் ஒரு நாள் பேசுவான். அதிலும் வெட்டிப் பேச்சுக்கள் எதுவுமே இருக்காது.

சான்ட்ரா தான் ஏதாவது ஒரு டாப்பிக்கை வலிய இழுத்து பேசுவாள். உதாரணமாக ஒரு நாள் அவர்கள் நடத்திய உரையாடல்.

“ஆன்ட்ரூ, செமயா போர் அடிக்குது. நான் கெளம்பி அங்க வரட்டுமா?”

“இங்கேயா? எதுக்கு?”

“உன்ன மாதிரி ஒரு ஆம்பள கிடைக்கறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்.”

“தாங்க்ஸ்.”

“ஏதாச்சும் இன்ட்ரஸ்ட்டிங்கா பேசிட்டு வச்சிரேன்.”

“போன ஞாயித்துக் கிழம சன்டே ஸ்கூல்ல”

“நம்ம ரெண்டு பேரப் பத்தியும் பேசலாமா?”

“கண்டிப்பா. நம்ம ரெண்டு பேருக்கும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கற மாதிரி ஒரு சப்ஜெக்ட் இருக்குது.”

ஆர்வமாகக் கேட்டாள் சான்ட்ரா, “சொல்லு.”

“நாம சின்ன வயசுல ஊருக்குப் போவும் போது ட்ரெய்ன்ல ஜன்னல் சீட்டுக்கு சண்ட போட்டுட்டு இருக்கறப்போ ஒரு நாள் உங்க அம்மா பஞ்சாயத்து பண்ணினாங்க. எங்க அம்மாவும் சரின்னு சொன்னாங்க.”

“ம், நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாங்க அது தான?”

“அதுக்கும் மேல ஒண்ணு இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களாவே பஞ்சாயத்து பண்ணிக்கணும், நாங்க எல்லா இடத்துக்கும் கூட வந்துட்டே இருக்க மாட்டோம்னு சொன்னாங்க உங்க அம்மா.”

“அப்புறம்.”

“நான் சொன்னேன், அப்ப நாங்க சண்டையே போட மாட்டோம்னு.”

“சரி எங்கிட்ட உனக்குப் பிடிச்சது, பிடிக்காதது சொன்னாத்தான் ஃபோன கட் பண்ண விடுவேன்.”

“பிடிக்காதது எதுவுமே இல்ல. பிடிச்சது முழுசா நீ தான்.”

“நீ பண்றத எல்லாம் பாக்கறப்போ உனக்கு என்னப் பிடிச்சது மாதிரியே தெரியலயே?”

“கல்யாணத்துக்கு அப்புறமாப் பாரேன்.”

“அதத்தான் இப்ப சொல்லவாவது செய்யேன்.”

“எல்லாமே சஸ்பென்ஸ்.”

“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. போற போக்குல ஊழியக்காரன், சாது மாதிரி எதுவும் ஆயிரப் போறியோன்னு.”

“ரெண்டு பேரும் சேந்து ஊழியம் பண்ணுவோம். ஆன்ட்ரூ, சான்ட்ரா தம்பதிகள்னு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிட்டார் படிச்சுட்டு இருக்கேன். கிறிஸ்மஸ்க்கு வர்றப்போ கண்டிப்பா நீ பாடுறதுக்கு நான் கிட்டார் போடப் போறேன்.”

“சரி எனக்கு உங்கிட்ட பிடிச்சது பிடிக்காதது என்னன்னு கேளேன்.”

“உனக்கு எங்கிட்ட பிடிச்சது என்ன? பிடிக்காதது பத்தி இப்போ சொல்ல வேண்டாம்.”

“உண்மையிலேயே சொல்றேன், சாமுவேல் அம்மா, அன்னாள் மாதிரி எனக்காக ஜெபம் பண்ணிட்டு, நான் சரி சொன்னதுக்கு அப்புறம் இப்படி டீசன்ட் ஜென்டில் மேனா இருக்கிற பாரு. அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

“பின்ன ஏன் சாமியார் அது இதுன்னு சொல்ற?”

“கொஞ்சமாச்சும் கேலி கிண்டல் இல்லன்னா எப்படி?”

*** முதல் பாகம் முடிந்தது ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *